கொழும்பு மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள்

 

நாங்கள் கொழும்பில் இருந்தால் நமது உறவினர்கள் ஒருவராயினும் கிராமங்களில் இருப்பர். அல்லது நாம் கிராமத்தில் இருந்தால் நமது சொந்தங்களில் சிலர் கொழும்பில் இருப்பர். கொழும்புவாழ் மக்கள் மிகவும் வசதியாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பது இங்கு வந்து சிறிதுகாலம் அனுபவித்துப் பார்த்தால் மாத்திரமே விளங்கும்.

 

வாகன நெரிசல்

ஏனைய மாவட்டங்களை விட அதிகமான மக்கள் தொகையை கொண்ட மாவட்டமே கொழும்பு. அதிக சனத்தொகை என்றால் அதிக வாகனங்களும் இருக்கும். அதிக வாகனங்கள் என்றால் அதிக நெரிசலும் இருக்கத்தானே செய்யும். கொழும்பில் கிழமை நாட்களில் காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் யாரும் அவசரத்திற்கு எங்கும் செல்ல முடியாது. அலுவலகத்திற்கு, பாடசாலைக்கு, வைத்தியசாலைகளுக்கு செல்லும் நேரங்களில் வாகன பயணம் வெறுத்துவிடும். பாடசாலை மற்றும் அலுவலகம் முடியும் நேரமும் அவ்வாறே.

 

குப்பை மற்றும் துர்நாற்றம்

கொழும்பில் குப்பைகளை வீசுவதற்கும் அதனை சரியாக அப்புறப்படுத்துவதற்கும் வசதிகள் இருந்தாலும் சில இடங்களில் அவற்றை அப்புறப்படுத்த முடிவதில்லை. சில இடங்களில் கழிவுநீர் வெளிப்படுவதால் அதன் துர்நாற்றத்தினால் முறையாக அகற்ற முடிவதில்லை. மேலும் சில இடங்களில் அப்புறப்படுத்தப்பட்ட குப்பை லொறிகளும் தொடர்ந்து வருவது குறைவு. இதனால் சில மக்கள் தங்கள் குப்பைகளை வீதி ஓரங்களில் வீசுவதால் அழகான கொழும்பின் அழகு ஓரளவு பாதிக்கவும் செய்கிறது.

 

மரங்களும் இயற்கை காற்றும்

கொழும்பு ஒரு வர்த்தக மையம் என்பதால் பல கட்டிடங்கள் சூழ்ந்திருக்கின்றன. மரங்களை பார்க்கக்கூட விக்டோரியா பார்க்கிற்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் வீதியில் அதிக வாகனங்களின் புகை, அதனால் தூய காற்றைக்கூட சுவாசிக்க முடிவதில்லை. இவற்றை பார்க்கும்போது கொழும்பில் உள்ளவர்களுக்கு கிராமப்புற மக்கள் மீது பொறாமை ஏற்படலாம். ஆமாம், கிராமப்புற மக்கள் பச்சை பசேலென்ற மரங்களை பார்க்கின்றனர். தூய காற்றை சுவாசிக்கின்றனர். தமக்கு இவை கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் இருக்கவே செய்யும்.

 

உறவாடல்

சிறந்த பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் நாட்டுப்புற மக்கள் கொண்டிருப்பர் என்பது பெரிதும் உண்மைதான். இதற்கு உதாரணமாக நீங்கள் ஒரு கிராமவாசியாக இருந்தால் உங்கள் பக்கத்துக்கு வீட்டார் உரிமையோடு மாமா, மச்சான், அண்ணா என்ற சொற்களை பயன்படுத்தியே அழைப்பர். ஆனால் இதுவே நீங்கள் கொழும்பில் வசிப்பவர்களாக இருந்தால் உங்களை மாமா மச்சான் என்று அழைத்தால் ஏதோ உங்களுடன் சம்பந்தம் வைக்க அழைக்கின்றது போல நினைப்பது சாத்தியம்தான்.

 

பணமே வாழ்க்கை

கொழும்பு மக்கள் சகல விடயங்களுக்கும் பணம் செலுத்த வேண்டும். கொழும்பில் உள்ளவர்கள் சில ரம்பை இலைகளைக்கூட பணம் கொடுத்து வாங்க வேண்டும். கிராமங்களில் இவை கேட்பாரற்று வளர்ந்து கிடக்கும். வீட்டில் ஒரு தேங்காய் மரம் இருந்தால், நீங்கள் வீட்டில் தேங்காய் சம்பலையாவது செய்து சாப்பிடலாம். ஆனால் நகர்ப்புற குடியிருப்புகளில், தேங்காய் உமியைக்கூட பணம் கொடுத்து வாங்கித்தான் பூச்செடிக்கு உரமாக போட்டு வளர்க்க வேண்டும். நீருக்கும் பணம், காற்றுக்கும் பணம். பணமின்றேல் வாழ்க்கையில்லை. இதுதான் கொழும்பு வாழ்க்கை.

 

வீட்டுப்பயிர்ச்செய்கை

கொழும்பில் தாவரங்களை வளர்க்க பெரிதாக இடமில்லாவிட்டாலும்கூட, இருக்கும் இடத்தில்கூட ஒருசில தாவரங்களை வளர்க்க மாட்டார்கள். ஆனால் இதே நீங்கள் கிராமத்தில் பார்த்தால் நிச்சயமாக குறைந்தது உங்கள் வீட்டில் ஒரு தென்னை மரமாவது இருக்கும். அதுவும் இல்லாவிட்டால் பூக்கன்றாவது  இருக்கும். கொழும்பில் உள்ளவர்களுக்கும் அதேபோல மரங்களை, செடிகொடிகளை வளர்க்க ஆசையாக இருந்தாலும் எல்லோருக்கும் அது சரியாக அமைவதில்லை.