பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டுமா? – இவற்றைக் கடைப்பிடியுங்கள்

 

உண்மையான நட்பு காலத்தால் பிரியாததாகும். அது, கல்வெட்டு போல ஆயுள் முழுதும் அழியாது அப்படியே தொடரும். நல்ல நண்பன் ஒருபோதும் கோபப்பட மாட்டான் என்று அர்த்தமல்ல. மிகவும் நெருக்கமாக பழகியவர்கள் திடீரென கோபித்து கொண்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களின் பின்னர் அவர்களின்றி உங்களால் தனியாக இருக்க முடியாதென தோன்றினால் அவர்களுடன் மீண்டும் நட்பை தொடர்வது எப்படியென இன்றைய பதிவில் சில தகவல்களை கொண்டுவந்துள்ளோம். நல்ல நண்பன் கிடைப்பது வரமாகும். ஆகவே அவ்வாறான நட்புகளை எப்போதும் இழந்துவிடாதீர்கள்.

 

கோபத்திற்கான காரணம்

சில சந்தர்ப்பங்களில் நாம் கோபப்பட்டதைப் பற்றி சிந்தித்து பார்த்தால், அது மிகவும் நியாயமற்றதென பின்னர் தோன்றும். உதாரணமாக நீங்கள் எங்கேயாவது வெளியே கூப்பிட்டு, அவர் வர மறுப்பு தெரிவித்திருக்கலாம். அல்லது பரீட்சையின் போது விடைத்தாள் கேட்டதற்கு காட்டாமல் தவிர்த்திருக்கலாம். அல்லது கடனாக எவ்வளவு சரி கேட்டு இல்லையென கூறியிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் கோபிப்பதற்கு முன்னர் சற்று சிந்திக்க வேண்டும். அவரிடம் உங்களுக்கு அவசரமாக தருமளவுக்கு கைவசம் பணமில்லாமல் இருந்திருக்கலாம். அதேபோல பரீட்சையின் போது பரீட்சகர் அருகிலிருந்து கண்காணித்திருக்கலாம். அதனால் அவர்களின் சூழ்நிலைகளையும் கவனத்திற்கொள்ள வேண்டும். நிலைமை எதுவாக இருந்தாலும் எதற்காக இவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

அடுத்ததாக உண்மையில் நீங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கத் தகுதியானவர்களா என சிந்தியுங்கள். குறிப்பாக அவர் ஒரு உண்மையான நண்பராக இருக்கலாம். அவரால் நிறைய பயன்களை பெற்றிருக்கலாம். அவ்வாறாயின் அந்த உன்னதமான நட்பை விட்டுவிடாதீர்கள்.

 

கற்பனை வேண்டாம்

நாம் பெரும்பாலும் சுயமாக கற்பனை செய்து சில வேளைகளில் அவை தவறாக அமையலாம். ஏனென்றால், இதுதான் நடந்திருக்கும், இதனால் தான் இவன் கோபித்திருப்பான் என்று நாம் கற்பனையில் கருதினால், அந்த அனுமானம் தவறாக இருக்கலாம். அதனால் நண்பரின் பக்கத்தில் நியாயத்தை கேட்கும் வரை நீங்கள் ஒருபோதும் சொந்தமாக முடிவுசெய்ய வேண்டாம்..

 

மன்னிப்பு

மன்னிப்பு கேட்பதில் பலருக்கு உடந்தையில்லை. மன்னிப்பு கேட்பதானது நீங்கள் ஏதாவது தவறு செய்துள்ளீர்கள் என்பதை ஒப்புக்கொள்வதாகும். நண்பர்கள் மீண்டும் வேண்டுமென்று நினைத்தால் நீங்கள் மன்னிப்பு கேட்டாக வேண்டும். நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, அதே அவன் தவறு செய்திருந்தால், அவன் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பான். மறுபுறம், சில நேரங்களில் நண்பர் தன்னால் தவறு செய்ததை உணரலாம். அதேபோல அவர் மன்னிப்பு கேட்டால், அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களுக்கும் நாம் முழுமையாக தயாராக இருந்தால் மட்டுமே நாம் நண்பருடன் பேச முடியும்.

