உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்கள்

 

மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு கிரிக்கெட் மைதானத்திலிருந்து ஒரு கிரிக்கட் போட்டியை நீங்கள் பார்த்திருந்தால், அந்த நேரம் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பதையும் அந்த நேர அனுபவத்தையும் நாங்கள் விளக்க தேவையில்லை. இந்த கலாசாரம் நாட்டிற்கு நாடு மாறுபடும். அந்த புத்துணர்ச்சியுடன் சேர்ந்த அனுபவங்கள், மாற்றங்கள் அனைத்தும் இயல்பாக அழகாக இருக்கக்கூடியதுதான்.

அதேவேளை இந்த நேரத்தில் உலகில் பல்லாயிரக்கணக்கான மனிதர்களிடத்தில் பரவி இருக்கக்கூடிய COVID 19 எனும் வைரஸ் தொற்று நோயின் காரணமாக உலகில் பல விளையாட்டு துறைகளும் தத்தமது விளையாட்டு போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு உதாரணமாக தாம் அடித்த பந்துகளை தாமே சென்று எடுத்து வரும் நிலைக்குள் நியூஸிலாந்து-அவுஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்கள் தள்ளப்பட்டனர். இப்படி நடந்திருக்க காலம்காலமாக கிரிக்கெட்டிற்கு என்று இருந்த இரசிகர் பட்டாளத்தை அன்புடன் வரவேற்றிருந்த உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களை பற்றிதான் பார்க்கப்போகிறோம்.

 

 

சர்தார் படேல் ஸ்டேடியம் – இந்தியா

இதுவரை உலகில் அதிகமான கிரிக்கெட் இரசிகர்களை வரவேற்றுக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய மெல்பன் மைதானத்தை பின்தள்ளி விட்டு இந்தியாவிலுள்ள இந்த மைதானம் முன்னிலையில் உள்ளது. இது புதிதாக கட்டப்பட்ட அரங்கம் என்றாலும், அகமதாபாத்தில் அமைக்கப்படுவதற்கு முன்பு அங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்று இருந்தது. மொடேரா ஸ்டேடியம் என்றுதான் மிகவும் பிரபலமாகி இருந்தது. இந்த அரங்கம் 1983இல் கட்டப்பட்டது. 2015 இல் இடிக்கப்பட்டு 110,000 பார்வையாளர்களைக் கொண்ட அரங்கமாக கட்டப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துடன் ஒரு பகல் மற்றும் இரவு டெஸ்ட் போட்டியில் இந்த மைதானத்தில் போட்டிகள் நடக்கின்றன.

 

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் – அவுஸ்திரேலியா

MCG என அழைக்கப்படும் இந்த விளையாட்டு மைதானம் நேற்று வரை உலகின் மிகவும் பிரபலமான மைதானமாக இருந்தது. இந்த மைதானத்தில் இருந்து பார்க்கக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை 100,024 ஆகும். 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மைதானத்தில்,  ஒலிம்பிக் மற்றும் கொமன்வெல்த் போட்டிகளை நடத்தியுள்ளனர். இது கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு போட்டிகளின் பிறப்பிடமாகும். இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை இங்குதான் நடத்தியுள்ளனர்.

 

ஈடன் கார்டன்ஸ் – இந்தியா

ஈடன் கார்டன்ஸ் மைதானம் என்றதும் அதிகமான 90 கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. 1996 இல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய இரசிகர்கள் மூலம் சர்ச்சைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உள்ளாகி இறுதியில் இலங்கை வெற்றிபெற்றது இந்த மைதானத்தில்தான். 1864 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அரங்கத்தில் அந்த நேரத்தில் 40,000 பார்வையாளர்கள் பார்க்க முடியுமாய் இருந்தது. முதல் டெஸ்ட் போட்டி 1934 இல் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டி 1987 இல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்றது. ஒரே நேரத்தில் 100,000 பார்வையாளர்களை பார்க்க வைக்கும் அளவுக்கு அரங்கம் பெரியதாக இருந்தபோதிலும், ICC யின் அதிகபட்ச அளவு 66,000 என்ற பரிந்துரையை பூர்த்தி செய்ய அரங்கம் மீண்டும் கட்டவேண்டியிருந்தது.

