ஒவ்வொருவரின் பிறப்பு முதல் இறக்கும் தருணம் வரையிலான வாழ்க்கைப் பயணத்தில், நமக்கு அடிக்கடி இன்னொருவரின் அரவணைப்பும் உதவியும் தேவைப்படும். குழந்தையாக இருக்கும் போது எம்மை அரவணைக்கும் தாயின் பாசத்தைக் கடந்து, நம் வாழ்க்கையின் வாலிப தருணத்தில் காதலி அல்லது மனைவியாக வரும் பெண்ணின் அன்பையையும் அரவணைப்பையும் பெறுகிறோம். நம் வாழ்க்கையை வடிவமைப்பதற்கும், நம் வாழ்க்கையை அழகுபடுத்துவதற்கும், நறுமணப்படுத்துவதற்கும் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். அவ்வாறான பெண்கள் பற்றிய பார்வையாக இன்றைய தொகுப்பு அமைகின்றது.
அம்மா
இவ்வுலகின் சகல உயிர்களுக்கும் கிடைக்கும் முதல் பாசம் என்றால் அது அம்மா. அன்பின் உருவாகவே அம்மா காணப்படுகின்றார். நாம் உச்சரிக்கும் முதல் வார்த்தையும் அம்மாதான். சிறு பராயத்தில் நமக்கு ஏதாவது காயமோ வருத்தமோ ஏற்பட்டால் அம்மா என்றே முதலில் அழைப்போம். எங்கள் வாழ்க்கையின் ஆரம்பகால நினைவுகள் தாய்ப்பாலின் வாசனையுடன் கலக்கப்படுகின்றன. எமது ஆரம்ப முன்னேற்றங்களில் பெரும்பாலானவை தாயின் கைகளிலேயே தங்கியுள்ளது. தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பார்கள். ஆம் பிறப்பு முதல் இறப்பு வரை பாசத்தில் துளியளவும் குறைவின்றி எமக்கு வாரி வாரி வழங்கும் மனிதப் பிறவியே அம்மா.
பாட்டி
தாய்க்கு அடுத்தபடியாக எம்மை அரவணைக்கும் பெண்ணென்றால் பாட்டிதான். இவரை அம்மம்மா, அப்பம்மா என்றும் அழைப்பார்கள். பேரக்குழந்தையை கண்டவுடன் இந்த பாட்டிமார் தாமும் ஒரு குழந்தையைப் போல மாறிவிடுவார்கள். தனது முதிர்ந்த புத்திசாலித்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பேரக்குழந்தைக்காக அவள் தாயைவிட எளிதாக ஒரு சிறுமியாக மாறுகிறார். வளர்ந்து பள்ளி செல்லும் பருவத்தில் தாயோ தந்தையோ எம்மை அடித்தால் அவற்றிலிருநது எம்மை பாதுகாக்கும் கவசம் போலவும் மாறுவார். சில சந்தர்ப்பங்களில் எமது சிநேகிதியாகவும் மாறுகிறார். நோய்வாய்ப்பட்டால் இருக்கவே இருக்கும் இவரிடம் ஒரு வைத்தியம், அதுவே பாட்டி வைத்தியம். நிறைய குழந்தைகள் தாய் தந்தையை விட பாட்டிமாரிடமே அதிகமாக ஒட்டிக்கொள்கின்றனர்.
மனைவி
தாய் மற்றும் குடும்பத்தினர் எவ்வளவு நேசித்தாலும், வாலிப வயதை எட்டிய பின்னர் அன்பின் இன்னொரு பக்கத்தைக் காண இவளிடம் முடிகிறது. தாய் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து வரும் அன்பிற்கும் மனைவியிடமிருந்து வரும் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் இடையில் அதிக வித்தியாசம் உண்டு. அதாவது, இரத்தத்தால் இணைந்திராவிட்டாலும் ஒருவரின் வாழ்க்கைக்கு நெருக்கமாக உணரும் மற்றொரு உயிரின் அன்புதான் இது. நமது இளமை பருவத்திலிருந்து முதுமை பருவம் வரை உடல்ரீதியான அன்பிற்கும் உளரீதியான வலிமைக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒரு உறவும் மனைவி உறவுதான். வாழ்வின் நீண்ட பயணத்தில் இருவரும் கைகோர்த்து ஒன்றாக செல்லும் போது ஒருவருக்கு ஒருவருடன் காணப்படும் புரிதலும் பாசமும் காதலும் கணக்கிட முடியாதவை. நமக்கு ஏற்படும் பிரச்சினைகளில் திருமணத்திற்கு பிறகு நமக்கு ஆறுதலாக இருக்கக்கூடிய ஒரு நல்ல உறவாக மனைவி காணப்படுகின்றாள்.
