வீட்டில் செய்யக்கூடிய விதவிதமான ரொட்டி ரெசிப்பீஸ்

 

இலங்கையில் நாம் பெரும்பாலும் அடிக்கடி சாப்பிடும் ஒரு உணவாக ரொட்டி உள்ளது. இந்தியாவிலும் இலங்கையிலும் ரொட்டி என்கிற பெயரில் பிரபலமாகி இருந்தாலும் வெளிநாடுகளில் ப்லெட்ப்ரெட் என்கிற பெயரில் அதிகம் பிரபலமாகியுள்ளது. தேங்காய் ரொட்டி, போஷாக்கு ரொட்டி  என்றெல்லாம் சாப்பிட்டு இருந்தாலும் இன்று நாம் உங்களுக்கு ப்லெட்ப்ரெட் ரொட்டி உணவுகளில் 5 ரெசிபி எடுத்து வந்துள்ளோம். செய்து சாப்பிட்டு பாருங்கள்.

 

வற்றாளை ரொட்டி

தேவையான பொருட்கள்

  • நன்கு வேகவைத்த வற்றாளைக் கிழங்கு
  • கோதுமை மா – 2 கப்
  • தேங்காய் (விரும்பினால்) – 1/2 கப்
  • சுவைக்கு ஏற்ப உப்பு
  • நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்
  • தேவைப்பட்டால் தண்ணீர்

 

  • வற்றாளைக் கிழங்கை நன்கு மசித்து அதில் கோதுமை மாவை தவிர மற்ற அனைத்தையும் போட்டு நன்கு கலக்கிக் கொண்டு பின்னர் மாவையும் போட்டு கலக்கிக் கொள்ளுங்கள்.
  • ரொட்டி கலவைக்கு தேவையான வகையில் கிளற வேண்டும், தேவை என்றால் சிறிது தண்ணீர் மட்டும் சேர்க்கவும். பின்னர் ரொட்டி சுடுவதைப் போல சுட்டு எடுக்கவும்.

 

சீஸி பிளாட்பிரெட்

தேவையான பொருட்கள்

  • கோதுமை மா – 2 கப்
  • பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
  • சீஸ் வெஜஸ் – நான்கு
  • இரண்டு சிட்டிகை உப்பு
  • தயிர் (மாக்கலவைக்கு தேவை என்றால்)

 

  • சீஸை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நல்ல மிருதுவான கலவை வரும் வரை தேவையானளவு யோகட் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான துணியால் 15 நிமிடங்கள் வரை மூடி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு உருண்டைகளாக செய்து கொண்டு அவற்றை ரொட்டியை போல தட்டி நடுவில் சீஸ் வைத்து மீண்டும் உருண்டை செய்து கொள்ளவும்.
  • பிறகு மீண்டும் தட்டி இளஞ்சூடான தட்டில் வைத்து சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

 

மிஸ்ஸி ரொட்டி

தேவையான பொருட்கள்

  • கோதுமை மா அல்லது ஆட்டா மா – 2 கப்
  • கடலை மா – 1 கப்
  • நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்
  • சீரகம் – 1/4 மேசைக்கரண்டி
  • கடுகு – 1/4 மேசைக்கரண்டி
  • சுவைக்கு ஏற்ப உப்பு
  • தயிர் – 1/2 கப்
  • நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

 

  • அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து நன்கு கலக்கவும். ரொட்டிக்கான பதம் வரும் வரை சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  • 6 சிறிய உருண்டைகளாக செய்து, அவற்றை எண்ணெயால் தடவி ரொட்டி தட்டிக்கொள்ளவும்.
  • எண்ணெய் அல்லது நெய் தேய்த்த ஒரு தட்டில் போட்டு சுடவும்.

 

ஓமானி எக் எண்ட் சீஸ் பிளாட்பிரெட்

தேவையான பொருட்கள்

  • மா – 4 கப்
  • உப்பு – 1 மேசைக்கரண்டி
  • முட்டை – 5
  • 6 தேக்கரண்டி சீஸ் ஸ்ப்ரெட் அல்லது கிரீம் சீஸ்

 

  • ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் மாவு போட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து ஒரு மிருதுவான பதார்த்தம் வரும்வரை கலக்கவும். பின்னர் சுத்தமான துணியால் அதனை மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
  • முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து போட்டு உப்பு கொஞ்சமும் சேர்த்து ஒரு முட்கரண்டி கொண்டு நன்கு கலக்கவும்.
  • பிறகு ரொட்டிக்கலவையை சுட்டு எடுக்கும் போது அதன் மீது சீஸ் தடவி சுடவும். சுடும்போது அதன் மீது முட்டைக் கலவையையும் அதன்மீது போட்டு சுடவும். இவற்றை குறைவான சூட்டில் வைத்தே செய்யவும்.

 

கிரீக் பிளாட்பிரெட்

தேவையான பொருட்கள்

  • மா – 2 கப்
  • உப்பு – 1/2 மேசைக்கரண்டி
  • வெண்ணெய் – 3 1/2 மேசைக்கரண்டி
  • பிரஷ் பால் – ¾ கோப்பை

 

  • பாலையும் பட்டரையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு இளஞ்சூட்டு வெப்பத்தில் சூடாக்கி கொள்ளுங்கள். பிறகு அந்த கலவையை மாவில் போட்டு, உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒட்டும் தன்மையாக இருந்தால், இன்னும் கொஞ்சம் மாவு சேர்த்து கிளறவும். ஒரு லன்ச் ஷீட்டினால் அதை மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
  • பிறகு ஒரு நான்ஸ்டிக் தவாவில் போட்டு பொங்கி வரும் வகையில் சுட்டு எடுக்கவும்.