புடைவைகள் மற்றும் வெள்ளி வியாபாரத்தின் வளர்ச்சியுடன் இலங்கையில் புதிய உள்ளூர் செல்வந்த கூட்டம் உருவாகியது. இந்த மக்கள் தங்கள் செல்வத்தை முன்னிலைப்படுத்திக்காட்ட பெரிய வீடுகளைக் கட்டத் தொடங்கினர். இந்த வீடுகள் பாணந்துறையிலிருந்து கொழும்பு வரை அமைக்கப்பட்டன. அத்தோடு வெவ்வேறு பகுதிகளிலும் அவர்களின் வீடுகளை மெருகூட்டி கட்டத்தொடங்கினர். அவற்றில் பல மாளிகைகள் இரண்டாவது மற்றும் மூன்றாம் தலைமுறையினரின் காலத்தில் விற்கப்பட்டன. அவற்றின் புதிய உரிமையாளர்கள் மாளிகைகளை இடித்து அந்த இடத்தில் புதிய வீடுகளை கட்டிவிட்டனர். ஆனால் இன்னும் அவ்வாறு எஞ்சியிருக்கும் சில மாளிகை குடியிருப்புகளைப் பற்றி இன்று பார்ப்போம்.
சைஃபி வில்லா
இப்போது குமரதுங்க முனிதாச மாவத்தை என்று அழைக்கப்படும் டர்ஸ்டன் மாவத்தைக்கு தும்முள்ள பகுதியால் நுழையும் போது இடது புறத்தில் இந்த பெரிய மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகை கடந்த காலத்தில் லட்சுமி கிரி என்று அழைக்கப்பட்டது. இந்த மாளிகையை இலங்கையின் மிகவும் பிரபலமான வணிகராக இருந்தவர்களில் ஒருவரான சார்ளஸ் ஹென்றி டி சொய்சா அவர்களின் மகன் கட்டியுள்ளார். அவரது வணிக இழப்புகளைத் தொடர்ந்து, இந்த மாளிகை மற்றொரு பிரபல போஹ்ரா தொழிலதிபர் லுக்மன் ஜீ குடும்பத்திற்கு விற்கப்பட்டது. அப்போதிருந்து இந்த மாளிகை சைஃபி வில்லா என்று அழைக்கப்பட்டது.
டின்டகெல் மாளிகை
ரோஸ்மீட் பிளேஸ் என்று சொல்லும்போது, இலங்கையின் நான்காவது பிரதமரான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க நினைவிற்கு வருவார். காரணம், பண்டாரநாயக்க அவர்கள் ரோஸ்மீட் பிளேஸில் வசித்துள்ளார். ஆனால் இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு ரோஸ்மீட் பிளேஸில் அவர் எங்கு வாழ்ந்தாரென தெரியவில்லை. பண்டாரநாயக்க குடும்பத்தினர், டின்டகெல் ஹவுஸை தங்கள் வீடாகப் பயன்படுத்தினர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் படுகொலைகூட இந்த இடத்தில்தான் நடந்துள்ளது. அதனாலோ என்னவோ இந்த வீடு இன்று பண்டாரநாயக்க குடும்பத்திற்கு சொந்தமாக இல்லை. இன்று இந்த மாளிகை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
ரெஜினா ஹவுஸ்
சொய்சா குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரால் கட்டப்பட்ட இந்த மாளிகை இப்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் செனட் இடமாக பயன்படுத்தப்படுகிறது. சார்ளஸ் ஹென்றி டி சொய்சாவின் மற்றொரு மகனான தோமஸ் ஹென்றி ஆர்தர் டி சொய்சா, இந்த மாளிகையை தனக்கென கட்டியெழுப்பியதோடு, அதற்கு அவரது மனைவி ரெஜினாவின் பெயரை சூட்டினார். துரதிஷ்டவசமாக, மாளிகையை கட்டி முடிக்க முன்னரே அவரது மனைவி ரெஜினா இறக்கவே, மாளிகை கட்டி முடிந்தவுடன் அதனை விற்றுவிட்டார்.
