உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் வித்தியாசமான சட்டங்கள்

 

உலகம் முழுவதும் பயணம் செய்ய கடவுச்சீட்டும் விசாவும் போதாது. போகவிருக்கும் நாட்டை பற்றிய விதிகள் குறித்த அறிவைக் கொண்டிருப்பதும் அவசியம்.  மேற்கத்தேய நாடுகளின் சட்டங்கள் ஆசிய சட்டங்களிலிருந்து வேறுபடுகின்றன. சில நாடுகளில் வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மிகவும் வேறுபட்டவை. இவ்வாறு ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு வகையான சட்டங்கள் உள்ளன.

 

சிங்கப்பூரில் சுவிங்கம் சப்புவது தடை

சிங்கப்பூருக்கு எமது நாட்டிலிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் விமானம் மூலம் பயணிக்கலாம். சிங்கப்பூரானது ஐரோப்பிய நாட்டைப் போல ஆங்கிலத்தில் பணிபுரியும் விதிகளும் பின்னணியும் கொண்ட வளர்ச்சியடைந்த நாடாகும். அந்த நாட்டில் சுவிங்கம் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 1992இல் அமுலிற்கு வந்துள்ளது. சிறிய அளவான நிலப்பரப்பளவை கொண்டுள்ள இந்த நாட்டில் குப்பைகளை அகற்றுவது அந்நாட்டினருக்கு பெரிதும் கஷ்டமாகவிருந்தது. மேலும் வீதியில் ஒட்டி சாலையை நாசப்படுத்தும் இந்த சுவிங்கத்தை முழுதாக தடை செய்வதற்கு முன்பு, சுவிங்கத்தை அகற்ற சிங்கப்பூருக்கு 100,000 அமெரிக்க டொலர் செலவாகியுள்ளது.

 

மதுபானம் மற்றும் தகாத வார்த்தைகளை பேசுவது தடை – மாலைதீவு

மாலைதீவு என்பது எமக்கு அருகிலுள்ள உலகிலுள்ள செல்வந்தர்கள் (ஹனி மூன்) தேனிலவுக்கு செல்லும் இடமாகும். ஆனால் மாலைதீவில் விமான நிலையத்திற்குள் நுழையும்போது உங்களிடம் உடலுறவு சம்பந்தமான பொருட்கள், மதுபானங்கள் மற்றும் பாலியல் தொடர்பு பற்றிய புத்தகங்கள் இருந்தால் பிரச்சினை ஏற்படும். மாலைதீவு ஒரு முஸ்லம் நாடாக இருக்கும் நிலையில், அங்கு இவற்றை கொண்டுசெல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு விமான நிலையத்த்தில் ஒவ்வொரு பொருளையும் எடுத்து பரிசோதிக்க மாட்டார்கள். ஆனால், தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள மேற்குறித்த பொருட்களை வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்வது உகந்தது.

 

அடி உயர்ந்த செருப்பு (ஹை ஹீல்ஸ்)க்களை அணியத் தடை – கிரீஸ்

கிரீஸ் தொல்பொருள் நினைவுச்சின்னங்களைக் கொண்ட ஒரு பண்டைய நகரம். நகரத்தில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களைப் பற்றி யோசித்த நாட்டின் அதிகாரிகள் ஒரு அற்புதமான சட்டத்தை விதித்துள்ளனர். அதாவது கிரீஸ் நாட்டில் பெண்கள் ஹை ஹீல்ஸ் போட்டு நடக்க அனுமதி இல்லை. கிரேக்கத்தின் பண்டைய இடிபாடுகளில் அடி உயரமான காலணிகளை அணிந்து நடக்கும்போது, இடிபாடுகளில் மேலும் சேதங்கள் ஏற்படலாம் என்று சந்தேகித்ததால் இப்படியொரு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஜெர்மனியின் வாகன ஒயில் சட்டம்

ஜெர்மனியின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோபான் என்று அழைக்கப்படுகிறது. ஜெர்மனியின் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்வதாயின் அதற்கு கட்டுப்பாடு இல்லை. இருப்பினும், மணிக்கு 130 கிலோமீற்றருக்கு மேல் ஓடுவது ஆபத்தானதென அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 130க்கு மேல் சென்றால் பொலிஸார் அவர்களை தண்டிப்பதும் இல்லை. ஆனால், எண்ணெய் இல்லாமல் வண்டி நெடுஞ்சாலையில் நின்றுவிட்டால், அதனை ஜெர்மனி ஆட்டோபான் நெட்வொர்க் குற்றமாக கருதுகிறது. ஜெர்மனி நெடுஞ்சாலையில் எண்ணெய் பற்றாக்குறையால் வாகனம் நிறுத்தப்பட்டால் அபராதமும் அறவிடப்படும்.

