வளர்ந்த பிள்ளைகளைப் போலவே சிறு குழந்தைகளின் வாழ்க்கையிலும் பெற்றோருக்கென ஒரு பெரிய இடமுண்டு. குழந்தைகள் எவ்வளவு சண்டையிட்டாலும், எல்லா பிரச்சனைகளையும் சந்தோஷங்களையும் தமது பெற்றோரிடமே பகிர்ந்து கொள்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் தொடர்பு கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுடனான இந்த சிறிய பேச்சு பழக்கம், நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத மகிழ்ச்சியையும் வலிமையையும் குழந்தைகளுக்கு வழங்க முடியும்.
இன்றைய நாள் எப்படி கழிந்தது?
இன்றைய நாள் எப்படி கழிந்ததென உங்கள் குழந்தைகளிடம் ஒவ்வொரு நாளும் கேட்க பழகுங்கள். நீங்கள் சமையலறையில் சமைக்கும்போது அல்லது இரவு படுக்கையில் தூங்க வைக்கும்போது குழந்தைகள் அருகில் இருப்பார்கள். அதுமாதிரியான எந்த நேரத்திலும் இதை கேட்கலாம். எப்படியாவது குழந்தை அன்றைய நாளினை பற்றி மறக்கும் முன்னர் கேட்பது பெறுமதிமிக்கது. அன்றைய நாளில் நடந்த சில முக்கிய சம்பவங்களை அம்மா அப்பாவுடன் பகிர்வதன், பேசுவதன் மூலம் பெற்றோர்களும் குழந்தைகளும் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், பள்ளி நண்பர்களுக்கு இடையில் நடந்த சிறு சிறு பிரச்சினைகள், பெரியவர்கள் மூலம் ஏதாவது பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்ற சுற்றுச்சூழலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் இதன் மூலம் கண்டறிய முடியும். எனவே உங்கள் குழந்தைகளின் நாள் பற்றி தினமும் அவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள மறந்துவிடாதீர்கள்.
ஒரு செயலை செய்து முடித்தால் பாராட்ட வேண்டும்
சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் என்ன செய்தாலும் அதனை தவறாக பார்க்கின்றனர். ஒரு விளையாட்டு வீடு அவர்களால் கட்டப்பட்டால், அது பொருட்களை வீணடிக்கும் வேலை என்றும், அல்லது நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்றும் சொல்வார்கள். அவர்கள் தத்தமது அன்றாட வேளைகளில் உள்ள வெறுப்பை குழந்தைகளிடம் வெளிக்காட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் அது குழந்தையின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி பெரிதும் யோசிப்பதில்லை. குழந்தைகள் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட நாம் பாராட்ட வேண்டும். ஏதாவது ஒரு ஆக்கத்தையும் வரைதலையும் கொண்டுவந்து காண்பிக்கும்போது அதைப் பற்றி குறைகூறும் முன் அதைப் பாராட்டும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். விலங்குகளின் மீது அன்பும் பெரியவர்களுக்கு மரியாதையும் செலுத்தும்போது இதேபோல செய்யுங்கள். அவர்கள் ஒரு குழந்தையாக இருப்பதால் பெரிதாக பாராட்டி என்ன புரியப்போகிறது என்று இருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் இந்த விஷயங்களைப் பாராட்டுங்கள். இதன் மூலம் குழந்தைகள் வேலைகளில் அதிக ஆர்வம் காட்ட பழகிக்கொள்வார்கள்.
பிழைவிட்டாலும் பாராட்டுங்கள்
நாம் முன்பு கூறியது போல், எந்த விடயத்தையும் செய்து முடித்து வந்து காட்டும்போது மட்டுமின்றி அவர்கள் முயற்சி செய்து தோல்வியடையும் சந்தர்ப்பத்திலும் பாராட்டுங்கள். இல்லையெனில் அவர்கள் மீண்டும் ஒருபோதும் தோல்வியடைந்த விடயத்தில் முயற்சிக்க மாட்டார்கள். சில வேலைகளில் ஒரு போட்டியில் போட்டியிட்டு முதலிடம் பெறுவது போல இரண்டாவது அல்லது மூன்றாவது அல்லது ஒரு இடத்தையும் பெறாமல் போகக்கூடும். ஆனால் அவர்கள் அவற்றைக் கண்டு அஞ்சக்கூடும். அச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் இதனை வெற்றி தோல்வி என்பது வாழ்வின் இரு அங்கங்கள் என்று சொல்லி புரிய வைத்து, அதையும் பாராட்ட வேண்டும். இதன் மூலம் தோல்வியைத் தாங்கக்கூடிய ஒரு மனப்பாங்கை அவர்களிடம் உருவாக்க முடியும்.
