கொலஸ்ட்ரோலை விரைவாக கரைக்கும் உணவுகள் (பகுதி-01)

 

கொலஸ்ட்ரோல் (Cholesterol) என்பது உயிரணு மென்சவ்வுகளில் காணப்படும் மெழுகுத்தன்மையுள்ள ஸ்ட்ரெய்ட் எனப்படும் ஒரு வகை கொழுப்புப் பதார்த்தமாகும். உடலில் கொலஸ்ட்ரோல் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாகும். இவற்றால் பல உடல் உபாதைகளையும் சந்திக்க நேரிடும். உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில பொருட்களை உணவில் சேர்த்து பயன்பெறலாம்.  அவ்வாறான சில உணவுப்பொருட்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

 

முழு தானியங்கள்

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

 

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் அதிகமாக உள்ளது. இது இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

 

சோயா உணவுப்பொருட்கள்

சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது. சோயா உணவுப் பொருட்களான சோயா பால் மற்றும் டோஃபு ஆகியவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 8 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது.  எனவே சோயா பொருட்களை எடுத்துக் கொண்டால், உடல் நல்ல வலுவுடன் இருக்கும்.  கெட்ட கொழுப்புக்கள் கரையும்.

 

ஆப்பிள்

ஆப்பிள்களில் விட்டமின் `சி’  மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலின் அளவு குறையும்.

 

நட்ஸ்

நட்ஸில் ஒமேகா  3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால்,  இது கெட்ட கொலஸ்ட்ரோலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை  உட்கொண்டு,  இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

 

பார்லி

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால்,  இதனை உண்டால்  உடலில் உள்ள கொலஸ்ட்ரோல் அதிகரிப்பது தடைபடுவதோடு,  கொலஸ்ட்ரோலும் கரைந்து விடும்.

 

ஓட்ஸ்

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால்,  உடலில் கொலஸ்ட்ரோலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ரோலின் அளவும் குறையும்.

 

மார்ஜரின்

மார்ஜரின் வெண்ணெய்க்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ரோலைக் குறைக்கும் பொருள் அதிகமாக உள்ளது.

 

அவகாடோ / ஆனைக்கொய்யா

அவகாடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று நினைக்கலாம்.  ஆனால் உண்மையில், அவகாடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ரோலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரோலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

 

பீன்ஸ்

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகமுண்டு. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன்,  அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால்,  இதனை தண்ணீரில் வேக வைத்து,  அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.