 

நண்பருடன் பேசிப்பார்ப்போம்

நேரடியாக பேசுவதே இதற்கான சிறந்த தீர்வாக அமையும். நீங்கள் நண்பரை மொபைல் மூலம் அழைக்கலாம். அவர்களுடன் நேரில் பேச முடிந்தால் மிகவும் நல்லது. ஆனால் மற்றொரு சிக்கல் இதில் இருக்கலாம். நண்பர் எங்களுடன் பேசவோ அல்லது நேராக சந்திக்கவோ மறுக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இதனை நாம் ஒரு கடிதம் மூலம் எழுதலாம். அல்லது ஒரு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். இந்த செய்தியை நீங்கள் மெசேஜ் மூலம் எழுதி வைக்கலாம். இவை எதுவும் சாத்தியமில்லை என்றால், மூன்றாவது நபர் அல்லது உங்கள் இருவருக்கும் பொதுவாக ஒரு நண்பர் இருந்தால் அவரை இதில் ஈடுபடுத்தலாம். இருப்பினும், இந்த விடயத்தை தவிர்க்க முடியாது.

 

என்ன பேசுவது?

எல்லாம் சரி. தொலைபேசியின் மூலம் அல்லது நேராக சந்திப்பதன் மூலம் ஒரு நண்பருடன் தொடர்புகொள்வதற்கான வழியை எப்படியாவது கண்டுபிடிக்க முடிந்தது. இப்போது உண்மையில் கோபித்த நண்பனோடு என்ன கதைப்பது? கதைக்க இருப்பதை ஆரம்பிக்க வானிலையை பற்றி பேசி ஆரம்பிக்கலாம். ஆனால் நீண்ட நேரம் சுற்றி வளைப்பது நல்லதல்ல. நேராக பேசுவதை பேசுவது நல்லது. இங்கே, நேர்மை மற்றும் உண்மை மிக முக்கியமாக இருக்க வேண்டும். நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கையில் அவரை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்கள் என்று அவரிடமே நேரடியாகச் சொல்லுங்கள். நீங்கள் அவரை எவ்வளவு மதிக்கிறீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். நண்பரை மீண்டும் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லுங்கள். நேர்மையாக, என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுங்கள். பேசும்போது உங்கள் நியாயத்தை நேர்மையாக சொல்ல முனைவது போல அவரது பேச்சையும் முழுமையாக கேளுங்கள்.

 

வெளிப்படையாக பேசுங்கள்

வெளிப்படையான மற்றும் நேராக பேசும் உரையாடல்களுக்கு வரும்போது, ​​என்ன நடந்தது என்பதை நீங்கள் இருவரும் உணர்வீர்கள். ஒரு நபர் தவறு செய்தால், அவர் அல்லது அவள் மன்னிப்பு கேட்கலாம். நாம் மீண்டும் அப்படி செய்ய மாட்டோம் என்று சொல்லலாம். ஆனால் சில நேரங்களில், தவறு செய்தது நண்பராக இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்க விரும்பாவிட்டாலும் பரவாயில்லை. அவற்றை தவிர்த்து மீண்டும் நட்பை தொடங்க முயற்சிக்கவும். ஆனால் நட்பை இழக்க காரணமாக இருக்கும் விடயத்தை நாம் பேசி தீர்வு கண்டு முடிக்க வேண்டும். “அதை மறந்து விடுவோம்” என்பதை சொல்ல வேண்டாம். அது வேறு எங்காவது இருந்து மீண்டும் எழக்கூடும்.

 

நிபந்தனைகள் என்ன?

சில நேரங்களில் நீங்கள் இந்த நட்பை மீண்டும் தொடர முடிவு செய்கிறீர்கள் என்றாலும், முன்பிருந்தது போல வைத்திருக்க முடியாது. இது உங்கள் இருவருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக உணர வைக்கும். பரவாயில்லை அதற்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள். ஆனால் நடிக்க மட்டும் வேண்டாம். நீங்கள் நினைப்பதில் செய்வதில் நேர்மையாக இருங்கள். பின்னர், காலப்போக்கில் நட்பு அதன் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

அந்த கோபத்திற்கு கரணம் எங்கள் பிழை என்றால், நண்பர் எங்களை மன்னிப்பார், ஆனாலும் அவர் இன்னும் கொஞ்சம் கவனமாக இருப்பார். ஏனென்றால் நாங்கள் மீண்டும் அதே தவறை செய்வோம் என்று சந்தேகிப்பதனாலேதான். கவலைப்பட வேண்டாம். மெதுவாக நட்பும் நம்பிக்கையும் மீண்டும் வளர கால அவகாசம் வழங்குங்கள்.

ஆனால் அவருடன் மீண்டும் நட்பு வைத்துக்கொள்ள நிபந்தனைகளை விதித்தால் அந்த நட்பு அர்த்தமற்றது என்பதை நீங்கள் ஒரு கட்டத்தில் உணர வேண்டும். எனவே, நீங்கள் அந்த நட்பை விட்டுவிட வேண்டும். அதையும் நினைவில் கொள்ளுங்கள்.