தொல்லியல் சம்பந்தமான விடயங்கள் நாம் பொதுவாக பாடசாலையில் கற்றுக்கொள்ளும் ஒரு பாடமல்ல. இருப்பினும், தொல்லியல் என்பது பலருக்கும் மிகவும் ஆர்வமாக இருக்கும் விடயமாகும். நாட்டில் உள்ள பழைய விடயங்களைப் பார்க்க எவரும் ஆசைப்படுவது வழக்கமான ஒன்றல்லவா? குறிப்பாக இலங்கை போன்ற நீண்ட மற்றும் பிரசித்தி பெற்ற வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டில் நீங்கள் வாழும்போது, தொல்பொருள் மதிப்புள்ள பல இடங்கள் உள்ளன. இந்த தொல்பொருள் பழமைமிக்க தளங்களை பாதுகாப்பது எங்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் செய்யக்கூடிய ஒரு சிறந்த சேவையாகும். அதன்படி, இலங்கையில் வளமான தொல்பொருள் பாரம்பரியம் கொண்ட மற்றும் மக்களால் அதிகம் அறியப்படாத ஒரு சில இடங்களைப் பற்றி இன்று நாங்கள் பேசப்போகிறோம்.
அம்பக்க அம்பலம்
ஆகக்குறைந்தது அம்பக்கே தேவாலயம் என்கிற பெயரைக்கூட அறிந்திடாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் இந்த அம்பக்கே அம்பலம் என்பது அந்த பிரபல தேவாலயம் அல்ல. கண்டி மாவட்டத்தில் குண்டசாலையில், உடுனுவர பிரதேச செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள அம்பக்கே தேவாலயத்திற்கு அருகில் அம்பக்க அம்பலம் அமைந்துள்ளது. இது அம்பக்கே தேவாலயத்தை போன்று பழமையானதென வரலாறு கூறுகிறது. இப்போதைக்கு அந்த இடத்தில் கல் தூண்களும் அடிச்சுவடுகளுமே எஞ்சியுள்ளன. ஆனால் அந்த காலத்தில் அம்பலத்தை கட்டிய மன்னர் நான்காம் புவனேகபாகு, பெரஹெரவை இந்த மண்டபத்தில் இருந்தே கண்டு கழித்துள்ளார். இது “சிம்மாசன மண்டபம்” என்ற பெயரிலும் பிரசித்தி பெற்றுள்ளது.
கலபெத்த அரண்மனை
கலபெத்த ஒரு பாழடைந்த அரண்மனை கட்டிடம். இது மொனராகலையில் உள்ள கலபெத்த கிராமத்தில் அமைந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் மொனராகலை பொத்துவில் வீதியில் இரண்டாவது மைல் இடுகைக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. பொலனறுவை மாளிகை மற்றும் பண்டுவஸ்னுவர மாளிகை போன்றவற்றை போன்ற அம்சங்கள் இங்கு இருந்தாலும், அம்பாறையில் ரஜகள பிரதேசத்தை ஆண்ட ஒரு உள்ளூர் ஆட்சியாளருக்கு சொந்தமான மாளிகையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரு பழைய நீர் அகழி மற்றும் சுவரால் சூழப்பட்ட இந்த மாளிகையில் சிலைமனையின் எச்சங்கள் உள்ளன. அரண்மனைக்கு அருகிலேயே, பளிங்காலான கற்குளம் ஒன்றும் உள்ளது.
மல்வில தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட இடம்
மல்வில எனப்படும் இந்த இடமும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது இளவரசர் சாலியாவால் விஹாரையொன்று கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தளத்தின் உள்ளே ஒரு பாழடைந்த மதிலும், கற்தூண்களும், மூன்று உடைந்த கட்டிடங்களும், புத்தர் சிலையொன்றும், சந்திரவட்டக்கல் மற்றும் காவற்சிலைகளும் உள்ளன. இது வனாதவில்லுவ பிரதேச செயலகத்தின் கரடிபுவ கிராம சேவகர் பிரிவில் உள்ள சாலியபுர கிராமத்தில் அமைந்துள்ளது.
