தலைமுடிக்கு ஷாம்பு ஏன் தேவைப்படுகிறது?

 

ஷாம்பு இல்லாமல் குளியலா என்று இன்று பெண்கள் கேட்பது எமக்குத் தெரியும். அந்தளவு ஷாம்பு இன்று முக்கியமாகிவிட்டது. ஆனால் அவ்வாறு பாவிப்பதன் அவசியம் என்ன என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. எனவே கூந்தலுக்கு ஷாம்பு பாவிப்பதன் அவசியம் பற்றி இன்று பார்ப்போம். தரமான ஷாம்புக்களை பாவிப்பதோடு, வைத்தியர் ஒருவரின் பரிந்துரையின் கீழ் உபயோகித்தால் மேலும் சிறப்பு. அடிக்கடி ஷாம்பு பாவிக்கவும் கூடாது. ஆகையால் அளவாக பாவித்து பயன்பெறுங்கள்.

 

எண்ணெய் தன்மையை நீங்கும்

முன்பெல்லாம் பார்க்கும்போது சிலர் குளிக்காமல் தலை முழுக்க வடிய வடிய எண்ணையை பூசிக்கொண்டு வருவார்கள். ஆனால் அவ்வாறு எண்ணெய் பூசாவிட்டாலும் குளிக்காமல் வரும் பழக்கம் சிலரிடம் இன்றும் உண்டு. சிலரின் தலைமுடி இயற்கையாகவே ஒட்டும் தன்மையை கொண்டிருக்கும். சிலர் எண்ணெய் தன்மையையும் கொண்டிருப்பர். இந்த எண்ணெய் தன்மை தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். ஆனால் தேவைக்கு அதிகமாக எண்ணெய் தன்மை இருந்தாலும் பிரச்சினைதான். எனவே ஷாம்புவை தண்ணீரில் கலந்து குளிக்கும்போது பாவிப்பதனால் இந்த தன்மையை நீக்கும். எண்ணெய் மட்டுமல்ல, தூசி போன்றவற்றையும் நீக்கும்.

 

முடி மற்றும் உச்சந்தலையின் சுத்தம்

நாம் வளரும் போது நம் தலைமுடியும் சேர்ந்தே வளரும். தலைமுடியின் தூய்மைக்கு நீர் குளியல் மாத்திரம் போதுமானதல்ல. மேலும் குளிக்கும் போது உச்சந்தலையும் சேர்த்தே சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றால் ஷாம்பு பாவிப்பதே சரியான தீர்வு. மேலும் ஷாம்பு நீர்த்தன்மையாக இருப்பதால் அதனை உபயோகிப்பதும் இலகு. அது தலைமுடியின் வேர்வரை சென்று முடிக்கு ஊட்டமளிக்கும்.

 

நாற்றம் வராமல் தடுக்கும்

இன்று மக்கள் அனைவரும் இரவு பகலின்றி அயராது உழைக்க பழகிவிட்டனர். அதனால் வரக்கூடிய களைப்பினாலும் சோர்வினாலும் வியர்வை வருவது அரிதான ஒன்றல்ல. ஆனால் வியர்வை நாற்றத்தையும் கூடவே அழைத்து வருகிறது. சருமத்தில் வரும் வியர்வையி நாற்றத்தை போக்க சவர்க்காரம், நறுமண திரவியங்கள் உண்டு. அவ்வாறு தலையில் வரும் வியர்வைக்கு தீர்வாக ஷாம்பு காணப்படுகின்றது.

 

பொடுகுத்தொல்லை நீங்கும்

அனைவருக்கும் வரக்கூடிய பெரிய பிரச்சினைதான் இந்த பொடுகுத்தொல்லை. முன்னெல்லாம் பாடசாலைக்கும் வேலைக்கும் செல்லும் போது தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டு செல்வார்கள். இன்றைய காலக்கட்டத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து கொண்டு பகிடுவாரி சென்றால் கேலியாக பார்ப்பார்கள். கேலியை பார்த்தால் பொடுகுத்தொல்லை அதிகரித்துவிடும். இரண்டுக்கும் ஒரே தீர்வு நல்லதொரு பொடுகு எதிர்ப்பு ஷாம்புவாகும்.

 

சவர்க்காரத்தைவிட கரையக்கூடியது

சவர்க்காரத்துடன் ஒப்பிடும் போது ஷாம்பு தலையை கழுவும் போது உறையும் தன்மை குறைந்தது. அதாவது தலையில் சவர்க்காரம் போட்டு கழுவும்போது முடியின் இடைக்கிடையில் சவர்க்காரம் உறைந்து போய்விடும். ஆனால் ஷாம்பு அப்படி உறையாமல் முழுமையாக கரைந்து கழுவிவிடும் தன்மை கொண்டது.

 

கூந்தலின் அழகு

கூந்தலை பாதுகாக்க ஷாம்பு போடுவதாக இருந்தாலும் பெரும்பாலானோர் கூந்தலின் அழகிற்காக மட்டுமே விதவிதமான ஷாம்பு வகைகளை பாவிப்பதுண்டு. காரணம் ஷாம்பு பாவிக்கும்போது கூந்தல் சில்கி தன்மையுடன் காணப்படும்.

 

வலுவாகவும் மென்மையாகவும் இருக்கும்

அனைத்து காரணிக்காகவும் பாவித்துவிட்டு முடியின் வலுவிற்காகவும் மென்மைக்காகவும் பாவிக்காவிட்டால் அர்த்தமே இல்லையே. இந்த காரணியை நாம் குழப்பிக்கொள்ளவும் கூடாது. வலுவாக இருக்கவும் வேண்டும் அதே சமயம் மென்மையாக இருக்கவும் வேண்டும். வலுவாக வைத்திருக்க ஷாம்பு சரியானது, மென்மையாக வைத்திருக்க கண்டிஷனர்தான் பொருத்தமானது. எதுவாக இருந்தாலும் அளவாக பாவித்து பயன்பெறுங்கள்.