சமுதாயத்தைச் சார்ந்து வாழும் நாம், ஏதோ ஒரு வகையில் எமது செயற்பாடுகளால் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகின்றோம். நாம் நினைக்கும் செயல்களைச் செய்து முடிக்கிறோம். ஆனால் சிலர் செய்யும் தவறான விடயங்கள், சமூகத்தில் பல மோசமான தாக்கங்களை உண்டாக்குகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகின்றோம். இந்த விடயங்கள் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாவிட்டாலும், உண்மையில் இது மோசமான விடயங்களாகும். இவற்றை செய்வதற்கு உண்மையில் மனிதர்கள் வெட்கப்பட வேண்டும். அவ்வாறான விடயங்களை செய்யாதீர்கள்.
அடுத்தவர் பற்றி புறங்கூறுதல்
இப்போதெல்லாம், சமூகத்தில் ஏராளமானோர் அடுத்தவர்கள் சம்பந்தமான விடயங்களைத்தான் அதிகம் தேடுகிறார்கள். ஆணோ பெண்ணோ, இதனை யார் செய்தாலும் மோசமான விடயமாகும். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் சுதந்திரத்தை பற்றி நாம் மதிப்பது போலவே அடுத்தவர்களின் வாழ்க்கையை பற்றியும் நாம் எண்ண வேண்டும். எனவே மற்றவர்களின் விடயங்களைத் தேடுவது சிறந்த பழக்கமல்ல. ஆனால் யாராவது துன்பத்தில் இருக்கும்போது, அவற்றை பற்றி ஆராய்வதும் தேடுவதும் உதவுவதும் இதற்குள் அடங்காது.
வதந்திகளை பரப்புதல்
இதுவும் நாம் முன்பு கூறியதுடன் தொடர்புடைய விடயமாகும். சிலர் மற்றவர்களின் விடயங்களை கேட்டு இரசித்துவிட்டு இருக்கமால் அதனை பிறரிடம் வதந்தியாக பரப்பி சந்தோஷப்படுவார்கள். இதுவும் நாம் கூறும் மிகவும் தீய பழக்கத்தில் ஒன்றாகும். ஒருவரைப் பற்றி தெரியாத விடயங்களைப் பற்றி பேசுவது எவ்வளவு தவறு? ஏனெனில், அது வேறொருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருப்பதால், அதைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருந்தாலும், அவற்றை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டும் வதந்தியாக சொல்லிக்கொண்டும் இருப்பது நல்லதல்ல.
தேவையற்ற விடயங்களில் போட்டி மனப்பாங்கை வளர்த்தல்
போட்டி மனப்பாங்கானது தவறான புரிதல்களால் ஏற்படுகிறது. பிறரிடம் உள்ளவை தம்மிடம் இல்லையே என நினைப்பது நிச்சயம் உங்களை அடுத்த படிநிலைக்கு கொண்டுசெல்லாது. இந்த மாதிரியான போட்டியான மனப்பாங்கு பெண்கள் மத்தியில் அதிகம் உள்ளதென கூறுகிறார்கள். அடுத்த வீட்டில் உள்ளதைவிட பெரிய டிவி, பெரிய கார், ஒரு அழகான பெரிய தோட்டம் போன்ற விடயங்களில் மட்டுமல்லாமல் தமது குழந்தைகளைக்கூட அடுத்த வீட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர்களுக்கிடையில் கூட போட்டி மனப்பாங்கை உண்டாக்கி விடுவார்கள். ஆனால் பாடசாலைக்குள் குழந்தைகள் மத்தியில் கல்விப் போட்டி நிலவுவது நல்லது. ஆனால் நாம் கூறியதைப் போல மற்ற பையனை காயப்படுத்தும் போட்டித்தன்மை நல்லதல்ல. இந்த பழக்கத்தை விட்டு விட்டு முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை முன்பை விட மிகவும் எளிதாக அமைந்துவிடும்.
சுற்றுச்சூழலை நாசமாக்குதல்
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பலர் கற்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த விடயங்களைக் கேட்க மறுக்கும் மக்கள் எப்போதும் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு உங்கள் பங்களிப்பு தீங்கு விளைவிக்குமாக இருந்தால் அது பயனற்றது என்றே கூற முடியும். பெரிய வீர வசனம் பேசித்திரியும் பலரும் வீட்டுக்குப்பைகளை வீதியோரத்தில் சரியான முறையின்றி வீசுவதை நம் அனைவரும் கண்டிருக்க வாய்ப்புண்டு. நீங்களும் அவ்வாறான ஒருவராக இருப்பின் நீங்களும் வெட்கப்பட வேண்டிய நேரமிது. இப்படி சுற்றுச்சூழலை வீணடிப்பதால் நீங்கள் மட்டுமின்றி உங்கள் சந்ததியினருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
அடுத்தவரின் வயிற்றில் அடித்தல்
வணிகத்துறையில் இந்தச் சம்பவம் அதிகளவில் இடம்பெறுகின்றது. உங்கள் வணிகத்தை நியாயமாகச் செய்வதே எல்லோரினதும் எளிய யோசனை. மக்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் தயாரிப்புகளை நியாயமான விலையில் விற்காமல் அதிக விலைக்கு விற்பதனால், அதை விட ஒரு பெரிய ஏமாற்றுச்செயல் எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நியாயமான வருவாயில் உழைப்பது எந்தவிதமான வணிகத்திற்கும் தங்களுக்கும் நல்லது.
மிருகங்களை வதைத்தல்
இன்று பல அமைப்புகள் விலங்குகளைப் பற்றி பேசுகின்றன. மேலும் அவ்வாறே விலங்குகளுக்கு போதிய பாதுகாப்பையும் அளித்து வருகின்றன. ஆனாலும், அடிக்கடி அப்பாவி விலங்குகளை வேண்டுமென்றே துன்புறுத்தும் பல மனித மிருகங்களை பற்றிய வழக்குகளை நாம் அதிகம் காண்கிறோம். கேள்விப்படுகிறோம். ஒரு மனிதனாக உணரும்போது, உயிரினங்களுக்கு பாதுகாப்பை தராவிட்டாலும் பரவாயில்லை. அவற்றை வதைபடுத்தாமல் இருப்பது அவற்றிற்கு நாம் செய்யக்கூடிய பெரிய உதவியாக அமையும். சக மனிதனைவிட மக்கள் அதிகம் பற்றுக்கொள்ளக்கூடிய மதங்களின் பிரசாரங்களில்கூட உயிரினங்களையும் பாதுகாக்கவே கூறப்படுகின்றது.
அடுத்தவர்களின் அழுகையை பார்த்து சிரித்தல்
சமுதாயத்தில் நாம் அதிகம் காணக்கூடிய மிக மோசமான பழக்கங்களில் இதுவும் ஒன்று. தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று நினைக்கும் நபர்களைப் பற்றி மோசமாகப் பேசும் பலரை இந்த சமுதாயத்தில் காண்கிறோம். ஒருவரை தொழில்முறை, சமூக முறைமை, கல்வி அல்லது தனிப்பட்ட காரணங்களால் அவமதிக்குமாறு அல்லது மனதை புண்படுத்தும் விதத்தில் பேசுவது ஒருபோதும் நல்ல மனிதனுக்கு உகந்த ஒரு பழக்கமல்ல என்பதை மனதில் எடுத்து செயற்படுங்கள்.
குறிப்பு : மண்ணில் உள்ளவர்களின் மீது இரக்கம் காட்டாதவரை, விண்ணில் உள்ளவர் நம் மீது இரக்கம் காட்டமாட்டார்.