மகிழ்ச்சியை தொலைத்துவிட்டீர்களா? – இனி கவலை வேண்டாம்

 

மகிழ்ச்சியாக இருப்பது எப்படியென தத்துவஞானிகள் கூறுகின்றனர். இவற்றிற்கு மேலதிகமாக பேஸ்புக்கில்கூட பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் உண்மையிலேயே நம்மில் பெரும்பாலோர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பது சந்தேகத்திற்குரியதே. வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை நாம் புறக்கணிப்பதாலும் சில சந்தர்ப்பங்களில் அவை தொடர்பாக அதிகம் மனதில் குழப்பங்களை ஏற்படுத்திக்கொள்வதும் காரணமாக அமைகின்றது. அவ்வாறு வாழ்க்கையில் உங்கள் மகிழ்ச்சியை இல்லாமலாக்கும் சில விடயங்கள் பற்றி இன்று நாம் பேசவுள்ளோம். அவற்றில் ஏதேனும் நீங்களும் செய்திருந்தால் திருத்திக்கொண்டு முன்னேறுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

 

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறீர்களா?

இந்த உலகில், நம்மை விட அழகான மனிதர்கள், செல்வந்தர்கள், அதிக திறன் கொண்டவர்கள் நிறையவே உள்ளனர். சில சமயங்களில் அவர்களை அந்தந்த துறைகளில் ஜெயிக்கவும் முடியாது. இதனால் எமது வாழ்வின் தரம் தாழ்ந்து போவதும் இல்லை. நம்முடைய பலம், பலவீனம் மற்றும் பண்புகளை நாம் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை வெற்றிபெறச் செய்வது அவசியம். அப்படியல்லாமல், நம் வாழ்க்கையை நம் அயலவர்களுடனும் நண்பர்களுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பது, நம்மைப் பற்றி அல்லது மற்றவர்களைப் பற்றி தரக்குறைவாக, வெட்கமாக, கோபமாக எண்ணுவது நல்லதல்ல. எனவே உங்களுக்கு இந்த பழக்கம் இருந்தால், தயவுசெய்து அதை இன்றே நிறுத்தி விடுங்கள்.

 

கிடைத்ததை கொண்டு திருப்தி அடையவில்லையா?

இந்த காரணி பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பழக்கம்தான். மற்றவர்களிடம் இருப்பதைப் பற்றி நாம் சிந்தித்தால், வாழ்க்கையில் நம்மிடம் இருப்பதை நாங்கள் இழந்துவிடுவோம். நாட்டில் எத்தனையோ பேர் தங்கள் அடுத்த உணவைப் பற்றி நிச்சயமற்றவர்களாக உள்ளனர். நம்மிடமுள்ள பௌதீக விஷயங்களில் மட்டுமல்ல, நம்மிடமுள்ள குணங்களையும் நமது பெற்றோர் மற்றும் நண்பர்களின் குணங்களையும் கவனியுங்கள். அவற்றை வைத்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாவிட்டால், அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக கிடைத்தாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் ஒருபோதும் கிடைக்காத விlயங்களைப் பற்றி கவலைப்படுவதற்குப் பழகிவிட்டீர்கள். உள்ளவற்றை வைத்து திருப்தி அடைவதில்லை.

 

வாழ்க்கையை சரியாக கழிப்பதில்லையா?

முடிந்த சில விடயங்களைப் பற்றி அல்லது நாளைய தினத்தை பற்றி பலர் சிந்தித்து வாழ்க்கையை கடத்துகின்றனர். கடந்த காலத்தில் செய்த தவறை பற்றி வருத்தப்படுவது அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்று அதிகம் யோசித்து கவலைப்படுவதும் உண்டு. சாப்பிடும்போது கூட அதனையே நினைப்பார்கள். இதனால் நிகழ்காலத்தை பற்றிய ஆர்வமும் உற்சாகமும் இழந்து கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்தை பற்றியே யோசித்து அதற்காகவே மாடாய் உழைத்து சோர்ந்து போகிறோம். அன்றைய நாளின் இறுதியில் வாழ்க்கையை நினைத்து சலிப்படைகிறான். அவ்வாறான தவறை செய்யாமல் வாழும் இந்த தருணத்தை சந்தோஷமாக கழியுங்கள். நாளைய தினத்தைப் பற்றியும் யோசிக்கத்தான் வேண்டும். ஆனால் அது அளவிற்கு அதிகமானதாக இருக்கக்கூடாது.

 

அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எண்ணுகிறீர்களா?