முல்கிரிகல ரஜமஹா விஹாரை
முல்கிரிகல ரஜமகா விகாரை என்று சொன்னால் அனைவரும் அறிவர். இது அம்பாந்தோட்டையின் பெலியத்த கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற முல்கிரிகலவைப் பற்றியதல்ல. முல்கிரிகல என்று வேறு ஒரு தொல்லியல் தளம் உள்ளது. பெயர் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு இடங்களில் வெகு தொலைவில் உள்ளன. நாங்கள் கூறும் முல்கிரிகல புத்தளத்தின் நவகத்தேகமிலுள்ள முல்லிகம கிராமத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி, இந்த விகாரை தப்புல எனும் மன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பின்னர் புதுப்பிக்கப்பட்ட மடாலய வளாகத்திற்கு சொந்தமான தங்குமிடம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர, ஏராளமான பாறை கல்வெட்டுகள் மற்றும் கல் பலகைகள் இந்த தளத்தில் காணப்படுகின்றன.
ராஜகுலவதன ரஜமஹா விஹாரை
இந்த தொல்லியல் பழைமை மிக்க இடம் பொலனறுவை யுகத்தின் கல்யாணவதி ராணியின் காலத்தில் இருந்த முன்னாள் தளபதியால் ஒரு பிரிவெனாவாக கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த விஹாரை குறித்து கோகில சந்தேஷய என்ற இலங்கையின் புராதன கதைகள் பற்றி கூறும் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ராஜகுலவதன விஹாரை வெலிகம நகரில் அமைந்துள்ளது. இது தற்போது வெலிகமவில் உள்ள அக்ரபோதி விகாரையின் ஒரு பகுதியாகும். முன்னாள் அமைச்சர் ஜெனரல் மொண்டேகு ஜெயவிக்ரமவின் மத்தியஸ்தத்துடன் வெலிகம அக்ரபோதி விகாரை மற்றும் ராஜகுலவதான விஹாரயா ஆகியவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலேகடே பழைய சந்தை
இந்த சந்தை பதுளை பண்டாரவளை வழியில் உள்ள பதுளை பொது மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. 1818 ஆம் ஆண்டின் கண்டியன் ஒப்பந்தத்திற்கு பிறகு பதுளையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த சிறப்பு வர்த்தக மையம் இலங்கையின் முதல் சுதந்திர வர்த்தக கட்டிடமாக கருதப்படுகிறது. வெலிஓயாவிற்கு அருகில் கட்டப்பட்டதால்தான் இது வெலேகடே என்று அறியப்படுகிறது. எண்கோண மத்திய முற்றமும், நான்கு நுழைவாயில்களும், சிறந்த கட்டடக்கலை அம்சங்களும் கொண்ட இந்த கட்டிடம் தொல்பொருள் மற்றும் கட்டடக்கலை மதிப்புள்ள இடமாக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
வெல்கம் விஹாரை
இந்த வெல்கம் விகாரை பற்றி பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது பெரும் தொல்பொருள் மதிப்புடைய இடம் என்பதில் சந்தேகமில்லை. இது திருகோணமலையின் கட்டுக்குளம்பத்து பெரியகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பௌத்த வணக்கஸ்தலமாகும். இலங்கையில் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் மிகவும் குறைந்த இடங்களிலேயே காணப்படுகின்றன. அந்த இடங்களில் வெல்கம் விஹாரையும் ஒன்றாகும். இந்த இடம் அக்காலத்து தமிழ் பௌத்தர்களால் புனித யாத்திரைக்கான இடமாக பயன்படுத்தப்பட்டதென கூறப்படுகிறது. பின்னர், பாழடைந்த வனப்பகுதியை அப்பகுதியின் கிராமவாசிகள் நாதனார் கோயிலென அழைத்தனர். தொல்பொருள் ஆய்வாளர் செனரத் பரணவிதான நடத்திய ஆய்வில் இது வெல்கம் விகாரை என்ற பௌத்த புனிதஸ்தலம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்குள் மூன்று இடிபாடுகள், இந்து கோயில்களின் சிலை மற்றும் ஏராளமான கல் கல்வெட்டுகள் போன்றவற்றையும் காணலாம்.