இவ்வுலகில் யாரும் கனவிலும் நினைத்து பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் கொரோனா என்ற ஆட்கொல்லி நோய் இன்று மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கின்றது. உலகளவில் இன்றுவரை 126,000இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. மக்கள் தமது வீட்டிலேயே கைதிகளை போல அடைந்து கிடக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களை இதற்கு முதல் சினிமாவில் மாத்திரமே பார்த்திருப்போம். எமது வாழ்வில் வரும்போது அதனை எதிர்கொள்ள சிரமப்படுகிறோம். வீட்டிற்குள் வாழும் இந்த நிலை இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடருமென கூறமுடியாது. ஆனால், அனைவரதும் நன்மைக்காக நாம் இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது அவசியம். அவ்வாறான காலத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய சில வழிமுறைகள் பற்றி இன்று சில தகவல்களை கொண்டுவந்துள்ளோம்.
எளிய உணவு முறை
இலங்கையர்கள் என்றும் வயிற்றுக்கு வஞ்சகம் செய்து குறைவாக சாப்பிட்ட மாட்டார்கள். ஆனால் அந்த பழக்கத்தை இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கொண்டிருப்பது நல்லதல்ல. இலங்கைக்கு பருப்பு மற்றும் கோதுமை மா போன்ற பொருட்களை கொண்டுவரும் கப்பல் போக்குவரத்தை, தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. இப்போது சாப்பிட தேவையானளவு உணவுகள் இருந்தாலும் தேவைக்கதிகமாக செலவு செய்து சாப்பிடக்கூடாது. மேலும் இந்த சந்தர்ப்பங்களில் ஜிம் போன்ற உடற்பயிற்சி நிலையங்களும் மூடியிருப்பதால் அதிகமாக சாப்பிட்டு பின்னர் எடையை மீண்டும் குறைக்க சிரமப்படாதீர்கள். ஆகையால் மிகவும் எளிமையான உணவு வகைகளை சாப்பிடுங்கள்.
சமூக ஊடகங்களின் பயன்பாடு
வீட்டிலேயே இருக்கும் எமக்கு சமூக ஊடகங்களே ஆறுதலாக மாறியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நண்பர்களையோ உறவினர்களையோ பார்க்க முடியாது. அவர்களுடன் தொலைவில் இருந்து இதன் மூலம் பேசலாம், நீங்கள் சோம்பலாக இருக்கும்போது யூடியூப்பில் ஒரு பாடல் வீடியோவைப் பார்த்து மகிழலாம். எனவே பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் அதில் முன்னணியில் உள்ளன.
ஆனால் இப்போதெல்லாம் நாம் சமூக ஊடகங்களில் இருப்பதை விட அதில் பரப்பப்படும் தகவல்கள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம். இனவெறியை பரப்ப உதவாமலும், ஆதாரமற்ற செய்திகளை புறக்கணித்தும், சமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வோடு பயன்படுத்த வேண்டியதும் அவசியம்.
பணத்தை கவனமாக செலவு செய்தல்
உண்மையில் இது அனைவருக்கும் கடினமான நேரம். தனியார் துறையில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் இன்னும் ஊதியம் பெறவில்லை. பெரும்பாலான மக்களுக்கு, அடிப்படை சம்பளம்தான் கொடுக்கப்படுகிறது. மேலதிக சலுகைகள் இல்லை. இந்த நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கும் சரியாக தெரியாது.
தமக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கு கொண்டுவருவோர் கூடிய கட்டணம் வசூலிக்கிறார்கள். அத்தோடு டோர் டெலிவரிக்கும் கட்டணம். பணம் அதிகம் செல்வதனால் தேவையற்ற கொள்வனவுகளை நிறுத்திவிட்டு, முடிந்தவரை சேமிக்கவும்.
அரசின் உத்தரவை மதிக்கவும்
நாட்டின் சட்டத்தை மதிக்கவும். அது எப்போதும் செய்ய வேண்டிய விடயம். ஆனால் முன்னரைவிட இந்த சந்தர்ப்பங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் ஊரடங்கு உத்தரவு போன்ற விஷயங்கள் இப்போது எமது சொந்த பாதுகாப்பிற்காக பிறப்பிக்கப்பட்டவை. வெளியே செல்ல வேண்டுமானால், எங்களைப் போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இந்த அபாய சூழலை எதிர்கொள்வது மிகவும் கடினம். எனவே, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த எமது அரசாங்கத்திற்கு நாம் அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டும். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.