மனிதன் செய்யும் இன்னொரு தவறுதான் இது. தன்னால் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும் என்று எண்ணுவதும் அவ்வாறு நினைத்தவாறு அவை கட்டுப்பாட்டிற்குள் வராவிட்டால், அவ்வாறு நினைத்தவாறு நடக்காவிட்டால் அந்த விடயத்தின் மீது கோபம் கொள்வது, அதன் மீது வெறுப்பை காட்டுவது என மனிதர்கள் பழகிவிட்டனர். இது நமது மகிழ்ச்சியை அழிக்கக்கூடிய ஒரு அடிப்படையான உண்மை. இந்த உலகில் உள்ளவை நம் வழியில், நமக்கு பிடித்தது போல இயங்காது என்பதை நாம் உணர வேண்டும். எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடிய நேர்மறையான சிந்தனை நமக்குள் இருக்க வேண்டும். சில சமயங்களில் நமக்கு நெருக்கமானவர்களும்கூட சூழ்நிலைக்கு ஏற்ப மாறுகிறார்கள். அதனால் அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

 

தன்னையும் பிறரையும் குறைகூறி புலம்புகிறீர்களா?

தான் செய்யும் வேலையில் நூற்றுக்கு நூறு வீதம் சரியாக நடக்காமல், அதில் சிறிதும் தவறு நிகழ்ந்தால் அது தனது இயலாமை, தனது கையாலாகாத தன்மை என்று தன்னை தானே அடிக்கடி குறைக்கூறிக்கொள்ளும் சிலர் உள்ளனர். அதே போல இதற்கு எதிராகவும் சிலர் இருப்பர். தனது தவறால் தனது கவனக்குறைப்பாட்டால் நிகழ்ந்த ஏதுவாயினும் அதற்கு அடுத்தவர்களின் மீது பலி சுமத்துவார்கள். அப்படி இருப்பது எந்த விதத்திலும் சரியாக இருக்காது. தன்னால் தவறொன்று நிகழ்ந்தால் “ஆம், அடுத்த தடவை சரி செய்து கொள்ளவேண்டும்” என்று நினைக்க வேண்டும். இதை விடுத்து தன்னையும் பிறரையும் குறைகூறிக்கொண்டு திரியக்கூடாது. இதுவும் வாழ்வில் சந்தோஷத்தை இழந்துவிட காரணமாக அமைகின்றது.

 

மற்றவர்களின் கருத்துகளை பற்றி அதிகம் சிந்திக்கிறீர்களா ?

உலகில் சிலர் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன கூறுவார்கள் என்று யோசித்தே தனது வாழ்வை சந்தோஷமின்றி வாழ பழகிவிட்டனர். முடிக்கு டை அடித்தால் என்னைத் தரக்குறைவாக அடுத்தவர்களிடத்தில் காட்டிவிடுமா, பச்சை குத்திக் கொண்டால் கெட்டவனாக காட்டிவிடுமா என யோசிக்கின்றனர். சிலர் தாங்கள் விரும்பும் எதையும் செய்யவோ பேசவோ பயப்படுகிறார்கள். ஏனென்றால் சமூகம் தன்னை எவ்வாறு நினைக்கும் என்று எண்ணி எண்ணி வாழ்வின் சந்தோசத்தை தொலைக்கின்றனர். சமுதாயத்தையும் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இவ்வாறான விடயங்களுடன் அவற்றை தொடர்புபடுத்திக்கொண்டு சந்தோசத்தை பின்னர் வெளியில் சென்று தேடாதீர்கள்.

 

பணத்தை வைத்து சந்தோஷத்தை சம்பாதிக்க நினைக்கிறீர்களா ?

உங்களிடம் அதிக பணம் இருந்தால் மட்டும், இந்த சமூகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்திடலாம் என்று எண்ணினால், அது உங்கள் முட்டாள்தனம். அந்த பணத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சந்தோசம் தானாக வரும். ஆனால் பணம் அதிகமானால் பகையில்தான் போய் முடியும் எனும் கருத்தும் காணப்படுகின்றது. அதாவது பணம் இல்லாத நேரத்தில் நெருக்கமாக இருந்தவர்களை பின்னர் எதிர்ப்பாளர்களாகவும் எதிரிகளைக்கூட நெருங்கிய தோழனாகவும் இந்த பணம் எண்ண வைக்கும். பணம் எவ்வளவு சேர்த்து வைத்தாலும் மரணம் வரும் போது பணத்தைக் காட்டி தப்பிவிட முடியாதென்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.