லொக்டவுன் காலம் தந்த வித்தியாசமான அனுபவங்கள்

 

உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. இன்று இருப்பது போல நாளை அமையாது. இதற்கிடையில், உலகையே உலுக்கக்கூடிய பெரிய பெரிய மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. 2004 சுனாமி பயங்கரமானதாக இருந்தாலும், அதன் மூலம் ஒரு சில நாடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகையே தாக்கிய கொரோனா வைரஸ் மூலம் உலகமே நடுங்கியது. வல்லரசாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு செயற்பட்ட நாடுகளும் பெட்டிப்பாம்பாய் சுருண்டுவிட்டன. முன்னர் உலகின் மிகப் பெரிய பேரழிவுகளாக அடையாளம் காணப்பட்ட யுத்தக் கலவரங்கள், மனித சமுதாயத்தை தாக்கிய பயங்கரமான இயற்கை பேரழிவுகளை விடவும் இந்த கொரோனா அதிக பாதிப்பையோ தந்துள்ளது.

 

மேற்கத்தைய நாடுகளின் தவிப்பு

ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும், சிறுபான்மை வறிய மக்கள் பஞ்சத்தால் இறக்கின்றனர். உலகம் அதனை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ஐரோப்பாவின் பிரபல மைய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா போன்றவைகூட இந்த கொரோனா வைரஸினால் ஒரு நாளைக்கு 600-700 இறப்புகளை பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பல அமெரிக்க படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள் படத்தில் மட்டுமே ஹீரோ என்றும், உண்மையான ஹீரோக்கள மனித உயிரை காப்பாற்றும் சகமனிதன்தான் என்பதை உலகிற்கே காட்டிவிட்டது., தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னேறிய நாடுகள்கூட திக்குமுக்காடுவதை பார்க்கக்கூடியதாக இருந்தது. நோய் வந்தால் அதற்கென்று மருந்தும் இருக்கும். ஆனால் கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடிக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

புதியதோர் வாழ்க்கை முறை

கொரோனாவிலிருந்து விடுபட பல நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேற்கத்தேய நாடுகளில் லொக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டது. எது எப்படியிருந்தாலும், மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெளியே செல்வது சட்டத்திற்கு முரணானதென அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே இந்த சூழ்நிலையுடன் நாங்கள் வேலைக்கு செல்வதாயினும் முன்பிருந்தது போல சுதந்திர நிலைக்கு நாங்கள் திரும்பி விட முடியாது. புதிதாக 1 மீற்றர் இடைவெளியை வைத்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். உங்கள் சொந்த வேலை அதிகரித்திருக்கும். அதாவது செய்யும் வேலை எதுவாயினும் அடுத்தவரின் தேவை அதில் குறைவாகவே இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், நாம் வேலைக்குச் செல்கிறோம், ஆனால் அது முன்னரைப் போல அமையாது.

 

பண்டிகைகளும் பெருநாட்களும்

இலங்கையில், புத்தாண்டு என்பது மக்கள் பொறுமையின்றி கொண்டாட காத்திருக்கும் ஒரு காலம். முன்னதாக, கொரோனா காரணமாக பெப்ரவரி 2020 இல் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை சீனர்கள் இழந்தனர். நாமும் எமது புத்தாண்டை கொண்டாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தோம். கடந்த காலத்தில் இருந்த புத்தாண்டு சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவைகூட இம்முறை இல்லை. கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக வெசாக் பண்டிகை களைகட்டவில்லை. இந்த முறை கொரோனாவினால் சகல நிகழ்வுகளும் ஸ்தம்பிதமடைந்தன. கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் கடுமையான விதிமுறைகள் இருந்ததால், வெசாக் கூடுகளையும் வாங்கமுடியவில்லை.

 

மிக நீண்ட விடுமுறை

நாங்கள் வேலை செய்து களைத்துப் போய் இருக்கும் போது, ​​இணையம் இல்லாத ஒரு பெரிய காட்டில் இரண்டு வாரங்களாவது கழிக்க வேண்டும் என்று கனவு கண்டோம். ஆனால் கொரோனாவில் அதிக வேலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்தது. ஏப்ரல் மாதத்தில் உலகின் பெரும்பாலான மக்கள் எதிர்பாராத விதமாக வீட்டிலேயே இருந்தனர். வீட்டிலிருந்து செய்யக்கூடிய சில விஷயங்களைத் தவிர பெரும்பாலான மக்கள் இவ்வளவு பெரிய நீண்ட விடுமுறையை சந்தித்ததே இல்லை. சில வீடுகளில் சண்டைகளிலேயே கழிந்துள்ளன. நீண்ட விடுமுறைக்குப் பிறகு, நினைவுக்கு வரும் அழகான உணர்வுகளைக்கூட இந்த விடுமுறையில் இழக்க நேரிட்டுள்ளது. இந்த நீண்ட விடுமுறை அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்திருக்காது. சிலர் வீட்டுப்பயிர்ச்செய்கை செய்யத் தொடங்கினர். ஆனால் எதையும் செய்ய வாய்ப்பில்லாமல் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

முடிவில்லாத ஒரு பாதையில் நாம்!

