ஒன்லைன் வியாபாரம் செய்ய ஆர்வமாக உள்ளீர்களா? – இதைப் படியுங்கள்

 

ஒன்லைன் பிஸினஸ் எனப்படும் வியாபாரம் இலங்கையில் மிகவும் பிரபலமான வணிக முறைகளில் ஒன்றாகும். குறிப்பாக கொரோனா காலத்தில் மிகவும் அமோகமாக இந்த வியாபாரம் இடம்பெற்றது. இந்த வியாபாரத்தை சரியாக செய்தால் சிறந்த இலாபத்தை பெறலாம். ஏதோ செய்ய வேண்டுமென செய்தால் வருமானம் ஈட்ட முடியாது. குறிப்பாக இந்த வியாபாரத்திற்கு நீங்கள் புதிதென்றால் சற்று நிதானமாக நடப்பது நல்லது. காரணம் இதிலுள்ள நுணுக்கங்களை நீங்கள் சரியாக தெரிந்துகொள்ளாவிட்டால், பின்னர் நஷ்டத்தில் விழுந்துவிடுவீர்கள்.

 

ஒன்லைன் வியாபாரம் (ONLINE BUSINESS)

இந்த ஒன்லைன் வணிகம் இலங்கையின் மிக வெற்றிகரமான வணிக முறைகளில் ஒன்றாகும். இது அடிப்படையில் இணையம் மூலம் செய்யப்படுகிறது. இது சமூக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றிலேயே பிரதானமாக செய்யப்படுகின்றது. இத்தகைய ஒன்லைன் வியாபார முறைகள் இன்று மிகவும் பொதுவான விடயமாகிவிட்டது. வேலை வேலையென அலைவோருக்கு வெளியில் சென்று பொருட்கள் வாங்க நேரமில்லை. அது மாத்திரமின்றி சிலருக்கு வீட்டிலிருந்தவாறே சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதனை ஆரம்பிக்க அதிக மூலதனம் இல்லாமல் இலகுவாக தொடங்க முடியும் என்பதும் ஒரு சிறந்த விடயமாகும். ஏனென்றால் வேறு எந்த வணிகத்தையும் போலல்லாமல், இதனை சந்தைப்படுத்த இடம் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே இதனை முன்னெடுத்துச் செல்லலாம்.

 

ந்த பொருட்களை விற்க முடியும்?

ஒன்லைனில் விற்பதற்கு இல்லாத பொருட்கள் இல்லை என்று கூறலாம். இன்று, அரிசி முதல் மசாலா தூள் வரை ஒன்லைனில் வாங்க வசதிகள் வந்துள்ளன. லொக்டவுன் காலத்தில் நாம் வெளியே செல்ல முடியாததால், வீட்டுப்பொருட்களை ஒன்லைனில் ஓர்டர் செய்தல்லவா வீட்டிற்கு கொண்டு வந்தோம். ஆகவே, நீங்கள் ஒன்லைன் வியாபாரம் தொடங்கவிருந்தால், முதலில் எந்த பொருட்களுக்கு நல்ல சந்தைவாயப்பு உள்ளதென்பதைப் பாருங்கள். உதாரணமாக, எம்மில் பலரது வீட்டில் கைக்குழந்தைகள் அல்லது 2 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் இருப்பதால் குழந்தை தயாரிப்புகளை விற்கலாம். ஏனென்றால் குழந்தை பராமரிப்புக்கு தேவையான பொருட்களை வாங்க அடிக்கடி தேவையேற்படும். அப்போது யாரும் வீட்டில் இல்லாவிட்டால், ஒன்லைன் மிகவும் உதவியாக அமையும்.  ஒன்லைன் மூலம் வாங்குவதால் வீட்டிற்கே கொண்டு வந்து தரும் வசதிகள் இருப்பதால் அவர்களுக்கு இலகுவாக இருக்கும். அதனால் நாம் வாழும் இடங்களில் அல்லது மக்களிடத்தே அதிகம் தேவைப்படும் பொருட்களை அறிந்து அவற்றை தெரிவுசெய்து ஒன்லைன் வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

 

விற்பனை பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வது எப்படி?

பொருட்களின் தரத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும். முதலில் ஒரு சிறிய லோகோவை உருவாக்கி, பேஸ்புக் பேஜ் ஒன்றை ஆரம்பியுங்கள். அதில் பொருட்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தை ஆரம்பியுங்கள். பேஸ்புக் பேஜ் மூலம் விளம்பர வசதி இருப்பதால் பேஸ்புக்கில் உள்ள மற்றைய பார்வையாளர்களுக்கு விற்பனை பொருட்களில் சிலவற்றை பூஸ்ட் செய்வதன் மூலம் வாங்குவதற்கு ஊக்குவிக்க முடியும். நீங்கள் ஒரு வலைத்தளம் ஒன்றை உருவாக்கி அதில் உங்களது பொருட்களை அறிமுகம் செய்யலாம். இன்று பலர் இணையத்தைப் பயன்படுத்துவதால், உங்கள் விற்பனை பொருட்களை மக்களிடம் எடுத்துச் செல்வது மிகவும் எளிது. சில தனித்துவமான முறைகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பொருட்களை விற்கலாம். அதற்கு சில சிறிய உதவிக்குறிப்புகளை தருகிறேன். பேஸ்புக்கில் நீங்கள் வீணாக செலவிடும் நேரத்தை உங்கள் வணிகத்தை மேம்படுத்த பயன்படுத்தலாம். பேஸ்புக்கில் பிஸ்னஸ் குரூப்ஸ் அதிகம் உள்ளன. அவற்றில் இணைந்து உங்கள் பொருட்களை அதில் போட்டு வியாபாரம் செய்யலாம். மேலும் ஒரு தனி பேஸ்புக் அக்கவுண்ட்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். பொருட்களை விற்கும்போது உங்கள் பேஸ்புக் பேஜினை விளம்பரப்படுத்த மறக்காதீர்கள். வாடிக்கையாளரிடம் இருந்து முடியுமானவரை நல்லதொரு கருத்தினை (feedback) பெறுவது நல்லது.