 

தாய்லாந்தின் பணச் சட்டங்கள்

தாய்லாந்தில் இன்னும் அரசாட்சி சட்டம் உள்ளது. தாய்லாந்தில், ராஜாவுக்கு எதிராக பேசுவது சிறைத்தண்டனை வழங்கப்படக்கூடிய ஒரு குற்றமாகும். மேலும், தாய்லாந்து பணத்தாளில் அந்நாட்டின் ராஜா அல்லது இளவரசனின் படம் இருக்கும். அந்த பணத்தாளை கீழே எறிந்துவிட்டு, அவற்றை மிதித்துச் செல்வது தாய்லாந்தில் மிகப்பெரிய தவறாக கருதப்படுகிறது.

 

மரணம் தடை செய்யப்பட்ட இடமான இங்கிலாந்து பாராளுமன்றம்

 

நம் நாட்டு பாராளுமன்றத்தில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் அடித்துக்கொண்டும் இருப்பது புதிய விடயமல்ல. சில காலங்களுக்கு முன்னால் கூட நமது பாராளுமன்றத்தில் சண்டையிட்டுக்கொண்டு நாற்காலிகளையும் தூக்கி எறிந்தார்கள். மிளகாய்தூளை வீசினார்கள். ஆனால் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், அவ்வாறு யாரும் சண்டையிட்டு இறக்க அனுமதியில்லை. ஏனெனில் பாராளுமன்றத்தில் யாராவது இறந்து விட்டால் முழு நாட்டிற்குமே அந்த நாளை துக்க தினமாக அறிவிக்க வேண்டும். இதனாலே இங்கிலாந்து பாராளுமன்றம், மரணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடமாக கருதப்படுகிறது.

 

போர்த்துக்கல்லின் சிறுநீர் தடை சட்டம்

 

கடற்கரை என்பது ஒரு அழகான இடம். ஆனால் இன்னும் நம் நாட்டின் சில பகுதிகளில் மக்கள் கடற்கரையை கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். கடற்கரைக்குச் செல்வோருக்கு இது ஒரு விரும்பத்தகாத அனுபவமாக அமையலாம். போர்த்துக்கலில் கடற்கரையில் மட்டுமல்ல, கடலிலும் கூட சிறுநீர் கழிக்க தடை விதித்து சட்டம் செயற்படுத்தப்பட்டது. இந்த சட்டம் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்றுதான் தெரியவில்லை. ஆனால் நீங்கள் கடற்கரையில் சிறுநீர் கழித்து சிக்கினால், நீங்கள் போர்த்துக்கலில் உள்ள சிறைக்குச் செல்ல வேண்டும்.

 

பார்சிலோனாவில் எச்சில் துப்ப தடை

எச்சில் துப்புவது ஓரளவு அருவருப்பான செயல். பொதுவாக வளர்ந்த நாடுகளில், பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் குறைவு. ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், நகரங்களில், வீதிகளில், பொது இடங்களில் எச்சில் துப்புகிறவர்கள் ஏராளம். சிங்கப்பூரில், எச்சில் துப்புவது குறித்து கடுமையான விதிகள் உள்ளன. ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள சாலையில் நீங்கள் எச்சில் துப்பினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

ஹெட்லைட் இல்லாமல் வாகனம் செலுத்தத் தடை – டென்மார்க்

டென்மார்க்கில், இரவும் பகலும் மக்கள் எப்போதும் ஹெட்லைட் போட்டவாறே வாகனங்களை ஓட்டுகிறார்கள். நம் நாட்டில் வாகனத்தை முறையாக செலுத்துபவர்களை அடையாளம் காண இந்த ஹெட்லைட் முறையைக் கொண்டு வருவது பற்றி ஒரு காலத்தில் பேசப்பட்டது. டென்மார்க்கில் வாகனம் ஓட்டும்போது ஹெட்லைட்களை ஒன் செய்து வைத்திருப்பது கட்டாயமாகும் என்று கூறப்படுகிறது.

 

தூரியனை எடுத்துச் செல்ல முடியாத இடங்கள் – மலேசியா மற்றும் இந்தோனேசியா

சிலருக்கு, தூரியன் வாசனை ஒரு துர்நாற்றம் போன்றது. சிலருக்கு இது ஒரு இனிமையான வாசனை. இருப்பினும், இந்த தூரியன் பழத்தை மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டாக்ஸி சேவைகள், ஹோட்டல், பஸ் நிறுத்தங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்கு இதைக் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்குச் செல்கிறீர்கள் என்றால், அங்கு தூரியானை எடுத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.