1918ஆம் ஆண்டில் ஸ்பனிஸ் ஃப்ளூ என்ற கொள்ளை நோயானது உலகளாவிய ரீதியில் சுமார 50 மில்லியன் மக்களைக் கொன்றது. 20ஆம் நூற்றாண்டில் எபோலா மற்றும் நிபா வைரஸ் பரவின. 2000ஆம் ஆண்டுகளில், SARS மற்றும் MERS ஆகிய வைரஸ்கள் சுமார் 30 நாடுகளைத் தாக்கின. இப்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படக்கூடிய COVID-19 என்ற நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள நான்கு நோய்களைக் காட்டிலும் இது குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தாலும், பல நாடுகளுக்கும் பரவி வருவதோடு நாளாந்தம் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. கொரோனா என்பது திடீரென ஏற்பட்ட நோயா என்றால் அதுதான் இல்லை. காரணம் முன்கூட்டியே இதுகுறித்து பலர் கணித்துவிட்டனர். அவர்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
பில் கேட்ஸ்
2015 ஆம் ஆண்டு TED TALK இல், பில் கேட்ஸ் “அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் தயாராக இல்லை” என்று கூறினார். மேலும் Massachusetts MEDICAL SOCIETY மற்றும் NEW ENGLAND JOURNAL OF MEDICINE நடத்திய தொற்றுநோய்கள் குறித்த 2018 கலந்துரையாடலில், “அடுத்த தசாப்தத்திற்குள் ஒரு தொற்றுநோய் ஏற்படக்கூடும்” என்று கேட்ஸ் கூறினார். 1918 ஆம் ஆண்டு தொற்றுநோயால் 50 மில்லியன் மக்களைக் கொன்றது போன்ற ஒரு புதிய காய்ச்சல் வந்து ஆறு மாதங்களுக்குள் 30 மில்லியன் மக்களைக் கொல்லும் என்றும் அவர் கண்டறிந்தார். இதுபோன்ற ஒரு நோய் தோன்றும் வாய்ப்பு நம் ஒன்றோடொன்று இணைந்த உலகில் தொடர்ந்து அதிகரித்து வரும் என்றும் அது இயற்கையாகவே நடக்கும் அல்லது ஆயுதமயமாக்கப்பட்ட நோயாகவும் உருவாக்கப்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
தொற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம்
CNN படி, தொற்று நோய் நிபுணர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் 2005 இல் ஒரு வெளியுறவு செய்தி நூலில், “இது நமது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டம். அடுத்த தொற்றுநோய்க்குத் தயாராகும் நேரம் முடிந்துவிட்டது. நாம் இப்போது தீர்க்கமான நோக்கத்துடன் செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் “அடுத்து ஒரு தொற்றுநோய்க்கு அமெரிக்கா சரியாகத் தயாராக இல்லை” என்று தனது 2017 இல் வெளிவந்த புத்தகமான “DEADLIEST ENEMY: OUR WAR AGAINST KILLER GERMS” புத்தகத்தில் கூறியுள்ளார். தொற்றுநோய் நிபுணர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் கடந்த பத்தாண்டுகளாக உலகளாவிய தொற்றுநோயைப் பற்றி எச்சரித்து வந்துள்ளார். அவர் கூறிய விதமாக அமெரிக்கா 277,522 கொரோனா நோயாளிகளுடன் 7,403 உயிரிழப்புக்களையும் இன்று வரை (ஏப்ரல் 4) சந்தித்துள்ளது.
வைரஸ் மற்றும் இன்ஃபுளூவன்ஸா தொடர்பான நிபுணர் ரொபர்ட் ஜி. வெப்ஸ்டர்
வைரஸ் மற்றும் இன்ஃபுளூவன்ஸா தொடர்பான நிபுணர் ரொபர்ட் ஜி. வெப்ஸ்டர் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் வைரஸ் காய்ச்சல் தொற்றுநோயைப் பற்றி கணித்திருந்தார். “FLU HUNTER : UNLOCKING THE SECRETSOF A VIRUS ” இல், வெப்ஸ்டர் மற்றொரு கொடிய, சீர்குலைக்கும் தொற்றுநோய் சாத்தியமா என்று கேள்வி எழுப்பி, அதற்கு பதிலாகவும் “ஆம்“ இது சாத்தியமானது மட்டுமல்ல, இது ஒரு காலப்பகுதிக்கு மட்டுமே” என்றும் அவர் எழுதியிருந்தார். இதுபோன்ற ஒரு தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படுவதற்கு அல்லது மாற்றப்படுவதற்கு முன்னர் மில்லியன் கணக்கான மக்கள் இறக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். “இயற்கை மீண்டும் 1918 இன் இன்ஃபுளூவன்ஸா வைரஸுக்கு சமமான ஒன்றின் மூலம் மனிதகுலத்திற்கு சவால் விடும்” என்று அவர் எழுதியிருந்தார்.
