பாவித்து முடித்த தேயிலையில் இருந்தும் பயன்பெறலாம்

 

குப்பையில் வீசப்படும் பொருட்களையும் பிரயோசனமாக பாவிக்க முடியுமென்றால் அது  அதிஷ்டம் தானே? ஏனென்றால் குப்பைகளினால் சூழல் மாசுபடுதல் அதிகரித்தே வருகிறது. நம்மால் முடிந்தவரை குப்பைகளை குறைத்துக் கொள்வது சூழலுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பு. அதனால் லைபீ இன்று தனது வாசகர்களுக்கு,  குப்பையாக அடிக்கடி வீசக்கூடிய தேயிலையை மீண்டும் பயனுள்ள பொருளாக மாற்ற சில வழிகளை சொல்லித் தரவுள்ளது.

 

வீட்டுத்தோட்டம்

வடிகட்டி பாவித்த தேயிலையை சற்று தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள். பின்னர் அந்த தண்ணீரை வடித்து அவற்றை செடிகளுக்கு ஊற்றுங்கள். இது தாவரங்களில் வரக்கூடிய பூஞ்சணங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. வடித்த தேயிலை இலைகளை தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். வீட்டுத்தோட்டங்களை பாழாக்கும் எலிகளுக்கு தேயிலையின் மணம் பிடிப்பதில்லை. அதனால் அவற்றின் தொல்லையும் குறையும்.

 

துர்நாற்றம் தடுக்கப்படும்

பயன்படுத்திய தேயிலை இலையை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு சிறிய இடத்தில் திறந்து வைக்கவும். அது குளிர்சாதன பெட்டியில் உள்ள தேவையற்ற நாற்றங்களை அகற்ற உதவும். கொஞ்சம் பாவித்த உலர்ந்த தேயிலையை வீட்டிலுள்ள குப்பைத் தொட்டியின் கீழ் வைக்கவும். அது குப்பையிலிருந்து வரும் துர்நாற்றத்தை சமாளிக்கவும் உதவக்கூடியது.

 

மீன் கழுவிய மணம் தடுக்கப்படும்

வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் மீன் ஆகியவற்றை வெட்டிய பின்னர் கையில் வரக்கூடிய துர்நாற்றத்தை அகற்ற ஈரமான தேயிலையை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஈரமான தேயிலை தூளினைக்கொண்டு கைகளை கழுவ வேண்டும். இதனால் இலகுவாக நாற்றங்களை அகற்றலாம்.

 

வீட்டுத்தோட்ட நாசக்கார பூச்சிகளிடம் இருந்து பயிரை பாதுகாப்போம்

எலிகள் தேயிலை இலைகளின் வாசனையை விரும்புவதில்லை என முன்பே கூறியுள்ளோம். பழைய தேயிலை பைகள் அல்லது மீதமுள்ள உலர் தேநீர் மண்டிகள் ஆகியவற்றை எறும்புகள் மற்றும் சிலந்திகள் போன்றவை இருக்கும் இடங்களில் வைக்கவும். அந்த வாசனை காரணமாக, விலங்குகள் அங்கு சேர்ந்து கொள்வதில்லை.

 

சிறந்த கண்டிஷனர்

எஞ்சிய தேயிலையால் தலைமுடிக்கும் பயன் உள்ளது என்றால் சற்று விசித்திரமாகத் தான் இருக்கும். எஞ்சிய வடிகட்டிய தேயிலை மண்டிகளை எடுத்து அதில் சற்று இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி கஹட்டை எடுத்து  கொள்ளுங்கள். தலையில் ஷாம்பு தேய்த்து கழுவிய பின்னர் கண்டிஷனரை போல பயன்படுத்துங்கள். பிறகு தண்ணீரால் நன்கு கழுவிக்கொள்ளவும்.

 

மரத் தளப்பாடங்களுக்கு சிறந்தது

மங்கிய தோற்றம் பெற்ற வீட்டுத் தளபாடங்களின் மீது ஈரமான தேயிலை மண்டியைக் கொண்டு துடைக்கவும். உங்கள் தளபாடங்கள் மற்றும் மரத் தளங்களுக்கு புதிய தோற்றம் கிடைக்கும்.

 

கால்களுக்கு நல்ல மருந்தாக அமையும்

நடுத்தர சூடான நீரில் தேயிலை மண்டி சிறிதளவை போட்டு ஊறவைத்து ஒரு பானையில் இரண்டு கால்களையும் வையுங்கள். இது கால்களில் இருந்து வரும் துர்நாற்றத்தைத் தணிக்கும் மற்றும் சருமத்தை மேம்படுத்தும். இது கீழ் பாதங்களின் சருமத்தை மென்மையாக்குகிறது. விரிசல் மற்றும் உலர்ந்த கால்களை மென்மையாக்க இது ஒரு சிறந்த மருந்தாகும்.

 

டீப்பை ஏர் பிரஷ்னர்

தேநீர் பைகள் துர்நாற்றங்களை நீக்கும் தன்மைகொண்டது என்று முன்பே கூறப்பட்டது. பயன்படுத்திய தேநீர் பையை உலர வைக்கவும். அதில் நீங்கள் விரும்பும் ஒரு நறுமண எண்ணெயைச் சேர்த்து கொள்ளவும். அதை கார்கள், அறைகள் மற்றும் குளியலறைகளுக்கும் வைக்க முடியும். ஒரு ஏர் பிரஷ்னர் போல வாசனையை எளிதாக பரப்பும். வாசனை குறையும் போது, ​​சிறிது நறுமண எண்ணெய் சேர்க்கவும்.