தவறுகளை முறையாக சுட்டிக்காட்டுங்கள்
உரிய இடங்களில் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். உதாரணமாக, வீட்டுப்பொருட்களை இழுத்துப்போட்டு, அதனை நாசம் செய்யும் வேலையாக ஒன்றை செய்தால், பக்குவமாக அதனை எடுத்துச்சொல்லி விளையாடி முடிந்தவுடன் அவற்றை எடுத்து வைக்கச் சொல்ல வேண்டும். அதனை சரியாக தினமும் செய்தால், ஒரு பரிசு தருவேன் என்று கூறுவது போல அன்பான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். அதேபோல தோல்விகளை அறிந்து கொள்ளவும், அவற்றில் எங்கு தவறு நடந்தன என்பது பற்றிய ஒரு யோசனையை அவர்களுக்குக் கொடுப்பதும், மீண்டும் அவற்றை சரியாக முயற்சிக்க அவர்களை ஊக்குவிப்பதும் அவசியம்.
” தயவு செய்து / நன்றி ” போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தவும்
ஒரு வேலையை செய்து தர “ப்ளீஸ்” என்கிற வார்த்தையை உபயோகிக்கவும், அந்த வேலை நடந்து முடிந்த பின்னர் அதற்கு “நன்றி” அல்லது “நன்றி” சொல்லி பழகவும், வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே, மற்றவர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் விடயங்களை எப்படிச் சொல்வது, கேட்பது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கட்டாயம் கற்பிக்க வேண்டும். அது சொல்லால் மட்டுமன்றி செயலாலும், பெற்றோர்கள் குழந்தைகளின் பார்வைக்கு நடந்து கொள்ளவேண்டும். அதாவது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எனவே, அவர்களும் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். அது அவர்களின் எதிர்காலத்திற்கும் உதவியாக இருக்கும்.
சிறு தவறாயினும் மன்னிப்பு கேட்க பழக்கவும்
எம்மால் ஏதாவது தவறு நேரிட்டால் கட்டாயம் மன்னிப்புக்கேட்க பழகவேண்டும். அந்த பழக்கம் ஒரு குழந்தையாக வளரும் காலத்திலிருந்தே வீட்டிலிருந்து வர வேண்டிய ஒன்றும்கூட. மன்னிப்பு கேட்க விரும்பாத மக்களை இன்று நாம் சமூகத்தில் எவ்வளவோ காண்கிறோம்? எனவே, சிறு வயதிலிருந்தே மன்னிப்பு கேட்பது முக்கியம் என்பதை நம் சிறு குழந்தைகள் நம்பும்படி நடக்க வேண்டும். எனவே முதலில், ஒரு தந்தை மற்றும் தாயாக, நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சில சந்தர்ப்பங்களில் உங்கள் குழந்தைகளிடம்கூட மன்னிப்பு கேட்க வேண்டிய நேரங்கள் உள்ளன. தினமும் அதனை குழந்தைகள் கேட்கும்போது பெரும்பாலும் அதைப் பழக்கப்படுத்திக்கொள்கிறார்கள்.
அவர்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளோம் என்று அடிக்கடி சொல்லுங்கள்
இறுதியாக, இதை எழுதினாலும் முதலாவதாக இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இதுதான். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் உண்மையான அன்பை நேசிக்கிறார்கள். உண்மையான பாசம் கிடைக்காதவர்களே சமூகத்தில் தீய காரியங்களில் இறங்குகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு அன்பு, பாசம் என்பது ஒரு அற்புதமான விடயம். குறிப்பாக உங்களை மிகவும் நேசிக்கும் மற்றும் உங்களுக்கு மிக நெருக்கமான தந்தை மற்றும் தாயின் அன்பு மிகவும் அவசியம். எனவே ஒவ்வொரு நாளும், முடிந்த போதெல்லாம் உங்கள் குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். ஒரு தந்தையின் பாசம், வெளியே தெரியாவிட்டாலும், அது பாசம் என்ற சூழ்நிலை வரும்போது, அது குழந்தைகளை அவர்கள் உண்மையில் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நன்றாக உணர வைக்கும். அதனால் தங்கள் அன்பை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல் சிறுவயது முதல் அவர்களுக்கு வாய்மொழி மூலமாகவும் சொல்லுங்கள்.