முகத்திற்கு அழகுசேர்க்கும் பற்களை பாதுகாப்பது எப்படி?

 

முகத்திற்கு அழகுசேர்ப்பதே சிரிப்புதான். அவ்வாறு சிரிக்கும்போது தெரியும் பற்களை அழகாகவும் சுத்தமாகவும் பராமரிப்பது அவசியம்தானே? அதுமட்டுமா? “பல்போனால் சொல் போச்சு” என முன்னோர்கள் கூறுவார்கள். ஆமாம் எமது பேச்சின் உச்சரிப்பை திருத்தமாக வெளிக்கொணர்வதும் பற்களே. ஆகவே அதனை பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது. அனைவருமே தத்தமது பற்களை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அனைவரும் பற்களை நேசிக்க ஒரு காரணம், பற்கள் அவர்களின் வெளிப்புற தோற்றத்தின் அழகை அதிகரிக்க செய்யும். அதாவது, பல் ஒழுங்காக இல்லை, அல்லது இடையிடையே பற்கள் இல்லாவிட்டால், அது தோற்றத்தையே மாற்றுகிறது. இவை எல்லாவற்றையும் விட பற்சுகாதாரம் நமது ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். பல் இல்லாமல் எப்படி உணவை மென்று சாப்பிடுவது? எனவே, பற்களை பாதுகாக்க சிறு வயதிலிருந்தே சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

 

பல் துலக்குதல்

பல்துலக்க வேண்டும் என்பது சிறுவயதில் இருந்தே எல்லோருக்கும் அறிவுறுத்தப்பட்டு வரும் விடயம். ஒரு நாளைக்கு இரு தடவைகள் பல்துலக்குவதால் நாம் பெறக்கூடிய நன்மைகள் ஏராளம். ஒரு நாளில் உள்ள 24 மணித்தியால நேரத்தில் 10 நிமிடங்கள் ஒதுக்கி பல்துலக்க சிலருக்கு மிகவம் கஷ்டம் அதற்கு நேரம் ஒரு காரணமல்ல. சோம்பேறித்தனமே இதற்குக் காரணம். அதனால் இன்றிலிருந்தாவது அதனை மனதிற்கு எடுத்து காலையிலும் மாலையிலும் பல் துலக்குங்கள். இரவு நேரத்தில் சாப்பிட்டு சில நிமிடங்களின் பின்னர் பல்துலக்குங்கள். பல் துலக்குகிறோம் என்ற பெயருக்காக செய்யாமல், அதற்கு ஒரு முறையுண்டு. அவற்றை அறிந்து பல்துலக்குவது அவசியம்.

 

பல் துலக்குவது எப்படி?

பற்களை பாதுகாக்க பல் துலக்குவது அவசியம் என்பதை போலவே சரியான முறையில் பல் துலக்குவதும் அவசியம். ஏனெனில் சரியாக பல் துலக்காவிட்டால் ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்ல, பன்னிரண்டு முறை பல் துலக்கினாலும் பயனேதும் இல்லை. பல் துலக்கும்போது, ​​மென்மையாகவும் நேராகவும் இருக்கும் டூத்பிரஷை தேர்வு செய்ய வேண்டும். டூத்பிரஷ்ஷின் தூரிகைகள் நொறுங்கி வளையத் தொடங்கும் போது, ​​நீங்கள் ஒரு புதிய டூத்பிரஷ் வாங்க வேண்டும். பல் துலக்கும் போது அதிக அழுத்தம் கொடுத்து தேய்ப்பதால் ஈறுகளுக்குக்கூட பிரச்சினையாக மாறக்கூடும். பற்களைத் துலக்கும் போது முன் பற்கள் மட்டுமல்ல, தாடையின் உட்புற பற்களும் துலக்கப்பட வேண்டும். மேலும் உங்கள் பற்களின் உட்புறத்தை துலக்க வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பின்னர்தான் இறுதியாக, நாக்கை துலக்க வேண்டும். நாக்கே வாயில் உள்ள துர்நாற்றத்தை பிறருடன் பேசும் போது கொடுக்கிறது. அதனால் கட்டாயம் நாக்கையும் துலக்குதல் அவசியம்.

