வாழ்க்கையில் நாம் எப்போதும் அனுபவித்திராத விடுமுறையை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். சிலருக்கு இந்த நாட்கள் நிம்மதியை தந்தாலும் இன்னும் சிலருக்கு மிகவும் வெறுப்பை தருகின்றது என்பதே உண்மை. ஏனென்றால் எத்தனை நாட்கள்தான் வீட்டிலேயே அடைந்து கிடப்பது? நீங்கள் இதில் எந்த வகையாக இருந்தாலும், இந்த நாட்களில் வெளியே வருவதை பெரிதும் தவிர்த்து வீட்டிலேயே இருப்பது நல்லது. அதேபோல இந்த கொரோனா விடுமுறை நாட்களில், நாங்கள் இழந்த விடயங்கள் என்னவென்று இன்று பார்ப்போம்.
கொத்தும் ரைஸும்
பகல் சாப்பாடாக ஒரு ரைஸும் இரவு சாப்பாடாக ஒரு கொத்தும் சாப்பிட்டு வந்தவர்கள் ஏராளம். கொரோனா வந்த பின்னர் இவையனைத்தும் இல்லாமல் போய்விட்டது. எப்படியாயினும் திரும்பவும் நமது வாய்க்கு ருசியான கொத்தும் ரைஸும் வந்து விடும் என பலர் நினைத்துக்கொண்டிருப்பர். அந்த நிலையை நாமே உருவாக்க வேண்டும். ஆமாம், அரசாங்கத்தின் திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
மதுபானம்
இதுதான் எமது அண்ணாமார்களுக்கு மிகவும் கவலையான விடயமாக மாறியது. ஆரம்பத்தில் மதுபானக் கடைகள் இடையிடையே திறக்கப்பட்ட போது மதுபானம் வாங்க அனைவரும் முண்டியடித்தனர். பின்னர் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மதுபானக்கடைகளை திறக்கக் கூடாதென அரசாங்கம் உத்தரவிட்டது. இதனால் சோர்ந்து போன நமது அண்ணாமார்கள் பிளாக்கிலும் எடுக்க முயற்சி செய்து அடிவாங்கியும் இருக்கிறார்கள். இப்போது யூடியூப், கூகிளில் பார்த்து சாராயம் என்று செய்து மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் இந்த நாட்களில் நடந்தன. குடும்பமே போனாலும் குடிமட்டும் போகக்கூடாது என்றவர்களும் இருக்கிறார்கள்தானே!
காதல்
கொரோனாவிற்கு முன்பெல்லாம் நேரில் சென்று பார்த்து, கட்டியணைத்து முத்தங்கள் பரிமாறிய காதல் பறவைகள் இன்று மொபைலில் லோங் டிஸ்டன்ஸ்சில் காதலிக்கின்றன. இதனாலே என்னவோ தெரியவில்லை கடைகளுக்கு போனால் ரீலோட் கார்டுகள்கூட கிடைப்பதில்லை. எல்லாவற்றையும் வாங்கி பதுக்கி வைத்துவிட்டார்கள் போலும்.
சலூன் பியூட்டி
தற்கால பெண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய விடயம் இதுவெனலாம். வாரம் ஒருமுறை முடி வெட்ட, கண் புருவங்களை சீராக்க, ஹேர் பியூட்டி, நக பராமரிப்பு என்று சென்றவர்களுக்கு இரண்டு வாரங்களாக சலூன் பக்கமே போக முடியாமல் போயுள்ளது. ஸ்ட்ரைட் ஹேர் இருந்தவர்கள் இப்பொழுது இன்ஸ்டாவில் கர்லி ஹேர் என்று ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.
விளையாட்டு
திரைப்படம், நாடகங்கள், புத்தகங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் வெளியே இறங்கி வெயிலில் விளையாடியது போல வராது. அப்படி விளையாடி பழக்கப்பட்ட நமது நண்பர்களுக்கு இது ஒரு வருத்தமான விடுமுறைதான். இங்கிலாந்துடன் இருந்த சீரீஸும் தடைபட்டது. ஐ.பி.எல். தடைப்பட்டது. கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கும் லீக் ஒஃப் சம்பியன்ஸ், சம்பியன்ஸ் லீக் மற்றும் யூரோ கப் ஆகியவையும் பிற்போடப்பட்டது. தற்போதைய நிலைவரப்படி, UFC 249 EVENT ஏப்ரல் 19 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
பயணம்
வார இறுதியில் இலங்கையின் அழகான இடங்களுக்கு பிரயாணம் செய்து வந்த எமது ட்ராவலர்களுக்குக்கூட இந்த விடுமுறை ட்ராவல்லிங் விடுமுறையாக அமையவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த நாட்களில் இங்கெல்லாம் செல்லவேண்டுமென திட்மிட்டு வைத்த விடயங்கள் எல்லாம் வீணாகியிருக்கும். வீதியின் அமைதியை பார்க்க சந்திக்குக்கூட செல்ல முடியாத நிலையில் பித்து பிடித்து போயிருப்பது உண்மைதான். நிலைமை விரைவில் சிராக வேண்டுமென பிரார்த்திப்போம் மக்களே!
ஓய்வில்லாத விடுமுறை!
முதலாளி எப்பொழுது விடுமுறை தருவார் என்று தெரியாது மீம்ஸ்களை ஷேர் செய்து வந்தவர்கள்கூட, முதலாளி எப்போது வெளிக்கு கூப்பிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அலுவலகத்தில் வேலை செய்தாலும் அவ்வப்போது வெளியில் சென்று எதையாவது சாப்பிட்டோ குடித்துவிட்டோ வருவார்கள். இப்போது 24 மணிநேரமும் வீட்டில் இருந்து மனைவிமார்களுக்கு வேலை செய்து கொடுப்பது, துணி காயப்போடுவது போன்ற வேளைகளில் சோர்வடைந்து போயுள்ளதை சமூக வலைத்தள பதிவுகள் எமக்கு காட்டுகின்றன. சிலருக்கு புகைப்பிடிக்காவிட்டால் பொழுதே போகாது. அவர்களை இந்த கொரோன கட்டுக்குள் வைத்துள்ளது என்றே கூறவேண்டும். அந்தவகையில் இது சிறப்பான சம்பவம்தான்.