 

வெள்ளம், நிலச்சரிவு என்றால் சிறிது காலத்தின் பின்னர் சரியாகிவிடும். சுனாமி என்றால் ஓரிரு அலைகளுடன் ஓய்ந்து விடும். ஆனால் கொரோனா எப்படி முடிவடையும்? இந்த ஆண்டு ஜனவரியில் நாங்கள் டிவியின் முன் அமர்ந்து சீனாவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நாமே எமது நாட்டில் என்ன நடக்கும் என்று பயப்படுகிறோம். யுத்தத்திற்கு உடனடி தீர்வு இல்லாவிட்டாலும் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம். ஆனால் கொரோனா என்பது தீர்வே இல்லாத பிரச்சினை போல நீண்டு செல்கின்றது. காரணம், கண்ணுக்குத் தெரியாத முறையில் பாதிக்கின்றது. தடுப்பூசி பற்றி பேசப்பட்டாலும் பின்னர் அது வெற்றியளிக்கவில்லை. இவ்வாறு சுரங்கப்பாதையை போல முடிவைக் காணாது உலகமே சிக்கித் தவிக்கின்றது.

 

மக்களை மீண்டும் பிரித்த சமூக இடைவெளி

கொரோனாவுக்கு முன்பு, குழந்தைகளிடம், “அந்த போனிலேயே எந்த நேரமும் இருக்க வேண்டாம். வெளியே வந்து சிலருடன் பேசுங்கள். மற்றவர்களுடன் பழகவும்” என குறிப்பிட்டவர்கள் இப்போது விருப்பம் இல்லாவிட்டாலும் மனித தொடர்புகளை தயக்கமின்றி தவிர்க்குமாறு கட்டாயப்படுத்தின. ஆரம்ப நாட்களில், மாஸ்க் போட்டு வீதியில் செல்லும்போது, ​​எல்லோரும் அவர்களை நோயாளி போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது மாஸ்க் போடாவிட்டால் வித்தியாசமாக பார்க்கும் நிலமை வந்துவிட்டது. ஒரு இறுதி சடங்கிலோ அல்லது திருமணத்திலோ முன்பு இருந்ததுபோல சிரிக்கவும், பேசவும், நடனமாடவும் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

 

வரலாறு தந்த விசித்திரமான அனுபவம்

2004 சுனாமியின் போதும் இதே போல கஷ்டமான நிலை ஏற்பட்டிருந்தாலும் அது பின்னர் மாறியது. ஆனால் கொரோனா ஒரு புது அனுபவம். 1919 மற்றும் 1300களில், உலக மக்களுக்கு ஒரு அபாயகரமான, ஆபத்தான தொற்றுநோய் ஏற்பட்டது. ஆனால் அந்த எல்லா நிகழ்வுகளிலும், உலகில் 3 பில்லியன் மக்கள்கூட இருக்கவில்லை.இப்போது எட்டு பில்லியன் மக்களால் நிரம்பியுள்ள இந்த உலகிற்கு இப்படியான புதிய வைரஸ் சூழல் எளிதானதல்ல. இந்த நேரத்தில் நாம் வாழ்வது எப்படி என்ற சவால் எம் கண்முன் காணப்படுகின்றது. ஆனால் மாற்றத்தை விரும்பிய அனைவருக்கும் மிகச்சிறந்த மாற்றத்தை தந்து விட்டது.

 

பயப்பட வேண்டுமா  சிந்திக்க வேண்டுமா?

முதலாவது நோயாளி அறியப்பட்டபோது ஆச்சரியமாக பார்த்த நாம், இப்போது ஆயிரத்தையும் தாண்டியுள்ள போது சகஜமாக பார்க்க பழகிவிட்டோம். அமெரிக்கா, இத்தாலி மக்கள் கூறும் விதத்தில் பார்க்கும்போது அங்கு நாளாந்தம் இடம்பெறும் 500-600 மக்களின் இறப்பு சாதாரண ஒன்றாக மாறியுள்ளது. மக்களிடம் உள்ள அற்புதமான விஷயம் என்னவென்றால், எந்த மாற்றத்திற்கும் இலகுவாக அவர்களை மாற்றியமைக்க முடியும். தற்போதைய உண்மை நிலை என்னவென்றால், மெதுவாக நாம் அதிலிருந்து விலகி வருகிறோம். நாம் அதை படிப்படியாக ஏற்று இதனோடு ஒத்துப்போக வேண்டும். சில நேரங்களில், மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகும் தொடர்ச்சியாக இதே நிலையில் இருக்கக்கூடும். ஆனால் இந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் உலகம் எவ்வளவு மாறிவிட்டது ? நமது சமூகம் எவ்வளவு மாறிவிட்டது ? நாம் எவ்வளவு மாற வேண்டியிருந்தது ? இவற்றை பற்றி இந்த நேரத்தில் சிந்திப்பதும் பெறுமதிமிக்கது.