கொரோனா என்பது பல நாடுகளுக்கும் ஒரு தொற்றுநோய் நெருக்கடி மட்டுமல்ல, தொற்றுநோய் வந்ததன் பின்னர் கடுமையான பொருளாதார நெருக்கடியும் உணவு பற்றாக்குறையும் ஏற்படுத்தியுள்ளது. உலகில் உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள்கூட மறுபுறம் ஓரளவிற்கு குறைந்துவிட்டன. எனவே உலகம் முழுவதும் குழப்பத்தில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்தின் அடிப்படையே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பாக இன்று பார்ப்போம்.
உலக உணவுத் திட்டத்தின் எச்சரிக்கை
உலக உணவுத் திட்டத்தின்படி, உலகளவில் 821 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 135 மில்லியன் பேர் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகம் கொரோனாவிற்கு முன்பு இருந்த நிலை. ஆனால் இந்த கோவிட் -19 தொற்றுநோய்க் காரணமாக பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 130 மில்லியனாக அதிகரிக்கும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள மக்கள் இந்த கொரோனாவால் மேலும் அதிகளவு பாதிக்கப்பட உள்ளனர் என்பது அதிகம் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும்.
பயிர்ச்செய்கைக்கு இருக்கக்கூடிய தடைகள்
பயிர்களை வளர்ப்பது உடன் பசியை ஈடுசெய்யாது. ஆனால் அது பிற்கால நீண்டகால பஞ்சத்திற்கு வழிவகுக்கலாம். இப்போது உணவு நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதற்கு தேவையான இயந்திரங்கள் இன்னொரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பயிரை பாதிக்கும் வேளாண் வேதிப்பொருட்கள் வேறொரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கையில் விதைக்கப்படும் காய்கறி விதைகள்கூட இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே தேவையான பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் விதைகளைக்கூட பிறநாட்டில் இருந்து பெற முடியாதவாறு, உள்நாட்டுப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உலகளாவிய ரீதியில் முடக்கப்பட்டுள்ள நிலையில், இது பயிருக்கான இரசாயனங்கள் மற்றும் விதைகளை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மாற்றுவதையும் தடைசெய்துள்ளது.
அறுவடை நிறுத்தம்
இந்தியா முழுவதும் பூட்டப்பட்டதால், இந்தியாவிலுள்ள சில விவசாய நிலத்தில் தொழில் செய்த தொலைதூர பகுதிகளில் உள்ள விவசாயிகள் தத்தமது வீடுகளுக்குச் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டனர். அவர்கள் குடிக்க நீர் கூட இல்லாமல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வீட்டிற்கு நடந்து செல்வதைக்கூட நாம் இந்த நாட்களில் கேள்விப்பட்டிருக்கக்கூடும். வட இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானில் கோதுமை வயல்கள் உள்ளன. அந்த கோதுமை வயல்களின் அறுவடை ஏப்ரல் மாதத்தில்தான் இருக்கும். இதனால் ஏப்ரல் மாத அறுவடை இந்தியாவைப்போல பாகிஸ்தானிலும் சற்று தாமதமானது. இந்தியாவின் சில பகுதிகளில், அறுவடை செய்வதற்கு குறைவான தொழிலாளர்களே உள்ளனர். இந்த நிலைமை இந்தியாவையும் பாகிஸ்தானையும் போலவே உலக வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கோதுமை அறுவடையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
அரிசியின் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் விலை
இலங்கையில் அரிசி விலை குறித்து சமீபத்தில் பல தகவல்களின் மூலம் அறிந்திருப்பீர்கள். முன்னெல்லாம் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதன் மூலம் நமது நாட்டின் அரிசி விலை குறைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் அரிசி விலை அதிகரித்தபோது, தெரிவுசெய்யப்பட்ட சத்தொச நிலையங்களின் மூலம் இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது. அதனால் இந்த கொவிட் -19 நிலைமை அரிசி விலையில் நேரடியாக பாதித்துள்ளது. இந்தியா, வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் போன்ற நாடுகள் தத்தமது அரிசிப் பங்குகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதிக்கு அனுப்ப இயலாது என்ற முடிவை எடுத்துள்ளன. மேலும், அரிசி உற்பத்தி செய்வதற்கும், அரிசி அறுவடை செய்வதற்கும் தேவையான மனித சக்தி கோதுமையை விட அதிகம் தேவையாக உள்ளது. கொவிட் தொற்று தொடர்ச்சியாக அரிசின் விலையை அதிகரித்தவண்ணமே உள்ளது.
