இடுப்புவலியை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்

 

வாழ்வில் ஒரு தடவையேனும் முதுகு வலி ஏற்படாத ஒருவரையும் இந்த உலகில் காண முடியாது. பெரும்பாலும் அதில் இடுப்பு பகுதியே பெரும்பாலானோருக்கு அதிக வலியை தருகிறது. இந்த நிலைமைகள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். முதுகுவலி முதுகெலும்புக்கு மேலதிகமாக வயிறு, சிறுநீரகம் என்பவற்றை நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டது. எனவே என்ன பழக்கவழக்கங்கள் காரணமாக முதுகுவலி வருகிறது என்றும் பார்ப்போம். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்து மொபைலையும் டிவியையும் தொடர்ந்து இருந்த இடத்திலேயே இருந்து பார்த்து வருவதாலும் முதுகுவலி வரக்கூடும். அப்படி வராமல் இருக்க வேண்டுமென்றால் வீட்டுப்பெண்மணிகளுக்கு ஏதாவது வேலையை செய்து கொடுப்பதாலும் தப்பிக்கலாம்.

 

புகைத்தல்

புகைபிடித்தல் மூலம் உயிர்கொல்லியான நிகோடின் எமது உடலுக்குச் சென்று சீரான இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. மேலும் நிகோடினால் தசை பலவீனமடையும் அபாயம் உள்ளது. சிகரெட் புகைப்பதால் எலும்புகளுக்கு செல்லும் கல்சியம் தடைபடுகிறது. இதனால் எலும்புகளின் வலிமை பாதிக்கிறது. சிகரெட்டைப் புகைக்கும் வயதானவர்களுக்கு ஒஸ்ரியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனுடன், சிகரெட்டுகள் நுரையீரலை பலவீனப்படுத்தி ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்லும்.

 

ஹை ஹீல்ஸ் எனப்படும் உயரமான பாதணி

பொதுவாக உயரமான பாதணிகளை அதிகம் அணியும் பெண்களுக்கு முதுகுவலி ஏற்படுவதுண்டு. தன்னை மற்றவர்களிடத்தில் அழகாகவும் உயரமாகவும் காட்டிக்கொள்வதற்கு இவ்வாறு உயரமான பாதணிகளை அணிகின்றனர். ஆனால் இந்த பாதணி கால், இடுப்பு பகுதி மற்றும் முதுகின் தசைகள் மற்றும் எலும்புகளுக்கு தேவையற்ற அழுத்தத்தை அளிக்கிறது. இலங்கை போன்ற ஒரு நாட்டில், பொதுப் போக்குவரத்தில் நீண்ட தூரம் செல்ல வேண்டிய பெண்கள் ஹை ஹீல்ஸ் எனப்படும் உயர பாதணியை அணிந்து சிரமப்படுகிறார்கள். தொடர்ந்து அணியாமல் எப்போதாவது அணியுங்கள். அல்லது சாதாரண பாதணியை அணிந்து சென்று, தேவையான இடத்தில் மாத்திரம் உயரமான பாதணியை அணிந்து கொள்ளுங்கள்.

 

பாரம் தூக்குதல்

10 கிலோவுக்கு மேல் நீங்கள் பாரம் தூக்குவதானால் அதனை சரியான முறையில் தூக்கவேண்டும். இல்லாவிட்டால் முதுகுவலி ஏற்படலாம். படத்தில் உள்ளவாறு பின்னால் வளைந்து, ஒரே நேரத்தில் எடையை உயர்த்துவது முதுகெலும்புக்கு வீண் சிரமத்தை கொடுக்கும். ஆகவே சரியான முறையில், இடுப்பை வளைத்து, கால்களை மடக்கி, எடையை உயர்த்தவும்.

 

இருக்கை முறை

முன்பே நாம் கூறியது போல ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் முதுகுவலி வரும் வாய்ப்பு அதிகம். நாம் வேலை செய்யும் போது ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கின்றோம். இதனால் முதுகுவலி, இடுப்புவலி போன்றவை தானாகவே ஒட்டிக்கொள்ளும். சில நேரங்களில் அமர்ந்தவாறே சிலர் தூங்கவும் செய்கிறார்கள். அதுவும் முதுகுவலிக்கு காரணமாக அமையும். தூக்கம், சரியான இருக்கை முறை, நடைபயிற்சி, ஓடுதல் என எதுவாக இருந்தாலும் முறையாக செய்யாவிட்டால் சிரமம் உங்களுக்குத்தான்.

 

எடை , உயரம் மற்றும்  உணவு பற்றிய கவனமின்மை

உடல் எடை பற்றி சரியான அவதானம் இல்லாவிட்டாலும் முதுகுவலி ஏற்படலாம். அதாவது போதிய உயரம் இன்றி அதிக எடை போட்டு இருந்தாலும் அதிக எடையை தாங்க முடியாமல் முதுகெலும்பு வலியை ஏற்படுத்தும். அதேபோல இதற்கு அடுத்த பக்கமாகவும் குறைந்த எடையில் அதிக உயரத்தை கொண்டாலும் பிரச்சினைதான். அதனால் உணவு உட்கொள்ளும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும்.