 

பணத்தை பெறுவது எப்படி?

​​இலங்கையின் ஒன்லைன் வியாபாரம் “CASH ON DELIVERY” மற்றும் “BANK PAYMENT” ஆகிய இரண்டு வழிகளிலும் மாறியுள்ளது. அதிலும் CASH ON DELIVERY மிகவும் பிரபலமானது. ஆனால் நீங்கள் ஒரு விற்பனையாளராக இருப்பதால் சமாளிக்க வேண்டிய சில சிக்கல்கள் உள்ளன. டெலிவரிக்கு பணத்தை சரியாக தரும் மற்றும் பெற்றுக்கொள்ளும் ஒரு நல்ல கூரியர் சேவையை எவ்வாறு தேர்வு செய்வது, வாடிக்கையாளர் டெலிவரிக்குப் பிறகு பொருட்களை நிராகரிப்பது, டெலிவரி ஓர்டரின் பின் வாடிக்கையாளருக்கு அதனை கொடுக்க முடியாமல் அதனை ப்லோக் செய்தல், கூரியர் சேவை மூலம் பார்சலை வழங்குவதற்கு தாமதப்படுத்துதல் போன்றவை விற்பனையாளர்கள் அனுபவிக்கக்கூடிய சில பிரச்சினைகள். ஆனால் BANK PAYMENTகளில் இவ்வாறான பிரச்சினைகள் குறைவு. ஏனென்றால் பணத்தை வங்கிக்கு போட்ட பின்னரே நாம் பொருட்களை அனுப்புகிறோம். ஆனால் இந்த அமைப்பில், வாடிக்கையாளர் நம்மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். நாமும் அந்த நம்பிக்கையை உடைக்காத படி, எங்கள் சேவைகளை வழங்க வேண்டும். இது இருபுறமும் நேர்மையாக நடக்க வேண்டும்.

 

டெலிவரி சர்வீஸ் (DELIVERY SERVICE)

ஒரு பொருளை விற்பனை செய்யும்போது ​​வாடிக்கையாளருக்கு டெலிவரி முறையை நாங்கள் கட்டாயம் சொல்ல வேண்டும். அடிப்படையில், உங்களது வியாபாரம் முதல் முறையாக இருப்பின், பொருட்களுக்கு ஏற்றவாறு டெலிவரி முறையை அமைத்துக்கொள்ள முடியும். பார்சல் போஸ்ட், கூரியர் சேவை அல்லது சுயமாகவே டெலிவரி செய்யவும் முடியும். இங்கே பார்சல் போஸ்ட் எளிதான முறையாகும். ஆனால் போஸ்ட் செய்யக்கூடிய பொருட்களை மட்டும் பார்சல் போஸ்ட் செய்ய முடியும். அதுவே ரெஜிஸ்டர் போஸ்டில் அனுப்பினால், கிராமிற்கு ரூ.45 இலிருந்து ஆரம்பிக்கும். அதுவே ஒரு கூரியர் சேவை மூலம் டெலிவரி செய்வதென்றால் கிலோவிற்கு நீங்கள் ரூ.300 வரை செலுத்த வேண்டும். மேலும் இந்த டெலிவரி கட்டணத்தை விற்பனை பொருளுடன் சேர்த்து பெற்றுக்கொள்வதா அல்லது அதை தனியாக எடுப்பதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

 

பொருட்களை பொதி செய்யும் முறை (PRODUCT PACKAGING)

விற்பனை பொருட்களை அனுப்புவதானால் அதனை சரியாக பொதி செய்து அனுப்ப வேண்டும்.வெளிப்புற அழுத்தத்தால் பொருள் சேதமடையாமல் பார்த்துக் கொள்வது எமது பொறுப்பாகும். பொம்மைகள் அல்லது உடையும் பொருட்களை ஒரு ஸ்பொஞ்ச் பெட்டியில் அல்லது தபால் நிலையத்திலிருந்து பெறக்கூடிய சிறப்பு உறைகளில் போட்டுக் கொடுக்கலாம். பெரிய பார்சல்களை நன்கு பொதிசெய்ய வேண்டும். சில பேக்கிங் பார்சல்கள் தபால் நிலையத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. பார்சலை பேக்கிங் செய்ய முன் நாங்கள் போஸ்ட் செய்ய இருப்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும். பின்னர் நீங்கள் அதனை ரெப்பிங் செய்து, எடைக்கேற்ப பணத்தை செலுத்தி அனுப்ப முடியும். நீங்கள் ஒரு கூரியர் சேவையைப் பெற்றால், அவர்கள் சொல்லும் முறையில் பேக்கேஜிங் செய்து அனுப்பலாம். இவற்றை பேக்கேஜிங் செய்யும்போது, ​​உங்கள் வணிகத்தை விளம்பரப்படுத்த எப்போதும் வணிக அட்டை அல்லது ஸ்டிக்கரை அனுப்ப மறக்காதீர்கள். இலாபம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தால் ஒரு சிறிய பரிசை அனுப்பினால், வாடிக்கையாளர் நிச்சயமாக உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்.