 

ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – இந்தியா

2008 இல் கட்டப்பட்ட இந்த அரங்கத்தில் சுமார் 65,000 பார்வையாளர்கள் அமரலாம். இது மிகவும் நவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் கூடிய நவீன அரங்கமாகும். இந்த அரங்கம் IPL போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்த அரங்கம் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால், வீரர்களுக்கு இடமளிக்க அரங்கத்தைச் சுற்றி நல்ல ஹோட்டல்கள் இல்லாததாலும், அதற்கு மிகவும் செலவு ஏற்படுவதாலும் சர்வதேச விளையாட்டில் அரங்கம் பயன்படுத்தப்படுவதில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

 

பெர்த் ஸ்டேடியம் – அவுஸ்திரேலியா

பெர்த் மைதானம் என்றவுடன் பெர்த்தில் உள்ள WACA மைதானத்துடன் பெர்த் குழப்பிக்கொள்ளக்கூடாது. OPTUS என்றும் அழைக்கப்படும் இந்த பெர்த் மைதானம் சமீபத்தில் அதாவது 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு அரங்கமாகும். சுமார் 60,000 பார்வையாளர்களை வைக்க இந்த அரங்கம் முடியுமாய் உள்ளது. மேலும் இந்த அரங்கத்தில் உள்ள இன்னொரு சிறப்புதான் இது முட்டை வடிவத்தில் (ஓவல் வடிவத்தில்) வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கிரிக்கெட்டுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலிய கால்பந்து போட்டிகளுக்கும் இந்த அரங்கம் பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் முன்னர் குறிப்பிட்ட WACA அரங்கம் முதலில் அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக்கின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் இனது அதிகாரப்பூர்வ அரங்கமாக இருந்தது. ஆனால் 2018 முதல் அவர்கள் இந்த புதிய பெர்த் மைதானத்தையும் தங்கள் போட்டிகளுக்குப் பயன்படுத்தினார்கள். அதே நேரத்தில், அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளும் இந்த நியூ பெர்த்தில் நடைபெற்றுள்ளன.

 

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் – இந்தியா

ஹைதராபாத்தில் உள்ள மைதானம் IPL அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிகாரபூர்வ மைதானமாகும். 2003 இல் திறக்கப்பட்ட இந்த அரங்கம், இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுவும் நவம்பர் 2010 இல் தான் அந்த போட்டி நடந்தது. இந்த அரங்கத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் மற்றும் இரண்டு T20 போட்டிகள் நடந்துள்ளன. மேலும் இலகுவாக வீரர்களுக்கு இந்த மைதானத்தில் ஓட்டங்களை பெறமுடியுமாக இருக்கின்றது என்றும் சில பிரபலங்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் VVS லக்ஷ்மணின் பெயரிலும் ஒரு பகுதி பெயரிடப்பட்டுள்ளது.

 

அடிலெய்ட் ஓவல் – அவுஸ்திரேலியா

அடிலெய்ட் ஓவல் 1871ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் உலகின் மிக அழகான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக நிறுவப்பட்டது. பெயரில் இருப்பது போலவே இதுவும் ஒரு ஓவல் வடிவ மைதானம்தான். இந்த மைதானம் கிரிக்கெட்டின் மூலம் மட்டுமல்லாமல் வேறு வழிகளிலும் பணம் சம்பாதிக்கும் பொருட்டு நிறுவட்டிருக்கின்றதோ தெரியவில்லை. ஏனென்றால் இந்த மைதானம் கால்பந்து, ரக்பி, டென்னிஸ், களியாட்டங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற பிற விளையாட்டுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 1884 இல் தான் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் அவுஸ்திரேலியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. முதல் ஒருநாள் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே 1975 இல் நடைபெற்றது. அவுஸ்திரேலியா அந்த போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1999 ஆம் ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டியில் வீசுவதற்காக முத்தையா முரளிதரனை நடுவர் ரோஸ் எமர்சன் NO BALLED கூறியதும் இந்த அடிலெய்ட் ஓவல் மைதானத்தில்தான்.