இளைஞர்களின் வாழ்வில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு

 

சமூக ஊடகங்கள் என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த மற்றும் அதிகமானோர் பேசும் தலைப்புக்களில் ஒன்று. புதிய தொழில்நுட்பங்கள் வளர்வதால் காலப்போக்கில் நாம் கொண்டிருந்த சமூக தொடர்புகளின் விதத்தை மாற்றியது. இது சமூகத்தில் நல்லது மற்றும் கெட்டது இரண்டையும் கொண்டு வருகிறது. அதுபற்றி பேசப் போனால் நாள் முழுதும் பேசவேண்டும். பொதுவாக நாம் குழந்தைகளின் கைகளில் மொபைலை கொடுப்பதில்லை என்றாலும், வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அதாவது 13 இலிருந்து 19 வயதிற்குற்பட்ட சிறார்களுக்கு கொடுத்துவிடுகின்றோம். அவர்களும் சமூக ஊடகங்களை இலகுவாக பயன்படுத்தி வருகிறார்கள். சமூக ஊடகங்கள் எனும்போது இப்போதெல்லாம் FACEBOOK, INSTAGRAM, MESSENGER மற்றும் WHATSAPP போன்றவை இவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. 97% இளம் பருவத்தினர் இந்த சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையின் வளர்ச்சியில் இளமைப் பருவமும் ஒரு முக்கிய கட்டமாகும். எனவே தேவையற்ற அல்லது தேவைக்கு அதிகமான சமூக ஊடக பயன்பாடு இளைஞர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பார்ப்போம்.

 

சமூக உறவுகளிலுள்ள சிக்கல்கள்

சமூக ஊடகங்களை தொடர்ந்தும் பயன்படுத்துவது ஒரு வகையான போதையை ஏற்படுத்தும். குறிப்பாக இளம் வயதுடையவர்கள் பாடசாலை விட்டு வீட்டிற்கு வந்ததில் இருந்து ​​படுக்கைக்குச் செல்லும் வரை ​​படிக்கும்போதும், ​​டிவி பார்க்கும்போதும், ​​உணவு உண்ணும் போதும், ​​தொலைபேசிகளிலும், டெப்களிலும், மெசேஜ் செய்து கொண்டும், ஸ்டேட்டஸ் பார்க்கவும், சமூக ஊடகங்கள் வழியாக பகிரவும் செய்கின்றனர். ஆனால் கடந்த காலங்களில், இளைஞர்கள் வெளியே சென்று தங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்த நிலை முற்றிலும் மாறி, நண்பர்கள் பேசுவது, கோபப்படுவது எல்லாம் ஒன்லைனில் என்றாகிவிட்டது. எதிர்கால சமுதாயத்தை சமாளிக்க இளைஞர்களுக்கு தேவையான சமூக திறன்களை வளர்க்க இது ஒரு தடையாகும். ஒரு அந்நியருடன் நேருக்கு நேர் பேசுவது எப்படி, ஒரு உறவை எவ்வாறு உருவாக்குவது, பேசும்போது முகபாவனைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது, உடல் மொழி மற்றும் இவ்வாறு பல விடயங்களை அறிந்துகொள்ள தெரியாமல் போகிறார்கள். சமூக ஊடகங்களில் ஒரு கிளிக் மூலம் பிடிக்காதவர்களை ப்லோக் செய்து விட்டு போகலாம். ஆனால் சமூகத்தில் நேருக்கு நேராக வரும் பிரச்சினைகளை கையாளும் போது இளைஞர்கள் தவறிழைக்கலாம்.

 

தூக்கமின்மை

மொபைலை இரவு முழுவதும் வைத்துக்கொண்டு FACEBOOK, INSTAGRAM ஆகியவற்றில் தூக்க நேரத்தினை கழித்து விடுவார்கள். விடியற்காலையில் எழுந்தும் மொபைலில்தான் குட் மோர்னிங் சொல்கிறார்கள். அதாவது, இவர்கள் உண்மையில் தங்களுக்குத் தேவையான நிம்மதியான தூக்கத்தை இழக்கிறார்கள். இப்படியான தூக்கமின்மை அந்த நாள் முழுவதும் சோர்வு, எரிச்சல், கல்விக்கு இடையூறு மற்றும் மனநல பிரச்சினைகளைக்கூட ஏற்படுத்தக்கூடும்.

