1960 களில் உலக மக்கள் தொகை சுமார் 4 பில்லியன் மட்டுமே ஆகும். அந்த நேரத்தில், உலகில் பலர் சாப்பிடுவதற்கும் வழியின்றி வாழ்ந்தனர். ஆனால் தற்போது உலக மக்கள் தொகை 8 பில்லியனுக்கும் அதிகமாகும். ஆனால் இப்போது தொழிநுட்பத்தின் உதவியோடு பெரும்பான்மையான மக்கள் தங்களுக்குத் தேவையான உணவைப் பெறுகிறார்கள். ஆயினும் உலகின் பெரும்பாலான மக்கள் சாப்பிடும் உணவு தொடர்பாக இன்று பார்ப்போம்.
கோழியிறைச்சி
கோழி என்பது அன்று முதல் இன்று வரை உலகின் மலிவான இறைச்சி வகையாகும். இன்று அமெரிக்காவில்கூட, கோழியிறைச்சியின் விலை அதிகமல்ல. இப்பொழுதெல்லாம் கோழிகள் 20 நாட்களில் பெருத்து விடுகின்றன. கோழிகளை மனிதன் மிக விரைவாக மேம்படுத்தியுள்ளான். மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது கோழியை குறுகிய காலத்திற்குள் இறைச்சியாக மாற்றி சாப்பிடுவதை அறிவியல் சாத்தியமாக்கியுள்ளது. இதனால்தான் இந்தியா போன்ற அதிகம் சைவ உணவு சாப்பிடும் பல நாடுகளில்கூட இது மிகவும் பிரபலமாக உள்ளது.
முட்டை
முட்டைகளுடன் பரிமாறப்படும் உணவுகள் அதிகம். முட்டை புரதச்சத்து நிறைந்த மலிவான உணவு. முட்டைகளிலுள்ள ஊட்டச்சத்தை பெற நீங்கள் மீன் அல்லது இறைச்சியை உட்கொண்டால், அதற்கு அதிக செலவாகும். இலங்கையில்கூட, முட்டையின் விலை அதிகமில்லை. சாப்பிட வெளியே சென்றாலும், பெரும்பாலான கடைகளில் இறைச்சி மற்றும் மீன் உணவுகளுடன் முட்டைகளும் சேர்த்தே பரிமாறப்படுகின்றன. கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் என்றாலும் முட்டை கொத்து அல்லது முட்டை பிரைட் ரைஸ்தான் அதிகம் விற்பனையாகும்.
சோறு
அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தை தவிர உலகத்தில் உள்ள அனைத்து கண்டங்களிலும் உணவு பட்டியலில் அரிசிதான் சோளத்திற்கு அடுத்தபடியாக உள்ளது. அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற ஐக்கிய நாடுகளிலும் அரிசி பயிரிடப்படுகிறது. சோறு மற்றும் கறிகளுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடுவதற்கு இலங்கை பழக்கமாகிவிட்டது. ஆனால் இந்தோனேசியாவில் சோறு நாசி குரான் என்று அழைக்கப்படும் பிரைட் ரைஸாக சாப்பிடுகின்றனர்.. சீனாவில் நாம் சாப்பிடும் அளவுக்கு சோறு சாப்பிடுவதில்லை.
பாஸ்தா
இலங்கையில் பாஸ்தா சாப்பிடுவோரின் அளவு மிகக்குறைவு. கிராமப்புறங்களில், பாஸ்தா கடைகளில் விற்பனைக்கு இருப்பதும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் தேசிய உணவைப் போல பாஸ்தா அதிகமாகவும் பிரபலமாகவும் சாப்பிடக்கூடியது. பாஸ்தா கோதுமை மாவில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பாஸ்தா உணவுகளை உலகம் முழுவதும் பல வடிவங்களில் செய்து பல வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றனர்.
பீட்ஸா
இத்தாலிய உணவான பீட்ஸாவை 13% அமெரிக்கர்கள் தினசரி உணவாக சாப்பிடுகிறார்கள். இலங்கையில் சாதாரண பீட்ஸா ஒன்று சுமார் 1000 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. அந்தவகையில் பீட்ஸா ஒரு பணக்கார உணவுதான். ஆனால் சில நாடுகளில், பீட்ஸா பொதுவான ஒரு காலை உணவாகும். அந்த நாடுகளில் பீட்ஸா விற்கக்கூடிய பாஸ்ட் புட் உணவகங்கள், எமது நாட்டில் நாம் டீ குடிக்கும் கடைகளைப் போன்றதாகும். அதாவது நாம் டீயை குடித்து ஒரு வடையைக் கடிப்போம். அதேபோல் அவர்கள் கடைக்குச் சென்று பீட்ஸா சாப்பிடுகின்றனர்.
ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் உலகின் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை நம் நாட்டில் பலரும் வண்ண வண்ண ஐஸ்கிரீம்களை சாப்பிட விரும்புகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, இறந்த வீடுகளை தவிர எமது நாட்டில் எல்லா நிகழ்வுகளிலும் வெணிலா ஐஸ்கிரீம் ஒரு பொதுவான இனிப்பாக காணப்படுகின்றது. கொரோனாவினால் வெசாக் தன்சல்களை காண முடியாமல் போனது. இல்லையென்றால் நாடு பூராகவும் செய்யும் வெசாக், பொசன் தன்சல்களில் ஐஸ்கிரீம் இருக்கும். எமது நாட்டில் ஒரு குறிப்பிட்டளவு ஐஸ்கிரீம்கள்தான் உள்ளன. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்வேறு வகையான ஐஸ்கிரீம் வகைகள் உள்ளன.
பால் உணவுகள்
இலங்கையில் பால் மா மிகவும் பிரபலமாக உள்ளது. சிலருக்கு காலையில் ஒரு கப் பால் டீ இல்லாமல் படுக்கையில் இருந்துகூட எழுந்திருக்க முடிவதில்லை. பால் என்பது நம் நாட்டிலும் இந்தியாவிலும் பிரபலமான உணவாகும். ஆனால் இந்தியாவில் உள்ள மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு அருகிலுள்ள பண்ணையிலிருந்து கறந்த பாலை வாங்கியே காலையில் குடிப்பார்கள். பட்டர், பால், தயிர் போன்றவை உலகம் முழுவதும் உள்ளன. நியூசிலாந்தில் ஒரு பசுவிலிருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 20 லீற்றர் பாலை கறக்க முடியும்.