காலையில் எழும்ப குழந்தை அடம்பிடிக்கின்றதா? கவலையே வேண்டாம்!

 

வீட்டில் இருக்கும் குழந்தைகளை தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க வைக்க தாய்மார்கள் படும் கஷ்டம் நாம் அறிந்ததே. காலையில் கண்ணை திறப்பதே பெரும் கஷ்டம்தான். ஆனால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளை கண் விழிக்க வைப்பதற்கு சில வழிகள் உள்ளன. அவற்றை இன்று பார்ப்போம்.

 

சூரிய ஒளி

குழந்தைகளை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், அறை ஜன்னலைத் திறந்து, அறைக்குள் சூரிய வெளிச்சத்தை படுமாறு வையுங்கள். இது மூளையில் உள்ள செரடோனின் சுரபிகளை தூண்டுகிறது. செரோடோனின் வெளியிடப்படும் போது, ​​அது இயற்கையாகவே குழந்தைகளை விழிக்கச்செய்ய உதவுகிறது. எனவே குழந்தையை முதலில் சூரிய ஒளியின் மூலம் எழுப்ப முடியுமா என்று பாருங்கள்.

 

ஆசையான இசை

வியாதிகளைக்கூட குணப்படுத்தும் இசை ஒரு குழந்தையை படுக்கையிலிருந்து எழுப்ப முடியாதென்றால் அது இசைக்கே அவமானமாகிவிடும். அலாரத்திற்குப் பதிலாக உங்கள் குழந்தை விரும்பக்கூடிய ஒரு பாடலை அல்லது இசையை போட்டு அவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பப் பாருங்கள். இதைவிடுத்து காலையிலேயே ஒரு விரும்பத்தகாத சத்தத்தில் எழுப்பினால் அந்த நாளில் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் அவர்களின் மனநிலையும் அதில் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக விரும்பிய பாடலாக இருந்தால் அந்த  நாளிலேயே அவர்களை நல்ல மனநிலையில் வைத்திருக்க முடியும்.

 

செல்லப்பிராணிகள்

உங்கள் வீடுகளில் நாய், பூனை, முயல் குட்டி போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்தால் அவற்றை பயன்படுத்தி குழந்தையை எழுப்பலாம். குழந்தைகள் அடம்பிடிப்பதென்றாலும் அல்லது தாயிடம் கோபமாக இருந்தாலும், செல்லப்பிராணிகள் மீது கோபப்படமாட்டார்கள். எனவே குழந்தைகளை எழுந்திருக்க வைக்க அவற்றை அவர்களின் அருகில் வைத்து விடுங்கள். பின்னர், அவை கத்த அல்லது உரச ஆரம்பிக்கும் போது, ​​குழந்தைகள் எழுந்திருப்பார்கள். ஆனால் விலங்குகளை மிகவும் சுத்தமாக வைத்திருந்தால் மற்றும் குழந்தைக்கு சுவாச பிரச்சினைகள் இல்லாவிட்டால் மட்டுமே இந்த விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை கவனத்திற்கொள்ளுங்கள்.

 

எழும்பினால் பரிசு

விடியற்காலையில் விருப்பம் இல்லாமல் நச்சரிப்பினால் எழுந்திருக்கும் போது அந்த நாளே அழகில்லாமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம். அதற்கு பதிலாக அவர்களுடன் ஒரு விளையாட்டை விளையாடினால் நல்லது. அதாவது காலையில் சொன்ன நேரத்தில் விழித்தால், குழந்தைகளுக்கு விருப்பமான பொருட்களை அல்லது விருப்பமான உணவை செய்து தருவேன் என்றும் சொல்லி எழுப்புவது சிறந்தது. ஆனால் அதேபோல செய்தால்தான் உங்கள் மீது நம்பிக்கை உண்டாகி அடுத்த நாளும் அதேபோல எழுந்திருப்பார்கள்.

 

தொலைபேசி இருந்தால் எடுத்துவிடுங்கள்

காலையில் நேரத்திற்கு எழும்ப வேண்டுமென்றால் இரவு நேரங்காலத்தோடு தூங்க வேண்டுமே. இதே உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பாசத்தின் காரணமாக மொபைலை கொடுத்தால், தூங்கும்வரை அதனை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. அதனால் தூங்கச் செல்லும்போது மொபைலை நீங்கள் வாங்கி வைத்து கொண்டீர்களானால் அதுவும் நல்லதுதான்.

 

நேரம் கடந்து தூங்கவிடுங்கள்

நாம் எந்தநாளும் குழந்தைககளை நேரத்திற்கு எழுப்பி விடுவோம் என்று தெரிந்துதான் அவர்கள் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்கள். இதே நாம் ஒரு நாள் எழுப்பாமல் விட்டுவிட்டால் அவர்களுக்கே தெரிய வரும் நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்று. ஆனால் இந்த நாட்களில் நேரங்காலத்தோடு எழும்பியும் அவர்களுக்கு பிரயோஜனம் இல்லாவிட்டாலும், காலையில் எழுந்தால் அந்த நாளில் சோர்வு அதிகமாக இருக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

தாய்மாரின் கை பக்குவம்

மேலே கூறிய எந்த காரணம் வந்தாலும் ஏன் பூகம்பமே வந்தாலும் எழும்பாத சில செல்லங்கள் எங்கள் வீடுகளில் இருப்பது உண்மை தானே. அதனால் அவர்களுக்கு ஸ்பெஷலாக இருப்பது எமது நாட்டு தாய்மாரின் கை பக்குவமாகும். ஆம், அகப்பையை எடுத்து வந்து இரண்டு அடி கிடைத்தால் தானாகவே எழுந்துவிடும் வளர்ந்த குழந்தை. அதற்காக குழந்தையை நோகடித்துவிடாதீர்கள். பச்சிளம் குழந்தையாக இருந்தால் அவ்வாறு செய்துவிடாதீர்கள்.