வரலாற்றில் நிகழ்ந்தது என்ன தெரியுமா?
19 ஆம் நூற்றாண்டில் உணவு பற்றாக்குறை இலங்கையை மிக மோசமான நிலைக்கு தள்ளி இருந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், பிரித்தானியர்கள் நெற்பயிர்ச்செய்கையை அவ்வளவாக ஊக்குவிக்கவில்லை. இலங்கையை விட இந்தியா, வங்காளம் மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் அரிசி மலிவானது என்று அவர்கள் கூறினர். அந்த நேரத்தில் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு, பஞ்சத்தின் விளைவாக, போரில் இறந்த மக்களின் எண்ணிக்கை அளவிற்கு பட்டினியால் மக்கள் இறந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது மியன்மார் ஜப்பானிடம் இருந்தது. மியன்மாரில் இருந்து அரிசி பெறமுடியாமல் போனதால் வங்காளத்தில் மட்டும் 4 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான சமயத்தில் உணவு வலையமைப்பின் சரிவை இலங்கையும் அக்காலத்தில் அனுபவித்தது. பின்னர், விவசாயத்தில் இலங்கையை தன்னிறைவடைய டி.எஸ். சேனாநாயக்க முயன்றதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதப்பட்டது. பின்னர், ஏற்றுமதி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் காரணமாக, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் மக்கள் பட்டினி கிடந்தனர். இதன் விளைவாக, இலங்கை அரசாங்கம் அரிசி உற்பத்தி மற்றும் அரிசியில் தன்னிறைவு பெறுவதில் கவனம் செலுத்தின. நம் நாட்டில் நெல் அறுவடை நம் நாட்டிற்கு போதுமானது. ஆனால் கோதுமை மா மற்றும் பிற தயாரிப்புகள் ஏதேனும் ஒரு வழியில் தடுக்கப்பட்டால் அல்லது விலை உயர்ந்தால், அரிசி விலையை சந்திக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
மக்களின் இயலாத்தன்மை மற்றும் வறுமை
கொவிட் 19 பரவுவதால், உலகின் பொருட்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. தொடர்ந்து கிடைத்த ஓடர்கள் இல்லாததால் பங்களாதேஷில் பணிபுரியும் மில்லியன் கணக்கான பங்களாதேஷ் ஏழைகள் துணித்தொழிற்சாலைகளில் வேலைகளை இழந்தனர். உலகளவில், பெரும்பாலான இடங்களில் வேலைகளுக்கான ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன அல்லது வேலையே இல்லாமல் போகின்றன. லோக்டவுன் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவை வேலை இருந்தாலும் அவற்றை செய்ய முடியாதவாறு வருமானத்தை கடுமையாக பாதித்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், உணவின் விலை உயர்ந்தால், அது மக்களை மோசமாக பாதிக்கும். இலங்கை அரசு மார்ச் மாதத்தில் பருப்பு மற்றும் செமன் டின் விலையை ஏழைகளுக்காக குறைத்தது. ஆனால் அந்த சலுகையைக்கூட வறிய குடும்ப மக்களால் அனுபவிக்க முடியாமல் போனது.
இதனால் நாம் சொல்ல வருவது ஒன்றுதான். நமக்கு தேவைக்கு அதிகமாக உணவுக்கான பொருட்கள் இருந்தால், அவற்றை மூவேளை சரியாக உண்ணக்கூட வசதியற்ற குடும்பங்களுக்கு கொடுக்கலாம். உலகமே ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய நேரம் இது. தனித்திரு விழித்திரு.