உலகின் இரண்டாவது பெரிய கண்டமாக ஆபிரிக்கா விளங்குகின்றது. உலகின் மிக அழகான சில நாடுகளையும் மிகவும் தனித்துவமான நிலப்பரப்புகள் மற்றும் வனவிலங்குகளையும் ஆபிரிக்கா கண்டம் கொண்டுள்ளது. அதனால்தான் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றலாப் பயணிகள் இந்தக் கண்டத்தை தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி என்ன அங்கு இருக்கின்றது? இதோ, இந்த கட்டுரையை பார்த்து அறிந்துகொள்ளுங்கள். கொரோனா பிரச்சினை தீர்ந்தபின்னர் ஒருதடவை சென்று பார்த்துவிடுங்கள்.
ஒரு காலத்தில் 10,000 மாநிலங்களை கொண்டிருந்த கண்டம்
உலகின் இரண்டாவது பெரிய கண்டமான இது 54 நாடுகளை கொண்டுள்ளது. இந்த கண்டம் மற்றும் ஐந்து துணை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வட ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா, மத்திய ஆபிரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆபிரிக்கா என்பவையே அவை. இந்த கண்டம் முழுவதுமே கிட்டத்தட்ட 10 மில்லியன் சதுர மைல்களை உள்ளடக்கியுள்ளது. அதாவது உலகின் 20% க்கும் அதிகமான நிலத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. காலனித்துவ ஆட்சிக்கு முன்னர், ஆபிரிக்கா 10,000 வெவ்வேறு மாநிலங்களால் ஆனது. ஒவ்வொன்றும் அவற்றின் தனித்துவமான மொழிகள் மற்றும் தனித்துவமான பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தது.
உலகின் கொதிக்கும் அடுப்பு போன்ற கண்டம்
நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதைப் போல, ஆபிரிக்கா மிகவும் வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. இது உண்மையில் உலகின் வெப்பமான கண்டமாக கருதப்படுகிறது. இங்குள்ள சுமார் 60% நிலம் வறண்டு மற்றும் பாலைவனத்தால் மூடப்பட்டிருக்கிறது. மேலும் சஹாரா உலகின் மிகப்பெரிய பாலைவனமாகும். வெப்பநிலை பெரும்பாலும் 100 ° F (அல்லது 40 ° C க்கும் அதிகமாக) இருக்கும். மேலும் ஒரு காலத்தில் லிபியாவின் எல் அஜீசியாவில் 136.4 ° F (58 ° C) வெப்பநிலையில் பூமியில் எவ்விடத்திலும் இல்லாத அளவு அதிகமான வெப்பநிலை பதிவாகியிருந்தாலும், கண்டத்தில் வேறு தீவிர நிலையும் உள்ளது. ஆபிரிக்காவில் மிகக் குளிரான வெப்பநிலை −11 ° F (- 23.9 ° C) மொரோக்கோவின் இஃப்ரேனில் ஏற்படுகிறது. இது ஆபிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. முன்னர் குறிப்பிட்டபடி, ஆபிரிக்க நிலத்தின் பெரும்பகுதி பாலைவனத்தால் ஆனது. உலகின் மிகப்பெரிய பாலைவனமாக விளங்கும் சஹாரா உண்மையிலேயே பரந்த அளவில் உள்ளது. இதன் விரிவான அளவு 9.4 மில்லியன் சதுர கிலோமீட்டராகும். முழு ஐக்கிய அமெரிக்காவையும்விட பெரியது! சஹாராவைப் பற்றிய மற்றுமொரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இதன் தென் பிராந்தியங்களில் மாதத்திற்கு அரை மைல் என்ற விகிதத்தில் விரிவடைந்து வருவதால் ஆண்டுக்கு ஆறு மைல்கள் பெரிதாகிய வண்ணம் உள்ளது.
2000 இற்கும் அதிகமான மொழிகள் பேசும் இடம்
உலகில் பேசப்படும் வெவ்வேறு மொழிகளில் 25 வீதத்திற்கும் அதிகமான மொழிகள் ஆபிரிக்காவின் பிராந்தியங்களில் பேசப்படுகின்றன. ஆபிரிக்காவில் 2,000 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 200 க்கும் மேற்பட்டவை மத்திய சஹாரா உட்பட வட ஆபிரிக்காவில் பேசப்படுகின்றன. அவை ஆப்ரோ-ஆசிய மொழிகள் என அழைக்கப்படுகின்றன, 140 மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் நிலோ-சஹாரா மொழிகள் என்றும் 1,000 க்கும் மேற்பட்டவை நைஜர்-சஹாரா மொழிகள் என்று பேசப்படுகின்றன. ஆபிரிக்காவில் 54 நாடுகள் இருப்பதால், பல மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும், இங்கு அதிகம் பரவலாக பேசப்படும் மொழி அரபு (170 மில்லியன் மக்களால்), ஆங்கிலம் (130 மில்லியன் மக்கள்), பின்னர் சுவாஹிலி, பிரஞ்சு, பெரெபர், ஹவ்சா மற்றும் போர்த்துகீசியம். இங்கு பேசப்படும் வேறு பல மொழிகளும் உள்ளன.