ரிச்மண்ட் மாளிகை
ரிச்மண்ட் மாளிகை இலங்கை மக்களிடையே மற்றும் குறிப்பாக இணைய பயனர்களிடையே பிரபலமான ஒரு மாளிகையாகும். அதற்கு காரணம் இந்த மாளிகையுடன் தொடர்புடைய சோகமான ஒரு கதையே ஆகும். இதை டான் ஆர்தர் டி சில்வா விஜேசிங்க சிரிவர்தன கட்டினார். இதனை இந்திய ராஜ அரண்மனையின் வடிவில் கட்டியுள்ளார். அவரது திருமணத்திற்கு பின்னர் அவருக்கு குழந்தைகள் இல்லாததால், இதனை பொது அறங்காவலரிடம் ஒப்படைத்துள்ளார்.
அக்ரா வலவ்வ – கம்பஹா
1966 இல் வெளிவந்த இயக்குனர் காமினி பொன்சேகாவின் ‘பரசத்து மல்’ திரைப்படத்தை பார்த்தால் இந்த வீட்டை ஒருபோதும் மறக்கமுடியாது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த அரண்மனையில்தான் முழுமையாக நடைபெற்றது. கம்பஹாவில் வசித்த பிரபல சமூக சேவையாளரும், தோட்டக்காரருமான டி.டி.கருணாரத்ன இந்த அரண்மனையை கட்டமைத்து பின்னர் இதனை தனது மகளிடம் ஒப்படைத்தார். அவர் வாரிசு இல்லாமல் இறந்த பின்னர் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட அரண்மனை இப்போது கம்பஹா மாவட்ட செயலகமாக பயன்படுத்தப்படுகிறது.
ஹோரகொல்ல வலவ்வ
ஹோரகொல்ல வலவ்வ எஸ்டேட்டில் இரண்டு மாளிகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நாம் அனைவரும் ஹோரகொல்லா வலவா என்று அழைக்கும் வீடு. அரண்மனை கட்டுவதற்கு முன்பு பண்டாரநாயக்க அவர்களின் குடும்பம் வாழ்ந்த வீடு அதே வளாகத்தில் அமைந்துள்ளது. புதிய மாளிகையின் கட்டுமானத்துடன் பழைய மாளிகை குதிரைகளை நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறகு இந்த வீட்டை புனரமைத்து திருமதி சுனேத்ரா பண்டாரநாயக்க தனது இல்லமாக பயன்படுத்தியுள்ளார். தற்போதுள்ள இந்த புதிய ஹோரகொல்ல வளாகத்தின் உரிமை சந்திரிகா குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்கவுக்கு சொந்தமானது.
மடுமன்வெல்ல வளாகம்
மலையக நாட்டு பிரபுக்களின் செழிப்பான வாழ்க்கையைக் காட்டும் ஒரு தனித்துவமான படைப்பு மடுவன்வெல வளாகம் என்று கூறலாம். அந்த மகத்துவத்தினை இன்றும் ஓரளவிற்கு காணக்கூடியதாக உள்ளது. வரலாற்றுக் கதைகளில் அடிப்படையில், இந்த வளாகத்தில் கடந்த காலத்தில் றன்கோட் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம், இதுபோன்ற நிதி மதிப்புமிக்க விஷயங்களை நாம் காணமுடிவதில்லை. மடுவன்வேலா இறந்த பின்னர் அவரது ஊனமுற்ற மகளை மோசடி செய்து இலங்கையில் ஒரு பிரபல அரசியல்வாதி இந்த அரண்மனையின் செல்வத்தை கொள்ளையடித்ததாக கூறப்படுகின்றது.
இந்த பட்டியலில் இன்னும் பல மாளிகைகள் மற்றும் அரண்மனைகள் சேர்க்கப்பட வேண்டி உள்ளன. அது பற்றி உங்களுக்கு தெரியுமாக இருப்பின் நீங்கள் ஒரு கமெண்ட் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த கட்டுரையை ஷெயார் செய்ய மறக்காதீர்கள்.