 

புளோரைட் கொண்ட பற்பசை

 

பற்பசைகளை தேர்ந்தெடுக்கும் போது, ​​கடைகளில் விதவிதமாக கலர் கலராக விற்கப்படும் பற்பசைகளை காண முடியும். ஆனால் ஃபுளோரைட் கொண்ட பற்பசையை தெரிவுசெய்ய வேண்டும் என்றே வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது ஒரு மில்லியன் பற்பசைக்கு குறைந்தது 1,000 பாகங்கள் ஃபுளோரைட்  கொண்ட பற்பசையைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பற்பசையில் உள்ள ஃபுளோரைட்டின் அளவு அதன் அட்டையில் போடப்பட்டிருக்கும். ஆகையால் நாம் அணியும் ஆடையைப் போல நிறத்தைப் பார்த்து தெரிவுசெய்யாதீர்கள். நாம் இங்கு குறிப்பிட்ட விடயங்களை அவதானித்து வாங்குங்கள்.

 

டென்டல் ஃப்ளோஸ்

ஃப்ளோஸ் உண்மையில் எங்களுக்கு ஒரு பரீட்சையமற்ற ஒன்றுதான். ஆனால் இதை செய்வதும் பல் ஆரோக்கியத்தின் இன்றியமையாத பகுதியாகும். டென்டல் ஃப்ளோஸ் என்பது மிகவும் மெல்லிய நூல் போன்ற ஒன்று. அதில் ஒரு பகுதியை எடுத்து, பற்களிலிருந்து அனைத்து சிறிய துகள்களையும் அகற்றலாம். பல் மருத்துவர்கள் இதனை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யத்தான் சொல்கிறார்கள். பல் துலக்குவது மட்டும் போதாதா என்றும் நீங்கள் கேள்விகள் எழுப்பலாம். உண்மையில் டூத் ப்ரஷ்களினால் பற்கள் முழுமையாக சுத்தம் அடைவதும் இல்லை. பற்களின் நுண்ணிய இடங்களுக்குள் சென்று இதனால் சுத்தம் செய்ய முடியும். அதனையும் மிகவும் சரியாக செய்யவேண்டும். கீழுள்ள வீடியோவை பார்த்து அதனை தெரிந்து கொள்ளுங்கள்.

 

 

போதுமான நீர்

சிலர் நன்றாக சாப்பிட்டுவிட்டு தேவையான அளவு நீர் குடிப்பதில்லை. அது ஒரு நல்ல பழக்கமும் அல்ல. நன்றாக நீர் அருந்திவிட்டு வாய்களை நன்றாக கழுவவும் வேண்டும். எல்லா நேரங்களிலும் நீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கும் நல்லது தானே. அதே போல இது பல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

 

சீரான உணவு

ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இது ஒரு முக்கியமான காரணியாகும். அதிகமானோர் ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் வாழ்கின்றனர். ஆனால் இந்த கொரோனா அதனை மாற்றியுள்ளமை சிறந்த விடயம். ஆகவே வீட்டுச் சாப்பாட்டையே இன்று அனைவரும் சாப்பிடுகின்றனர். சரி, இந்த ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் அதாவது அதிகமாக சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்குமென வைத்தியர்கள் கூறுகின்றனர். அதனால் நல்ல நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். சிறந்த உணவுப் பழக்கமானது பல் மற்றும் பல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவும்.

 

இனிப்பு உணவுகள் மற்றும் அமில உணவுகள்

இனிப்பு உணவுகள் மற்றும் அமில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த வகை உணவு பற்களுக்கும் நல்லதல்ல. இனிப்பு மற்றும் அமில உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் பல் சிதைவதற்கு வழிவகுக்கும். புகைபிடிப்பதும் பற்சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும். இந்த விடயங்களை நீண்ட காலத்திற்குச் செய்வது உங்கள் பற்களின் ஆரோக்கியத்திற்கு எதிர்காலத்தில் “குட் பாய்” சொல்லே வேண்டி வரும்.

 

பல் வைத்தியர்

மேலே நாம் கூறிய விடயங்களை சரியாக செய்யாத எல்லோரும் கடைசியாக பல்வைத்தியரை நாட வேண்டும். பல் வைத்தியர் என்றதும் அவர் பல்பிடுங்குவார் என சிறுவயதில் இருந்து எமது மத்தியில் ஒரு பிம்பம் காணப்படுகின்றது. உண்மையில் இவர் உங்களது பற்களை பாதுகாக்கும் பணிகளில்தான் ஈடுபடுகிறார். ஆகையால் பயப்படாதீர்கள். அதனால் நீங்கள் வசதி உடையோராக இருந்தால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பல்வைத்தியரிடம் சென்று உங்கள் பற்களை பரிசோதித்துக்கொள்ளுங்கள். அதற்கு வசதியற்றவர்கள் நாம் மேற்கூறிய விடயங்களை பின்பற்றினால் ஆரோக்கியத்தை பேணலாம்.