இரட்டையர்களை உருவாக்கும் நாடு
ஆபிரிக்காவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான நைஜீரியா, BBC தொலைக்காட்சியால் “இரட்டையர்களின் நிலம்” என்று செல்லப்பெயர் பெற்றது. ஏனெனில் இது உலகிலேயே அதிக இரட்டை பிறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவில் இரட்டை பிறப்பு விகிதங்கள் உண்மையில் உலகில் வேறு எங்கும் இல்லாததை விட நான்கு மடங்கு அதிகம் என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இதில் அனைத்தும் நைஜீரியாவில் இக்போ-ஓரா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய நகரத்தில் இருந்தே அதிகமாக உள்ளது. அங்கு கடைசியாக பதிவு செய்யப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் ஒவ்வொரு 1000 குழந்தை பிறப்பிற்கும் 50 ஜோடி இரட்டையர்கள் பிறக்கின்றனர்.
மலேரியாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டம்
மலேரியா மிகவும் ஆபத்தான ஒரு நோயாகும். குறிப்பாக ஆபிரிக்காவில் ஒவ்வொரு நாளும் சுமார் 3,000 குழந்தைகள் மலேரியாவால் இறக்கின்றனர், உலகெங்கிலும் உள்ள 90% மலேரியா நோயாளிகள் இங்குதான் இருக்கின்றனர். ஒரு நாடு மிகவும் வறுமையான நிலையில் இருக்கும்போது இந்த நோயை எதிர்த்து எளிதில் போராட முடியாது. எனவே ஆபிரிக்க கண்டத்திற்கு மேற்கத்திய உலகம் வழங்கக்கூடிய எந்த உதவியும் மிகவும் முக்கியமானது.
மிகப்பெரிய தவளையும் மிகப்பெரிய யானையும்
உலகின் மிகப்பெரிய தவளை இனங்கள் ஆபிரிக்காவில் உள்ளது. இது கோலியாத் தவளை என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு அடி நீளம் வரை வளரக்கூடியது மற்றும் 8 பவுண்ட் வரை எடையைக் கொண்டிருக்கும். அதாவது புதிதாக பிறந்த சராசரி குழந்தையைவிட எடை அதிகமானது. இந்த உயிரினம் பெரியதாக இருந்தாலும், சாதுவான பாதிப்பில்லாத ஒரு உயிரினம். இது ஈக்வடோரியல் கினியா மற்றும் கமரூனில் காணப்படுகிறது. டைனோசர் காலத்திற்கு பிறகு உலகில் இன்றளவும் வாழும் மிகப்பெரிய பாலூட்டி உயிரினம் என்றால், அது ஆபிரிக்க யானைகளாகும். சுமார் 6 டொன் எடை மற்றும் 7 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை.
எகிப்திற்கே சவால் விடும் அளவுக்கு பிரமிட்டுகளை கொண்ட நாடு
எகிப்து நாடு அதன் பிரமிட்டுகளுக்கு பிரபலமாக இருந்து வருகிறது. ஆனால் நம்மில் பலரும் அறிந்திடாத உண்மை என்னவென்றால், ஆபிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் மொத்தம் 223 பிரமிட்டுகள் இருக்கின்றன. இது எகிப்தில் உள்ள பிரமிட்டுகளின் அளவிலும் பார்க்க இரு மடங்கு அதிகமானது. இந்த மறக்கப்பட்ட பிரமிட்டுகள் மெரோ பிரமிட்டுகளாகும். இவை ஒரு காலத்தில் நுபியன் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட குஷ் இராஜ்ஜியத்தின் தலைநகராக அமைந்தது.
அதிகமான காற்றாலைகளை கொண்ட நாடு
நெதர்லாந்து காற்றாலைகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. ஆனால் தென்னாபிரிக்கா உண்மையில் 280,000 காற்றாலைகளின் தாயகமாக இன்றும் உள்ளது. இவை நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் காணப்படுகின்றன. மேலும் இங்குள்ள காற்றாலைகள் நெதர்லாந்தில் உள்ள காற்றாலைகளை விட மிக அதிகம். அதாவது நெதர்லாந்தில் மொத்தம் 10,000 காற்றாலைகளை மட்டுமே காணமுடியும்.
ஒரு சதவீதத்திற்கும் குறைவான காட்டை கொண்ட நாடுகள்
செய்தி மற்றும் பத்திரிகைகளில் நீங்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இது உண்மையில் நாம் நினைப்பதை விட சவாலான ஒன்றாகும். அதாவது ஆபிரிக்காவின் காடழிப்பு விகிதம் உலகின் பிற பகுதிகளின் சராசரி விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும். ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு மில்லியன் ஹெக்டேயர் காடுகள் அழிக்கப்படுகின்றன. மேலும் ஆபிரிக்காவில் சில நாடுகளில் 1% க்கும் குறைவான காடுகளே உள்ளன. ஆபிரிக்கா கண்டம் அதிக வெப்பநிலையை கொண்டிருக்க இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம்.