தொற்றுநோய்க்கான சாத்தியம் குறித்து அமெரிக்க புலனாய்வுக் குழு
சமீபத்திய ஆண்டுகளில் தொற்றுநோய்க்கான சாத்தியம் இருப்பது குறித்து அமெரிக்காவின் புலனாய்வுக் குழுவும் எச்சரித்துள்ளது. CNN இன் டேனியல் டேல்லின் கருத்துப்படி, 2018 ஆம் ஆண்டில், உளவுத்துறை சமூகத்தின் உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டில் “மனிதர்களிடையே எளிதில் பரவக்கூடிய ஒரு வைரஸ் நுண்ணுயிரி பாரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்” என்று எச்சரித்தது. கடந்த ஜனவரியில் இருந்து வந்த 2019 இன் அச்சுறுத்தல் மதிப்பீடு, “அமெரிக்காவும் உலகமும் அடுத்த காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும் என்றும் அல்லது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும், இது பாரியளவில் இறப்பு மற்றும் இயலாமைக்கு வழிவகுக்கும், கடுமையாக உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும், சர்வதேச வளங்களை திணறடிக்கவும், ஆதரவிற்காக அமெரிக்காவிடம் அழைப்புகளை அதிகரிக்கவும் செய்யும்” என்று மதிப்பிட்டது. இதில் பெரும்பாலானவை நிதர்சனமான உண்மை. ஏனென்றால் கொரோனாவால் உலக பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
அமெரிக்காவின் வெளிநாட்டு பேரிடர் உதவி அலுவலகத்தின் முன்னாள் இயக்குனர் ஜெர்மி கோனின்டிக்
ஒபாமா நிர்வாகத்தின் கீழ் USAID யின் அமெரிக்க வெளிநாட்டு பேரிடர் உதவி அலுவலகத்தின் முன்னாள் இயக்குனராக இருந்த ஜெர்மி கோனின்டிக், 1918 கொள்ளை நோய் போன்ற ஒரு வைரஸ் வெளிப்படும் என்றும் கூறியுள்ளார். கோனின்டிக் 2017 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் எழுதியதாவது, “ஒரு கட்டத்தில் மிகவும் ஆபத்தான, அதிக தொற்றுநோயான வைரஸ் வெளிப்படும். அது 1918 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியைப் பாதித்து 50 முதல் 100 மில்லியன் மக்களைக் கொன்ற ‘ஸ்பானிஷ் காய்ச்சல்’ தொற்றுநோயைப் போன்றது” என்றும் அவர் எழுதினார். மேலும் ஜனாதிபதி டிரம்ப் அத்தகைய தொற்றுநோய்க்கு தயாராக இல்லையென அதில் குறிப்பிட்டிருந்தார்.
மாசசூசெட்ஸ் பொது சுகாதார அதிகாரிகள்
ஒரு தசாப்தத்திற்கு முன்னர், 2006 ஆம் ஆண்டு காய்ச்சல் தொற்று பாதுகாப்பு திட்டத்தில் மாசசூசெட்ஸ் பொது சுகாதார அதிகாரிகள் ஒரு புதிய சுவாச நோயால் மில்லியன் கணக்கானவர்கள் நோய்வாய்ப்படக்கூடும் என்றும் கணித்தனர். மேலும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உருவாக்கிய மாதிரிகளின் அடிப்படையில், ஒரு மாநிலத்தில் 1 மில்லியன் மக்கள் வரை வெளிநோயாளர் அடிப்படையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்றும் 80,000 பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் என்றும் அவர்கள் கணித்தனர். நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மருத்துவமனை அமைப்பு அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் கணிப்புகளின்படி 20,000 பேர் வரையளவு இறக்கக்கூடுமென கூறப்பட்டது.