சரியான செய்தியை கண்டறியவும்
கொரோனா நெருக்கடியை போலவே, தேவையற்ற போலி செய்திகளும் ஆங்காங்கே பரவி வருகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் பக்கங்களை பிரபலப்படுத்திக்கொள்ள இவ்வாறான விடயங்களை கையாள்கின்றன. ஆனால் பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில், எல்லாவற்றையும் அறிந்து அவற்றில் உண்மையானவற்றை கண்டுபிடிப்பதே எங்கள் பொறுப்பு. உண்மையா பொய்யா என கண்டுபிடிப்பதற்கு முன்பு பேஸ்புக்கில் எதனையும் பகிரக்கூடாது. வாட்ஸ்அப்பில் வந்த செய்திகள் உண்மைதானா என்று நன்றாக பாருங்கள். ஏனென்றால், ஒரு தவறான செய்தி திருப்பி நமக்கே தீங்கு விளைவிக்கலாம். எனவே நம்பகமான தேசப்பற்றுள்ள இனப்பாகுபாடு அற்ற வலைத்தளங்களிலிருந்து எப்போதும் செய்திகளைக் கேட்பதே மிகச் சிறந்தது.
பழைய பொழுதுபோக்குகள் மீண்டும்
வீட்டில் அடைந்திருப்பது சற்று கடினமாக விடயம்தான். இப்பொழுதே இடுப்பு வலி வரத்தொடங்கி விட்டதென பலர் குமுறுகின்றனர். அப்படி இடுப்பு வலி வரக் காரணம் என்னவென்பதை இந்த பதிவில் பாருங்கள். கிழமைக் கணக்கில் நாம் இதுவரை வீட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கவில்லைதானே? ஆகையால் சற்று சிரமமாக இருக்கலாம். ஆகவே பழைய பொழதுபோக்குகளை செய்யுங்கள். அதற்கென்று வெளியே செல்ல முடியாது. பழைய கேரம் போர்ட், கார்ட் பெக் இவற்றை எடுத்து விளையாடலாம். புத்தகங்களைப் படிக்கலாம். சில திரைப்படங்களைப் பார்க்கலாம். சில தோட்ட வேலைகளையும் செய்யலாம். ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குகளைப் பற்றி நாங்கள் முன்பு பேசிய இந்த கட்டுரைப் பாருங்கள். எப்படியிருந்தாலும், வீட்டில் இருப்பதுதான் முக்கியம்.
ஒருவருக்கொருவர் உதவுங்கள்
முன்னரை விட எல்லோரிடமும் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிற்குச் சென்று உதவ முடியாது. ஆனால் எப்போதும் அடுத்தவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு நடந்து கொள்ளுங்கள். வறுமையான ஒரு குடும்பத்திற்கு மளிகை சாமான்களை வாங்கிக்கொடுங்கள். அல்லது இல்லாவிடின் பணமாக கொடுக்கலாம். நாம் எழுந்து நின்று உதவி செய்ய வேண்டிய காலம் இது. இவை அனைத்தையும் செய்வதற்கான மனம் உங்களிடம் இருக்கவேண்டும். பெருமைக்காகவும் பிரபலப்படுத்திக்கொள்வதற்காகவும் அவ்வாறு செய்யாதீர்கள்.
சிலர் வறிய குடும்பங்களுக்கு பொருட்களை கொடுக்கும் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளதை காண்கிறோம். இவ்வாறான கீழ்த்தரமான விடயங்களால் பசியுடன் உள்ளோர், தேவையுடையோர்கூட உதவியை பெற விரும்பாமல் கஷ்டத்துடன் வாழ்கின்றனர். காரணம் அவர்களுக்கு பசியை விட தன்மானம் பெரியது.
உண்மையில் அவர்கள் தேவையுடையோர்களே தவிர பிச்சைக்காரர்கள் அல்லர்.