துணிகளை கழுவுவது எவ்வாறு? – இதோ சில டிப்ஸ்

 

கோடை காலத்தில் மழைபெய்யும். மாரி காலத்தில் வெயில் காயும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இப்போதெல்லாம் அந்தந்த காலத்தில் அவை நடைபெறுவதில்லை. எப்போது மழைபெய்யும், எப்போது வெயிலடிக்குமென எதுவுமே தெரியாது. வெயிலடிக்கும்போது சூரியனை திட்டினாலும், மழைபெய்யும்போது அதை நினைத்து வருந்துவோம். குறிப்பாக ஆடைகளை கழுவி காயவைப்பதில் பெரிதும் சிரமப்படுகின்றோம். ஆடைகள் காயாமல் ஒருவகை மணம் வீசவும் தொடங்கும். சரி, ஆடைகளை கழுவுவது முதல் அதனை காயவைத்து மடித்துவைப்பது வரை சில நடைமுறைகளை கையாண்டால் நேரத்தை சேமித்து செலவையும் குறைக்கலாம்.

 

எவ்வாறு துணி துவைக்கின்றோம்?

 

சலவை இயந்திரம் என்பது ஒரு அற்புதமான கருவியாகும். துணி கழுவும் வேலையில் பெரும்பாலான பகுதியை சலவை இயந்திரம் செய்து முடித்து விடுகின்றது. கைகளால் துணிகளை கழுவுவதன் கடினமான வலியை அறிந்த எவரும் இந்த இயந்திரத்தை வாங்கி பயனில்லை என்று சொல்ல மாட்டார்கள். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் பெரும்பாலான வீடுகளில் நேரம் இல்லாததால், அனைத்து துணிகளையும் வார இறுதியில் இந்த இயந்திரத்தின் மூலம் கழுவுகின்றனர். ஆனால் அது உண்மையில் துணிக்கு நல்லதல்ல. ஏனென்றால் சில துணிகளைக் கைகளால் தான் கழுவ வேண்டும். ஏனெனில் அதில் உள்ள பொத்தான்கள் ஒவ்வொன்றும் மெஷினில் இறுக்கமாக அழுத்துவதன் மூலம் மெஷின் சேதமடையக்கூடும். அல்லது துணியின் தன்மையை பொறுத்து அதனை கைகளால் கழுவ வேண்டும். எனவே கழுவ வேண்டிய துணிகளை சரியாக தேர்ந்தெடுத்து, கைகளால் எவ்வளவு கடினமாக இருந்தாலும் கழுவ வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணியும் வீணாகி சலவை இயந்திரமும் பழுதடைந்துவிடும்.

 

டிடர்ஜண்ட் வகைகள்

சலவை இயந்திரத்தில் துணிகளை கழுவினால், நிச்சயமாக டிடர்ஜண்ட் தூள் அல்லது திரவத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் கைகளால் கழுவும் போது சவர்க்காரத்தை பயன்படுத்தி கழுவ முடியும். ஆனால் சவர்க்காரத்தை பயன்படுத்தி கழுவும்போது ஒரு வகையில் அலுப்பையும் வலியையும் தரும். இதனாலேயே பலரும் டிடர்ஜண்ட் தூளை பயன்படுத்தி கழுவும் முறையைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் அதை தேர்வு செய்வதற்கு முன், இதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும். சில டிடெர்ஜண்ட் தூள்கள் மிகவும் காரமானவை. கறைபடிந்த இடங்களை அகற்றுவதற்கு அதிகமான கெமிக்கல்களை அதில் சேர்க்கிறார்கள். இதனால் உங்கள் துணிகளின் பாவனைக்காலமும் விரைவாக குறைந்து விடலாம்.

மேலும், கைகளால் துணிகளை கழுவும்போது, ​​சலவை தூள் போட்டு கழுவும்போது, அதில் உள்ள கெமிக்கலின் கரத்தின் காரணமாக சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுவதும் சாத்தியமாகும். மேலும் உள்ளாடை போன்றவற்றை கழுவும் போது பேபி சோப் போட்டு கழுவுவது நல்லது.

 

ஆடைகளில் உள்ள ‘டேக் வாசிக்கவில்லையா?

நம்மில் பெரும்பாலோர் துணிகளைக் கழுவுவதற்கு முன்பு இதைச் செய்வதில்லை. ஒரு தரமான ஆடையாக இருந்தால் அதன் தோற்பட்டை பகுதியில் அல்லது வேறெங்காவது ஒரு இடத்தில் டேக் இணைக்கப்பட்டிருக்கும். இதனை கட்டாயம் வாசிக்க வேண்டும். அந்த டேக்கை பார்த்தால், உங்கள் துணிகளை எவ்வாறு கழுவுவது, உலர்த்துவது மற்றும் அயன் செய்வது என்பதை தெளிவாக கூறியிருப்பார்கள். ஆடையில் உள்ள துணியைப் பொறுத்து, அவற்றை உலர வைக்கவும். அவ்வாறன்றி நமது வழக்கமான முறையில் கழுவவும் கூடாது.