அக்கா
நம் வாழ்க்கையை வடிவமைக்கவும் வளப்படுத்தவும் உதவும் ஒரு பாத்திரமாகவும் அக்கா என்ற உறவுமுறை காணப்படுகின்றது. சில சமயங்களில் ஒரு தாயாக, சிறந்த எடுத்துக்காட்டாக, சில சமயங்களில் ஆசிரியராகவும் நமது வாழ்வில் இடம்பெறுபவள்தான் அக்கா என்பவர். எங்களை எல்லையற்ற அளவில் ஆதரிக்கவும் நேசிக்கவும் செய்யக்கூடியவள். இவள் பெரும்பாலும் வாழ்க்கையில் எமது முதல் தோழியாகவும் இருக்கவும் முடியும். அம்மாவிடமிருந்து ஏதாவது சிறு சிறு குறும்புகளை மறைக்கவும் உதவுபவள்.
தங்கை
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நமது வாழ்வில் அக்காவை விட அதிகம் நமக்கு பிடித்த ஒரு உறவுமுறையாக தங்கை காணப்படுகிறாள். தங்கையின் வருகையுடன், குடும்பத்தில் உள்ள அக்கா அண்ணன்மார்களுக்குக்கூட பொறுப்புணர்ச்சி அதிகரிக்க தொடங்குகிறது. அவளை பாதுகாக்க, அவளை சரியான பாதையில் வழிநடத்த என பல காரணிகளுக்கு இந்த தங்கை உறவுமுறை வித்திடுகின்றது.
ஆசிரியை
தாய் தந்தையரின் அரவணைப்பில் இருந்து அடுத்தகட்டமாக பாடசாலைக்குச் செல்கின்றோம். அங்கு தாயைப் போல அன்பு காட்டி, அத்தோடு கண்டிப்பாக எம்மை வழிநடத்தி பாதுகாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கே உண்டு. அதிலும் குறிப்பாக ஆசிரியைகள் அன்புடன் வழிநடத்துவார்கள். ஒரு குழந்தை நல்ல பண்புகளோடு சமூகத்தில் மாறுவதற்கு ஆசிரியைகள் பக்கபலமாக உள்ளனர். பெற்றோர் வளர்ப்பில்கூட சிறு தவறுகள் நிகழலாம். ஆனால் ஒரு ஆசிரியையின் வளர்ப்பில் தவறுகள் நிகழ்வது மிகவும் அரிது.
அத்தை / மாமியார்
இந்த உறவின் பலனை பெரும்பாலும் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு போன பெண்களுக்கே அனுபவிக்க முடியும். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், நாங்கள் இரண்டாவது தாயை சந்திக்க நேரிடும். கணவனின் அல்லது மனைவியின் தாயையே அவ்வாறு கூறுகின்றோம். பெரும்பாலும் அவரும் எங்களுக்கு ஒரு தாய்தான். திருமணத்தின் பின்னர் எமது நலனில் கவனம் செலுத்தவும் வழிநடத்தவும் தாய் பாசத்தில் ஒரு உறவு இருக்குமாயின் அது அத்தை உறவாகவே இருக்கும். சில சமயங்களில் அவரது அன்பு முழுமையாக எமக்கு கிடைக்காமல் போனாலும் அவரது மனதார்ந்த பிரார்த்தனைகள் நிச்சயமாக இருக்கும். உண்மையில் அத்தை அல்லது மாமியார் என்பது சமூகத்தின் பார்வையில் பெரும்பாலும் மறைந்திருக்கும் ஒரு அன்பான உறவு.