கொரோனாவால் மலிந்த பருப்பை வைத்து என்ன செய்யலாம்?

 

பருப்பு இல்லாத சமையல் மிகவும் குறைவு. எத்தனை கறிகள் சமைத்தாலும் அங்கு பருப்புக்கு தனியிடம் உண்டு. தற்போது கொரோனா பாதிப்பினால் மக்கள் வெளியில் செல்ல முடியாது. வேலைக்கும் செல்ல முடியாததால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களில் பருப்பும் ஒன்று. குறிப்பாக பருப்பு ஒரு கிலோ 65 ரூபாய் மானிய விலைக்கு வழங்கப்படுகின்றது. அதனால் பருப்பை இப்போது குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். சரி, இந்த பருப்பை கறி மட்டுமா சமைக்கலாம்? அதன்மூலம் ஃபேஸ் பேக்கூட தயாரிக்கலாம். பருப்புடன் மேலும் சில விடயங்களை சேர்த்து இதனை செய்ய வேண்டும்.

 

வறண்ட சருமத்திற்கு பருப்பும் தயிரும்

 

தேவையான பொருட்கள்

  • மைசூர் பருப்பு – 2 தேக்கரண்டி
  • பால் – 1 தேக்கரண்டி
  • தேன் – 1 தேக்கரண்டி

பருப்பை நன்கு அரைத்து எடுத்து அதில் தயிரையும் தேனையும் சேர்த்து பேஸ்டாக செய்யவும். அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் இளஞ்சூடான தண்ணீரில் துடையுங்கள். சிறந்த பயனைப் பெற வாரத்திற்கு ஒரு முறையாவது இதைச் செய்யுங்கள்.

 

சரும பொலிவிற்கு பருப்பும் தேங்காய் எண்ணெயும்

தேவையான பொருட்கள்

  • மைசூர் பருப்பு – 3 மேசைக்கரண்டி (ஒரு இரவில் ஊறவைக்கப்பட்டது)
  • தூய பால் – 1 மேசைக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

பருப்பை நன்கு அரைத்து எடுத்து அதில் தூய பால் மற்றும் எண்ணெய்யை கலந்துகொள்ளவும். இந்த கலவையை 5 நிமிடங்கள் வரை விரல்களால் தேய்த்து விட்டு, பின்னர் சுமார் 20 நிமிடங்கள் உலர விடவும். இளஞ்சூடான நீரில் கழுவி, இறுதியாக, மொய்ஸ்டரைசிங் கிரீம் பயன்படுத்தவும். சிறந்த பயனுக்கு வாரம் இருமுறை பயன்படுத்தவும்.

 

வெளிறிய சருமத்திற்கு பருப்பு மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்

  • மைசூர் பருப்பு – 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள்த்தூள் – 1 மேசைக்கரண்டி
  • ரோஸ் வாட்டர் – சில துளிகள்

பருப்பை நன்கு அரைத்தெடுத்து அதில் மஞ்சள் தூளையும் சேர்த்து பேஸ்டாக செய்யவும். அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் துடையுங்கள். சிறந்த பயனுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது இதைச் செய்யுங்கள்.

 

பொலிவிற்கும் கரும்புள்ளிகளுக்கும் பருப்பும் கடலை மாவும்

 

தேவையான பொருட்கள்

  • மைசூர் பருப்பு – 2 மேசைக்கரண்டி
  • கடலை மா – 1 மேசைக்கரண்டி
  • யோகட் – 1 மேசைக்கரண்டி

பருப்பை நன்கு அரைத்தெடுத்து அதில் கடலை மா மற்றும் யோகட் கலந்து கொள்ளவும். இந்த கலவையை 5 நிமிடங்கள் வரை விரல்களால் தேய்த்து விட்டு, பின்னர் சுமார் 20 நிமிடங்கள் உலரவிடவும். பின்பு சாதாரண நீரில் கழுவவும். சிறந்த பயனுக்கு வாரம் ஒருமுறை பயன்படுத்தவும்.

 

பிரகாசமான மற்றும் சுத்தமான சருமத்திற்கு பருப்பும் தேசிக்காயும்

 

தேவையான பொருட்கள்

  • மைசூர் பருப்பு – 2 மேசைக்கரண்டி
  • அரைத்த எலுமிச்சை தோல்
  • எலுமிச்சை சாறு – ஒரு சில துளிகள்

பருப்பை நன்கு அரைத்தெடுத்து அதில் அனைத்தையும் போட்டு ஒரு பேஸ்டை செய்யவும். இந்த பேஸ்டை 5 நிமிடங்கள் வரை முகங்களில் தேய்த்து விட்டு, பின்னர் சுமார் 20 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். சிறந்த பயனுக்கு வாரம் ஒருமுறை பயன்படுத்தவும்.

 

நிறப்பொலிவு மற்றும் ஈரப்பதத்தைத் தக்கவைக்க பருப்பு மற்றும் தாஸ்பெத்தி பூ

தேவையான பொருட்கள்

  • மைசூர் பருப்பு – 2 மேசைக்கரண்டி (ஒரே இரவில் ஊறவைத்தல்)
  • தாஸ்பெத்தி பூ – 4
  • ரோஸ் வாட்டர் – சில துளிகள்

பருப்பையும் தாஸ்பெத்தி பூவையும் ஒன்றாக சேர்த்து ப்ளெண்ட செய்து கொண்டு அதில் ரோஸ் வாட்டரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை 15 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்து உலரவிடுங்கள். பின்னர் அதனை நீரினால் கழுவி, இதே போல வாரத்திற்கு ஒரு முறை செய்துகொள்ளுங்கள்.

 

நிறம் மங்கிய சருமத்திற்கு பருப்பும் பாலும்

தேவையான பொருட்கள்

  • பருப்பு – 1 மேசைக்கரண்டி
  • பால் – சில துளிகள்

பருப்பை ப்ளெண்ட செய்து கொண்டு அதில் பால் சிறு துளிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்தக் கலவையை 15 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி உலரவிடுங்கள். பின்னர் அதனை இளஞ்சூடான நீரினால் கழுவிக்கொள்ளுங்கள். இதே போல வாரத்திற்கு ஒரு முறை செய்து கொள்ளுங்கள்.