 

கழுவிய ஆடைகளை வேறுபடுத்துங்கள்

இது இலகுவான டிப்ஸ். துணிகளைக் கழுவுவதற்கு முன்பு அவற்றைப் பிரிப்பது பற்றி பேசினோம். இப்போது துணிகளை நழுவி காயவைத்து எடுத்த பின்னர், எவ்வாறு பிரிப்பதென உங்களுக்குச் சொல்லப்போகிறோம். துணிகளை எல்லாம் கழுவி, காய வைத்தபின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மடித்து வைப்பது கஷ்டமாக இருந்தாலும், சிறு வயது முதலே சிறார்களுக்கு அவர்களது துணிமணிகளை அவர்களிடமே கொடுத்து மடிக்க பழக்கி விட்டால் தாய்மார்களின் வேலைகள் இலகுவாகும்.

 

டெனிம் ஆடைகள்

டெனிம் ஆடைகளை கழுவுவது மிகவும் சிரமமான விடயம்.இப்பொழுதெல்லாம் வீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் டெனிம் அணிவதால் இவற்றை கழுவுவது சற்றும் சிரமமான விடயம். அதனால்தான் அனைவருக்கும் சலவை இயந்திரத்தில் டெனிம் ஆடைகளை ஒன்றாக போட்டு கழுவுகின்றனர். ஆனால் டெனிம் எளிதில் மங்கக்கூடியது, இரண்டு அல்லது மூன்று முறை கழுவும்போது அதன் உண்மையான நிறத்தை இழக்கும். இதனால் ஒரு டெனிமுக்கு நீங்கள் செலவு செய்யும் பணமும் அநியாயமாக போகலாம்.

அதனால் இனிமேல் டெனிம் கழுவும் போது, ​​அதை மறுபுறம் மாற்றி (உள் பக்கத்தை வெளியே போட்டு, வெளிப்பக்கத்தை உள்ளே போட்டு) இயந்திரத்தில் போடவும். இதன் மூலம் மங்குவதையும் நிறத்தை இழப்பதையும் தடுக்கலாம். மேலும், நீரின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு வொஷிங் மெஷின் உங்களிடம் இருந்தால், டெனிமை குளிர்ந்த நீரில் கழுவவும். குறைந்த வெப்பத்தில் காய வைக்கவும். இப்படி செய்வதால் டெனிமின் வடிவம் மற்றும் நிறம் இரண்டையும் பாதுகாத்துக் கொள்ளலாம். ஏனைய உடைகளை போல டெனிமை அடிக்கடி கழுவ வேண்டிய அவசியமும் இல்லை.

 

வினாகிரி மூலம் வெண்மை பெறலாம்

இது ஆடைகளின் நிறத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாகும். உங்கள் துணிகளைக் கழுவும்போது, ​​தண்ணீரில் சிறிது வினாகிரியைச் சேர்க்கவும். இது துணிகளின் நிறத்தையும், வெள்ளை துணிகளை வெண்மையாகவும் வைத்திருக்கும். துணியில் வினிகர் வாசனை ஏற்படும் என்று பயப்பட வேண்டாம். அப்படி வாசனை வராது. அப்படியும் சந்தேகம் இருந்தால், இறுதியாக சில துளி கண்டிஷனரைச் சேர்க்கவும்.

 

சூரிய ஒளியில் காயவையுங்கள்

துணிகளை காய வைப்பதும் ஒரு தலைவலி. குறிப்பாக சூரிய ஒளி குறைவாக இருக்கும் இந்த மழைக்காலத்தில் அது சிரமமான விடயம். உங்கள் கைகளால் கழுவுவதனால் வெயிலிலோ அல்லது காற்றிலேயே காயவைப்பதே ஒரே தீர்வு. சலவை இயந்திரத்தில் கழுவினாலும், வெயில் காலமானால் இயந்திரத்தில் காயவைக்காதீர்கள். இதன்மூலம் சிறிதளவேனும் மின்சாரத்தை சேமிக்கலாம். மேலும் வெயில் காலங்களில் துணிகளை கழுவி விட்டு நன்கு பிழிந்து காயப்போடாமல் சற்று ஈரமாகவே வெயிலில் காயப்போடுங்கள். ஏனென்றால் அப்படி போடும்போது சுருக்கம் இல்லாமல் இருக்கும். மேலும் இலகுவாக அயன் பண்ணவும் முடியும்.

சூரிய வெயில் குறைவாக இருக்கும்போது, ​​கழுவி காய போட்டுவிட்டு, இறுதியாக மீண்டும் ஸ்ப்ரிங் ஒப்ஷன் மூலம் துணிகளை உலர விடலாம்.