 

தவறான புரிதல்

மக்கள் தங்களிடம் இருப்பதை பெருமைக்கும் சேர்த்தவாறே உற்சாகமாக சமுதாயத்திற்கு காட்ட விரும்புகிறார்கள் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். இப்பொழுதெல்லாம் அவற்றை சோஷியல் மீடியா வழியாக பிறருக்கு காட்டுகிறார்கள். பெரும்பாலும், நாம் ஒரு சமூக அமைப்பில் ஒன்றாக வாழும்போது நல்லது கெட்டதென இரண்டையும் சந்திக்கின்றோம். ஆனால் நல்லவற்றை மட்டுமே சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றோம். எனவே இவற்றைப் பார்க்கும் வளர்ந்து வரும் சிறார்கள் வாழ்க்கையின் பிரச்சினைகள் மற்றும் கடினமான சூழ்நிலைகளைப் பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் தேவையான வாய்ப்பை இழக்கிறார்கள். மேலும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல தடைப்படுகின்றன.

 

பொறாமை

மேற்கூறியவற்றால் விடயங்களால்சிலரிடம் பொறாமைக்குணம் அதிகரிக்க வாய்ப்புண்டு. அனைவரும் புகழ்விரும்பிகள் தானே. ஆகவே தன்னிடமுள்ள நல்ல விடயங்களை பதிவிடும்போது, அவை எம்மிடமில்லையே என சிறார்கள் கோபப்படலாம், பொறாமைப்படாலம். காரணம். இந்த சமூக ஊடகமானது மக்கள் மத்தியில் மாயையை தோற்றுவித்துள்ளது. சமூக ஊடகத்தில் தாம் காணும் அந்த புகழ்விரும்பிகளிடம் மாத்திரமே நல்ல விடயங்கள் இருக்கின்றன என்ற தவறான புரிதல் சிரார்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது.

 

மனச்சோர்வு, பதற்றம் மற்றும் சுயமரியாதை பிரச்சினைகள்

சமூக உறவுகள், தூக்கமின்மை, பொறாமை போன்ற அனைத்தும் நீண்ட காலத்திற்கு மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சினைகளை பிற்காலத்தில் ஏற்படுத்தக்கூடும். மேலும், சமூக ஊடகங்களில் படங்களையும் பதிவுகளையும் இடுவதானது பொதுவாக மற்றவர்களுடன் சமுதாயத்தில் இருக்கும் போட்டியை விட மிகப்பாரதூரமானது.

 

கல்வி சிக்கல்கள்

இது ஒரு பொதுவான இலகுவாக கூறக்கூடிய விடயம். சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் போது கல்விக்கு ஒதுக்கப்படும் நேரம் இழக்கப்படுகின்றது. மேலும் கல்வியின் மீதுள்ள ஆர்வம் இழக்கப்படுகின்றது. மேற்கூறிய உளவியல் சம்பந்தமான பிரச்சினைகளான மனச்சோர்வு போன்றவை கல்வி, நினைவாற்றல் சக்தி, கவனிக்கும் ஆற்றல் போன்றவற்றை சீர்குலைகின்றது. இது பிற்காலத்தில் எதிர்கால வாழ்க்கையையும் சீர்குலைக்கும்.

 

சமூகத்துடன் பேசும் பழக்கம் அற்றுப்போதல்

இது சமூக உறவுகள் குறித்த எமது முதல் கண்ணோட்டத்துடன் நேரடியாக தொடர்புடையது. இளைஞர்கள் ஒன்லைனில் மட்டும் பேசப்பழகும் போது நேருக்கு நேர் பேசும் திறனை வளர்க்க முடிவதில்லை என்று நாங்கள் கூறினோம். இதேபோல், சமூக வலைத்தளங்களில் சேட்டிங் செய்வதன் மூலம், ஒருவருக்கு ஒருவர் கருத்துக்கள் மாறுபடும். நேரில் சந்தித்தால் அவை வேதனைதரும். சமூக ஊடகங்களால் வளரும் குழந்தைகள் முரண்பாடான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளலாம். சமுதாயத்திலிருந்து கற்றுக் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான படிப்பினைகளில் ஒன்றான ஒருவருக்கொருவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது, இந்த சமூக ஊடகங்களால் இல்லாமல் போகின்றது. பிடித்தால் ஒரு லைக் பிடிக்காவிட்டால் புளொக் செய்தல். இப்படித்தான் இன்றைய வாழ்க்கை நகர்கின்றது.