கர்ப்பகாலத்தில் சமூகத்தில் உலாவும் மூடநம்பிக்கைகள்

 

பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வாழ்நாளில் முக்கியமான நாள். அத்தோடு, தனது பாதுகாப்பு, ஆரோக்கியம் என்பவற்றில் அதிகம் கரிசனை செலுத்தவேண்டிய காலம். தாயின் ஒவ்வொரு செயற்பாடும் குழந்தையை சார்ந்ததாக இருப்பதை நாம் காண்கின்றோம். உணவு, பயணங்கள் எதுவும் குழந்தையை அசௌகரியத்திற்கு ஆளாக்கிவிட கூடாதென பெற்றோர்கள் விரும்புவர். அதே நேரத்தில் வீட்டின் மூத்தோர்களிடமிருந்துகூட சில அறிவுரைகள் கிடைக்கும். ஆனால் முன்னோர்கள் மத்தியில் சில மூட நம்பிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. ஆகவே கேட்கும் விடயங்கள் அனைத்தும் உண்மையா என்பதை சிந்தித்து செயற்படுவது உங்கள் கைகளிலேயே உள்ளது.

 

ன்னாசியும் பப்பாளியும்

கர்ப்ப காலத்தில் ஒரு சாப்பாட்டு பட்டியலையே பெரியோர் வைத்திருப்பார்கள். அதில் முதலாவதாக அன்னாசி உள்ளது. உண்மையில் அன்னாசிப்பழத்தில் ப்ரோமைலின் என்ற நொதி உள்ளது. இந்த நொதி திடீர் இரத்தப்போக்கை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பாலான நொதி அன்னாசிப்பழத்தின் நடுவில் உள்ளது. அதனால் ஒரு தடவை உண்ணும் அன்னாசிப்பழத்தின் அளவு கர்ப்பிணியை பாதிக்காது. ஆனால் அன்னாசியானது கர்ப்பிணித் தாயின் வைட்டமின் சி, ஃபோலேட், இரும்பு, மெக்னீசியம் போன்ற தினசரி ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பழமாகும். எனவே பழுத்த அன்னாசிப்பழத்தை அளவாக சாப்பிட நீங்கள் பயப்படக்கூடாது.

கர்ப்பகாலத்தில் தவறவிடக்கூடாத மற்றொரு உணவு பப்பாளி. பழுக்காத பச்சை பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் நீங்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது. ஆனால் பழுத்த பப்பாளிப்பழத்தில் லேடக்ஸ் இல்லை. ஆகவே தவறாது எடுத்துக்கொள்ளுங்கள்.

 

தாயின் எடை

கர்ப்பம் என்று வரும்போது, ​​பல வயதான பெரியவர்கள் புதிய தாயை அதிகமாக சாப்பிடுமாறு சொல்வார்கள். முன்னதாக, குழந்தை வளர தாயின் எடை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கர்ப்பிணித்தாய் தனது உடல் சக்திக்கு தேவையான அளவு சாப்பிட்டால் போதும் என்றும், தாயின் எடை அதிகரிப்பும் குழந்தையின் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். தாய் தேவையில்லாமல் அதிக எடை கொண்டவராக இருந்தால், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது பிற சிக்கல்கள் ஏற்படலாம். எனவே சிசுவுக்கும் சேர்த்து சாப்பிடுவதற்கு பதிலாக சீரான உணவை உட்கொள்வது நல்லது.

 

வீடு கட்டக்கூடாது

மற்றொரு பிரபலமான நம்பிக்கை என்னவென்றால், நீங்கள் கர்ப்ப காலத்தில் வீடுகளை கட்டக்கூடாது. முன்னெல்லாம் தர்க்கரீதியாக, இது சரியாகவே இருந்தது. ஏனெனில் வீடு கட்டுவது ஒரு குடும்ப தொழில். ஒரு கணவன் தனது மனைவியுடனும், நெருங்கிய நண்பனுடனும் கிராமத்தில் ஒரு வீட்டைக் கட்டும்போது, ​​மனைவிக்கு சமைப்பது, சரியாக உதவி செய்வது, தேங்காய் கிளைகளைக் கண்டுபிடிப்பது, உலர்த்துவது போன்ற பல வேலைகள் உள்ளன. இது வயிற்றில் உள்ள குழந்தைக்கு இடைஞ்சலாக இருக்கவும் கூடும். ஆனால் தற்போது வீடுகளை கட்டுவதற்கு அதற்கென ஆட்கள் இருக்கின்றனரே. ஆனால் வீடு கட்டுமான பணிகளில் சத்தம், தூசி மற்றும் பலவற்றில் இருந்து கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.

 

முட்டைகளை உடைக்கக்கூடாது

கர்ப்பிணித்தாய் உள்ள வீட்டில் முட்டைகளை உடைக்கக்கூடாது. முன்னெல்லாம் இந்த கதை உண்மையாக இருக்கலாம். ஒரு பழுதடைந்த முட்டை திடீரென உடைந்தால், அது அந்த கர்ப்பிணியை சங்கடத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் இப்போது சந்தையில் பண்ணை முட்டைகளுக்கு இந்த கதை பொருந்தாது. இதனால் முட்டைகளை உடைப்பது வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

 

என்ன குழந்தை?

இது இன்னொரு மூடநம்பிக்கை. தாயின் தோற்றத்தையும் வயிற்று வடிவத்தையும் பார்த்த பிறகு, இது பெண் குழந்தைதான் அல்லது ஆண் குழந்தைதான் என்று பலர் கூறுகிறார்கள். அவை அனைத்தும் வெறும் கதைகள். அப்படி அது உண்மையானால், நீங்கள் மருத்துவமனைகளுக்கு இவ்வளவு பணம் செலவிட வேண்டியதில்லை. தாயின் மாற்றங்கள் அவரது உடலின் ஹோர்மோன் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.

 

சலூன் செல்லக்கூடாது

கர்ப்ப காலத்தில் சலூனிற்கு செல்வது நல்லதல்ல என்று சலூன் சென்று பழகிய நமது நவீன தாய்மார்களிடம் பழைய காலத்து தாய்மார்கள் சொல்வார்கள். இது 100% உண்மை இல்லை. கர்ப்ப காலத்தில் சலூனிற்கு செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. புருவம் மற்றும் முடி வெட்டுதல் போன்ற வெளிப்புற பராமரிப்பு பரவாயில்லை. ஆனால் முடி ஸ்ட்ரைட் அல்லது கலரிங் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

 

ஆடையில் கவனம்

கர்ப்ப காலத்தில் அணியும் உடை பற்றியும் ஒரு தவறான புரிதல் உண்டு. தாய்மார் சட்டை (frock) மாத்திரமே அணிய வேண்டுமென கூறுவார்கள். பேண்ட் அதாவது காற்சட்டை அணிய கூடாதென்பார்கள். இது தவறான கருத்து. நமக்கு பிடித்த உடைகளை அணிந்துகொள்ள முடியும். ஆனால் அவை லேசாக இருப்பது நல்லது. இப்போது ஒட்டும் இலகுரக பேன்ட், அல்லது மகப்பேறு பேன்ட் விற்பனைக்கு உண்டு. அவற்றை அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் கறுப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது என்ற கதையும் உண்டு. கறுப்பு நிறம் அதிக வெப்பத்தை உறிஞ்சி, தாயும் குழந்தையும் சூடாக இருக்கலாம். ஆனால் A/C அறையில் அல்லது சூடாக இல்லாத எங்காவது இருப்பார்களேயானால் ஆடையின் நிறம் பற்றி கவலை தேவையில்லை.