சுயதொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய 5 உணவுவகைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

 

தங்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே சுயதொழில் செய்யும் அல்லது சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க முயற்சிப்போர் உள்ளனர். அவ்வாறானோருக்கு இன்று ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துளோம். தமக்கென்று வேலைவாய்ப்பு மற்றும் ஒரு நல்ல வணிகத்தை உருவாக்க சுய வேலைவாய்ப்பு ஒரு சிறந்த வழியாகும். உணவுபொருட்களை செய்து அவற்றை விற்பனை செய்வதன் மூலம் சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்றும் லைபீ தமிழ் உங்களுக்கு பரிந்துரை செய்கிறது. இதனை ஆரம்பிக்க பாரிய பண முதலீடு அவசியமில்லை. நீங்களே முயற்சித்துப் பாருங்கள்.

 

பப்படம்

எல்லோரும் விரும்பும் சுவையான உணவுகளில் ஒன்று பப்படம். பப்படத்திற்கு சந்தையில் நல்ல தேவையுள்ளது. எவ்வளவு பப்படத்தை வீட்டிற்கு கொண்டு வந்தாலும் அலுப்பதில்லையே. நீங்கள் ஒரு சுயதொழில் செய்பவராக இதைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

 • கோதுமை மா – 1 கப்
 • உளுந்து மா – 1 கப்
 • உப்பு – தேவைக்கேற்ப
 • அப்ப சோடா – 1/4 தேக்கரண்டி

 

 • கோதுமை மாவையும் உழுத்தம் மாவையும் நன்கு சலித்து எடுத்து விட்டு, இரண்டையும் அப்ப சோடாவுடன் கலந்து மீண்டும் சலித்துக்கொள்ளவும்.
 • தேவையான அளவு உப்பை நீரில் கலந்து அதை கொதிக்க விட்டு பின்னர் அதை குளிரூட்டவும்.
 • அதன் பின்னர் உப்பு கலந்த நீரை ஊற்றி ரொட்டி பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் அதை எடுத்து உருளையில் போட்டு நன்கு மசித்து எடுக்கவும்.
 • இந்த மாக்கலவையை மெல்லிதாக தட்டி, பப்படம் போல வெட்டி இருபக்கமும் காய வைத்து, பொலித்தீன் உரையில் போட்டு விற்பனை செய்யவும்.

 

சவ்வரிசி பிஸ்கட் (சவ்போற)

தேவையான பொருட்கள்

 • சவ்வரிசி – 100 கிராம்
 • துருவிய தேங்காய் – 100 கிராம்
 • பிஸ்கட்தூள் – 100 கிராம்
 • சர்க்கரை – 100 கிராம்
 • உப்பு
 • வெணிலா அசன்ஸ்
 • பெருஞ்சீரகம் (இந்த சுவையை விரும்பவில்லை என்றால் போடவேண்டாம்)

 

 • ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் போட்டு 2 மேசைக்கரண்டி நீரில் கலக்கவும்.
 • பின்னர் ஒரு உருண்டை செய்து சிறிய வட்டங்களாக தட்டவும். சுமார் 1/2 சென்ரிமீற்றர் கனதியான வட்ட வடிவ தட்டு இருந்தால், அதில் கலவையை போட்டு செய்தால் அழகாக வரும்.
 • பின்னர் 150 ° C அளவில் சூடான அடுப்பில் 40 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

 

எள்ளுருண்டை 

தேவையான பொருட்கள்

 • கருப்பட்டி வெல்லம் – 400 கிராம்
 • எள் – 500 கிராம்
 • தேவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை

 

 • மேலோட்டமாக எள்ளை முதலில் சூடாக்கவும். பின்னர் வெல்லத்தை துண்டுகளாக நறுக்கி, எள் சேர்த்து நன்கு இடித்து எடுத்துக்கொள்ளவும்.
 • பின்னர் உப்பு மற்றும் தேவையான சர்க்கரை சேர்க்கவும். அது காய்வது போல தெரிந்தால், சூடான நீரில் சேர்த்து கிளறவும். ஒரு நீண்ட பைப் குழாய் எடுத்து கலவையை துளைக்குள் போட்டு, வெளியே எடுத்து உருளை வடிவ துண்டுகளாக வெட்டவும்.

 

தக்காளி சோஸ்

தேவையான பொருட்கள்

 • தக்காளி அரைத்தது – 750 கிராம்
 • மிளகாய்த்தூள் – 8 கிராம்
 • சர்க்கரை – 120 கிராம்
 • இஞ்சி – 10 கிராம்
 • பூண்டு – 10 கிராம்
 • வினிகர் – 80 மில்லி
 • ஏலக்காய் – 1
 • கராம்பு – 1
 • இலவங்கப்பட்டை
 • உப்பு
 • சோள மா – 2 தேக்கரண்டி

 

 • தக்காளியை கொதிக்கும் சூடான நீரில் போட்டு சுமார் 8 நிமிடங்கள் வைக்கவும். பிறகு தோலை உரித்து விதைகளை அகற்றி நன்கு நசுக்கவும். இப்போது தக்காளி கூழ் போன்று வந்துவிடும்.
 • அனைத்து மசாலாப் பொருட்களையும் வினிகருடன் அரைத்து, சுத்தமான துணியில் போட்டு கட்டி வைக்கவும்.
 • தக்காளி கூழில் சர்க்கரை மற்றும் சோள மா சேர்த்து லேசாக சூடாக்கவும். ஆவி வரும்போது, ​​மசாலாவை அதில் போட்டு மீதமுள்ள வினிகர் மற்றும் சர்க்கரையையும் சேர்க்கவும்.
 • நன்கு கெட்டியான பதார்த்தமாக வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆறிய பின் போத்தலில் அடைத்து வைக்கவும்.

 

சில்லி பேஸ்ட் (CHILLIE PASTE)

தேவையான பொருட்கள்

 • கூனி இறால் – 500 கிராம்
 • சர்க்கரை – 100 கிராம்
 • கட்டர் தூள் – 500 கிராம்
 • வினிகர் – 100 மில்லி
 • இஞ்சி – 20 கிராம்
 • பூண்டு – 20 கிராம்
 • தேங்காய் எண்ணெய் – சிறிதளவு

 

 • முதலில் கூனி இறாலை எடுத்து நன்கு கழுவி காய வைத்துக்கொள்ளவும். பிறகு அதை நன்கு பொரித்தெடுக்கவும்.
 • ஒரு தனி பாத்திரத்தில் எண்ணெயை போட்டு இஞ்சி மற்றும் பூண்டு பொன்னிறமாகும் வரை தாளித்து எடுக்கவும். கட்டர் தூள் சிறிதளவு இலேசாக சூடாக்கிக்கொள்ளுங்கள். அதிகம் சூடாக்கினால் கறுப்பாகி விடும். பின்னர் அழகான நிறம் இல்லாமல் போய்விடும்.
 • இப்போது பொரித்த கூனி இறாலில் கட்டர்தூள், இஞ்சி, பூண்டு, சர்க்கரை மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை போத்தலில் அடைத்து விற்கலாம். இப்பொடி செய்தால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.