உலக வரலாற்றில் சபிக்கப்பட்ட பிரபலமான ஏழு சாபங்கள்

 

சாபங்கள் இருக்கின்றன என வரலாறு கூறினாலும் சாபங்கள் பலிக்குமா என்ற கேள்வி இந்த 21ஆம் நூற்றாண்டில் மக்கள் மத்தியில் இருக்கவே செய்கின்றது. தான் ஏதாவது பிழை செய்தால் அல்லது செய்வதற்கு வழியில்லாமல் திக்குமுக்காடும்போது அல்லது தன்னை இன்னலுக்கு உட்படுத்தியவரை குறைந்தபட்சம் வாய் வார்த்தைகளிலாவது கடுமையாக சபிப்பார்கள். பெரிதும் இவை கட்டுக்கதைகள் என்றே பலரும் கூறுகின்றனர். ஆனாலும் உலக வரலாற்றில் அந்த கருத்தை மறுத்து சாபங்கள் உண்மையில் உள்ளன என்பதை நிரூபிக்கும் விடயங்கள் உள்ளன. அத்தகைய ஏழு சாபங்கள் பற்றி இன்று பார்ப்போம். இதை வாசித்துவிட்டு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

திப்பெக்கேனோவின் சாபம்

அமெரிக்காவின் பழங்குடி மக்களின் தலைவரான டகும்சே, தனது பதவிக்காலத்தில் புகழ்பெற்ற டிப்பெக்கானோ போரின் தோல்விக்குப் பின்னர் ஒரு சாபத்தை கூறிவிட்டே இறந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது இவரது இறப்பின் பின்னர் ஒவ்வொரு இருபது வருடத்திற்கும் அமெரிக்காவினை ஆட்சி செய்யும் ஆட்சியாளன் கொலை செய்யப்படுவான் என்றே அது அமைந்திருந்தது. அந்த சாபத்திற்கு சிக்கி முதலில் கொலை செய்யப்பட்டவர், அந்த போரை வெற்றிகொண்ட ஆட்சியாளனான ஹென்றி ஹெரிசன் ஆவார். அடுத்த இருபது வருடத்திற்கு பின்னர் கொலை செய்யப்பட்டவர்  நாம் அனைவரும் அறிந்த ஆபிரகாம் லிங்கன். இந்த சாபம் 1960 வரை நீடித்ததாக கூறப்படுகிறது.

 

கென்னடி குடும்ப சாபம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற கென்னடி குடும்பத்திற்கு எதிராக ஒரு சாபம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதியான ஜோன் எஃப். கென்னடி 1963 இல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சகோதரர் ரொபர்ட் கென்னடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். சகோதரரின் மகன்களில் ஒருவர் அளவுக்கதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் இறந்தார். ரொபர்ட்டின் மகன்களில் மற்றொருவர் பனியில் விளையாடும்போது விபத்தில் இறந்தார். ஜூனியர் ஜோன் கென்னடி விமான விபத்தில் உயிரிழந்தார்.

 

பனி மனிதனின் சாபம்

1991 ஆம் ஆண்டில், இத்தாலிய ஆல்ப்ஸ் பகுதியில் பனியில் உறைந்துபோன ஒரு மனிதனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் ஐம்பத்து மூன்று நூற்றாண்டுகள் பழைமையானது என்றும் கணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கண்டுபிடிப்பில் ஈடுபட்ட பல பேராசிரியர்களும் வரலாற்றாசிரியர்களும் அவ்வப்போது இறக்கத் தொடங்கினர். மொத்தமாக ஏழு பேர் இறந்தனர். அவர்களில் 4 பேர் திடீர் விபத்துக்களில் இறந்துள்ளனர். அவர்களின் அந்த மரணத்திற்கு காரணம் உறை பனியில் இருந்து எடுக்கப்பட்ட மனித சடலத்திற்கு உரித்தான மனிதன் மீது இருந்த ஒரு பயங்கரமான சாபம் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

 