எழுத்தாளர் டீன் கூன்ட்ஸ்சின் 1981 ஆம் ஆண்டு நாவல்
எழுத்தாளர் டீன் கூன்ட்ஸ் 1981 ஆம் ஆண்டு அவரது நாவலில் தொற்றுநோயை முன்னறிவித்தாரா என்பது போன்ற ஒன்லைன் வதந்திகளும் பரப்பப்படுகின்றன. கார்டியனின் கூற்றுப்படி, கூன்ட்ஸின் “தி ஐஸ் ஒப் டார்க்னஸ்” நாவலில் “வூஹான்-400” என்ற வைரஸைக் குறித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றிய நகரம் அதுவாகும். ஆனால் CNN நிறுவனத்திற்கான ஹர்மீத் கவுர் இந்த வதந்தி கோட்பாட்டை முன்வைத்து, உண்மையான கொரோனா வைரஸுக்கும் வூஹான் -400 க்கும் இடையிலான வேறுபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது நாவல் புத்தகத்தில், வைரஸ் ஒரு விஞ்ஞானியால் ஒரு உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்பட்டது மற்றும் 100% இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தது. அந்த இரண்டு விஷயங்களும் உண்மையான கொரோனா வைரஸில் இல்லை.
இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஸ்கொட் இசட் பர்ன்ஸ் திரைப்படம் “CONTAGION”
2011 ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படம் இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஸ்கொட் இசட் பர்ன்ஸ் ஆகியோரால் உருவாகியது. இந்த “CONTAGION” திரைப்படமும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை சர்ர்ரு முன்னறிவிப்பது போல அமைந்துள்ளது. MEV-1 எனப்படும் ஒரு கற்பனையான நோய், வௌவாலானது பன்றிக்கு பரப்பிய பின்னர் அந்த பன்றியை பிடித்த மனிதர் தனது கைகளை கழுவாமல் இன்னொருவருடன் கைகுலுக்கும் போது உலகளாவிய தொற்றுநோயாக மாறுவதாக சித்தரிக்கப்பட்டது. கற்பனையான வைரஸ் 72 மணிநேர தாக்குப்பிடிக்கும் காலம் மற்றும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்ததாக அமைந்தது.
16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மருத்துவர், ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ்
1555 ஆம் ஆண்டில், மைக்கேல் நோஸ்ட்ராடாமஸ் தனது “Les Prophéties” நூலினை வெளியிட்டார். இது சுமார் 1,000 தீர்க்கதரிசன மற்றும் கவிதை குவாட்ரெயின்களின் தொகுப்பாகும் (நான்கு வரி ரைமிங் வசனங்கள்).
“From the vain enterprise honour and undue complaint,
Boats tossed about among the Latins, cold, hunger, waves,
Not far from the Tiber the land stained with blood,
And diverse plagues will be upon mankind.”
இதில் மூன்றாம் வரியில் உள்ள டைபர் இத்தாலியில் உள்ள ஒரு நதி, இது நாட்டையும் அதன் வரலாற்றையும் குறிக்கும்.
‘The sloping park, great calamity,
Through the Lands of the West and Lombardy
The fire in the ship, plague and captivity;
Mercury in Sagittarius, Saturn fading.”
மூன்றாம் வரியில் உள்ள “PLAGUE” மற்றும் “CAPTIVITY” ஆகியவை கொரோனா வைரஸ் மற்றும் லொக்டவுன் என்பவற்றை குறிக்கின்றன என்று ஒரு டுவிட்டர் பயனர் ஊகித்தார். கடைசி வரி, 2020 ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. வூஹான் ஜனவரி 23 அன்று கடுமையான தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டது. இரண்டாம் வரி “மேற்கு மற்றும் லோம்பார்டியின் நிலங்கள்,” ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இத்தாலியை அவை குறிக்கின்றன. (LOMBARDY)
ஆனால் இது எல்லாம் தூய யூகம். கடந்த கால நிகழ்வுகளை நோஸ்ட்ராடாமஸ் சரியாக கணித்துள்ளதாக சிலர் நம்புகிறார்கள். மற்றவர்கள் கொரோனா வைரஸைப் பற்றிய அவரது கணிப்பு தவறான கூற்று என்று கூறுகிறார்கள்.