காதலிக்க ஆரம்பித்தவுடன் செய்ய விரும்பும் விடயங்கள்

 

காதலுக்கு நேரம், காலம், வயதெல்லாம் கிடையாது. எந்த நேரத்தில் எப்படி வருமென யாருக்கும் தெரியாது. ஆனால் மனதிற்கு பிடித்துப்போனால் எந்த நேரத்த்திலும் வரும். பாடசாலை பருவம் முதல் பல் விழுந்த பருவம் வரை சிலரின் காதல் கதைகள் முடிவின்றி நீண்டு சென்றதை கேள்விப்பட்டிருப்போம். அவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, நாம் நேசிக்கும் ஒரு பெண்ணையோ ஆணையோ கவர ஒரு சில விடயங்களை நாம் செய்யக்கூடும். அவ்வாறு நாம் காதலிக்கும் போது இடம்பெறும் சில விடயங்கள் பற்றி இன்று பார்ப்போம்.

 

சோஷியல் மீடியா உளவாளியாதல்

காதலிப்பவர்களின் தினசரி தகவல்களை அறிந்துகொள்வது இப்போதெல்லாம் ஒரு விடயமே கிடையாது. தினசரி தாம் செய்யும் விடயங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு தாம் என்ன செய்கின்றோம் என்பதை கூறிவிடுகிறார்கள். இதை வைத்து அவர்களின் தினசரி தகவல்களை அறிந்து கொள்ளலாம். சரியாக சொல்ல போனால் நாட்டு நடப்புக்களை தினமும் காலையில் செய்திப் பத்திரிகைகளில் பார்த்து தெரிந்துகொள்வதைப் போல இப்போது காதலனின் அல்லது காதலியின் செயற்பாடுகளை தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

 

எதிர்காலத்தை ஒரு நொடியிலேயே பார்த்து முடித்தல்

 

இது கனவு காண்பதில் உச்சம் என்று தோன்றினாலும், ஒரு வகையில் பார்த்தால் மிகவும் சிறந்தது. ஏனென்றால் கனவு கண்டால் தானே அதற்கேற்ப  செயல்களை முன்னெடுக்கலாம். சிலரை கண்டதும் நம்மில் சிலருக்கு அவர்களை திருமணம் செய்து கொண்டு, குழந்தைக்கு பெயர் வைக்கும் அளவிற்கு கனவு காண்பார்கள். இருவரும் ஒன்றிணைந்து ஒன்றாக கைகோர்த்து நடப்பது, ஒரு கப் கோப்பி சாப்பிடுவது, இவற்றைவிட முதல் முத்தத்தை தனது கனவு மாளிகையில் வைத்து பரிமாறிக்கொள்வதைப் போல கனவு காண்பார்கள்.

 

காதலை கைகூட வைக்க ஒரு சில நண்பர்கள்

காதலிக்கும்போது நண்பர்களின் உதவியை நாடுவது தற்போதும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கின்றது. காதலின் சுவாரஷ்யமான விடயங்களை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வார்கள். சில நேரங்களில் இவர்கள் உங்களை கோர்த்து விடும் சந்தர்ப்பங்களும் உள்ளன. உங்கள் காதலனோ காதலியோ அருகில் போகும்போது, உங்கள் பெயரை சொல்லி அவர்களை கிண்டல் செய்வார்கள். இது போன்ற செயல்களால், கைகூடி வரும் காதலும் கைநழுவிப் போக வாய்ப்புண்டு. அதேபோல கைகோர்த்து வரவும் வாய்ப்புண்டு.

 

கவிஞனாக மாறுதல்

கவிதை என்பது அனைவருக்கும் வரக்கூடிய விடயமல்ல. இப்போதெல்லாம் இரண்டு வரிகள் எழுதிவிட்டால் பெரிய கவிஞர் என்று நினைப்பு வந்துவிடும்.  எப்படியிருந்தாலும், இலக்கிய இரசனை இல்லாதவர்கள்கூட காதல் ஈர்ப்பு வந்தவுடன் கவிஞர்களாக மாறுகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் காதலிக்கும் பெண்ணிற்கு தெரியும் விதமாகக்கூட கவிதைகளை எழுதுவதும் வாசிப்பதுமாக இருப்பார்கள். இதன்மூலம் இவர் எதற்காக இதை செய்கிறார் என்றும் தெரியவரும்.

 

எல்லாம் அறிந்து காதல் மேதையாகுதல்

உண்மையில், வேறு சில கல்வி நோக்கங்களுக்காக இந்த அறிவைக் பயன்படுத்தி இருந்தால்கூட, அறிவு பெருகி யாரும் பிடிக்க முடியாத உயரத்திற்குச் செல்லலாம். ஆனால் அந்த ஆர்வத்தை வேறு விடயத்தில் அல்லவா காட்டுகிறோம். எதுவாயினும் இறுதியாக காதலனை அல்லது காதலியை பற்றி தெரியாத விடயமென எதுவும் இல்லை. அதாவது அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, அவர் சாப்பிடாத பொருட்கள் என்னவென எல்லாவற்றையும் பற்றி அறிந்துகொள்கிறார். அதாவது சில சந்தர்ப்பங்களில் தன் காதலன் அல்லது காதலி அடுத்ததாக என்ன சொல்வார் என்றுகூட கணிக்கும் அளவிற்கு தெரிந்து வைத்திருப்பார்.

 

மனதிற்கு தோன்றுவதை கண்ணாடியில் பேசுதல்

உங்கள் மனதில் உண்மையான காதல் ஈர்ப்பு உருவாகும் போது, ​​நீங்கள் அடிக்கடி தனியாக பேசுவீர்கள், கண்ணாடியை அடிக்கடி பார்த்து அவர்களுடன் கதைப்பது போல எண்ணிக்கொண்டு கதைப்பீர்கள். எதுவாக இருந்தாலும் இந்த நிலை முற்றிப்போய் பைத்தியமாக வளராமல் இருக்கும் வரை எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் பரவாயில்லை.