சூப்பர் மேன் சாபம்

ஆம், சூப்பர் மேன் சாபம்தான். ஏனென்றால் இந்த கதாபாத்திரத்துடன் தொடர்ந்தும் சம்பந்தப்பட்டவர்கள் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார்கள் என்பதே இதற்கு காரணம். சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களும், அதில் பங்கேற்றவர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள். இந்த கதாபாத்திரத்தை உயிர்ப்பித்த நடிகர் தற்கொலை செய்துகொண்டார். கிறிஸ்டோபர் ரீவ் என்ற நடிகர் நிரந்தரமாக தொடர் நோயால் பீடிக்கப்பட்டு ஊனமுற்றார். புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத கிறிஸ்டோபரின் மனைவி நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். மற்றொரு சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் குழந்தை கதாபாத்திரத்தில் நடிகர் லீ குயிக்லி 1991இல் தனது 14 வயதில் இறந்தார். இது போல மிகப்பெரிய ஒரு பட்டியலே உள்ளது. சூப்பர் மேன் கொமிக் புத்தகத்தை உருவாக்கியவர்கள் கதாபாத்திரத்திற்கு முறையாக பணம் செலுத்தாததே சாபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

கோஹினூர் டயமண்ட் (கோஹினூர் வைரம்)

கோஹினூர் டயமண்ட் என்பது இந்தியாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் பிரபலமான மற்றும் அதிகூடிய விலைமதிப்புமிக்க வைரங்களில் ஒன்றாகும். அதேபோல இந்த கோஹினூர் வைரத்துடன் கடுமையான ஒரு சாபம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, கோஹினூர் வைரம், ஒரு பெண்ணுக்குச் சொந்தமானால் அந்தப் பெண்ணுக்கு செழிப்பை அள்ளிக் கொடுக்கும். அதே வைரம் ஒரு ஆணிடம் சென்றடைந்தால், அவன் உயிரோடு இருக்கமாட்டான் அல்லது அவனைப் போல ஒரு துரதிஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.

 

அழும் சிறுவனின் ஓவியம்

1950 களில்தான் இந்த அழுகின்ற சிறுவனின் ஓவியம் பிரபலமானது. இதை புருனோ அமடியோ என்ற இத்தாலிய ஓவியக்கலைஞர் உருவாக்கியுள்ளார். குழந்தைகள் காப்பக வீட்டில் ஒரு குழந்தையைப் பார்த்து வரைந்து அவர் இதை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த ஓவியத்தின் சாபம் அவர் ஓவியத்தை வரைந்த சித்திரக்கூடம் எரிந்து போனதில் இருந்துதான் ஆரம்பமானது. ஆனால் அவ்வளவு பெரிய விதத்திலும் ஓவியம் சிறிதும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த ஓவியத்தை வாங்கிய தம்பதியரின் வீட்டிற்கு தீப்பிடித்துள்ளது. ஆனால் அப்போதும்கூட ஓவியம் சிறு கீறல் அளவும் சேதமடையவில்லை. இந்த ஓவியத்தின் பிரதிகள் பிறகு அடிக்கடி எரிந்துபோன வீடுகளிலிருந்து தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் சாபம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இது முதன்முதலில் 1985இல் சன் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் உலகிற்கு தெரியவந்தது.

 

திமூர் கல்லறையின் சாபம்

தீமூர் என்பது துருக்கிய மற்றும் மொங்கோலிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு படையெடுப்பாளர். அவர் உஸ்பெகிஸ்தானின் திமுரிட் இராஜ்ஜியத்தின் ஆட்சியாளன் ஆவான். கி.பி 1405 இல் இறந்த இந்த ராஜாவின் உடலை மீட்டு சோவியத் யூனியனுக்கு எடுத்துச் செல்ல ஜோசப் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கிறார். அந்த கல்லறையில் “எனது கல்லறையை யார் திறந்தாலும் அவர்கள் என்னை விட கடுமையான படையெடுப்பாளரை எதிர்கொள்வார்கள்” என்பதற்கான அடையாளமாகக் கூறப்படுகிறது. கல்லறையிலிருந்து உடலை எடுத்துச் செல்லும்போது ஸ்டாலின் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று நாட்டின் பூர்வீகவாசிகள் எச்சரிக்கின்றனர். அதையும் தாண்டி இந்த உடலை எடுத்துச் சென்ற மூன்று நாட்களுக்குப் பிறகு, நாசி படைகள் சோவியத் யூனியனை ஆக்கிரமிக்கின்றன. இந்த படையெடுப்பால் மில்லியன் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் மூலமே இந்த கல்லறையும் உடலும் சபிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.