2020 ஆம் ஆண்டை சந்தோசமாகவே ஆரம்பித்தோம். பிறகு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அழிவுகள் ஏற்பட்டன. பின்னர், ஒட்டுமொத்த உலகையே கொரோனா என்ற கொடிய அரக்கன் தனது ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டான். கொவிட்-19 எனப்படும் இந்த வைரஸ் உலக நாடுகளையே இன்று உலுக்கி வருகின்றது. சற்று சறுக்கினாலும் இந்த தொற்றுநோயை இலவசமாக பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும்.
சரி, கொரோனா வந்த பின்னர் முகக்கவசம் தற்போது அவசியமாகிவிட்டது. சிலர் விதிமுறைகளை மீறி வருவதால், இனி முகக்கவசம் அணியாவிட்டால் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என அரசாங்கம் அண்மையில் அறிவுறுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இது அவசியமாக இல்லாவிட்டாலும், உலக நாடுகளில் காணப்படும் இந்த நோய் தீவிரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்ப்பரவலை தடுக்க முகக்கவசம் மிகவும் அவசியம். ஆனால், இதனால் பலர் அசௌகரியங்களையும் எதிர்நோக்குகின்றனர்.
சிரிக்கிறாரா அல்லது முறைக்கிறாரா?
கொரோனா வந்து முகக்கவசம் போட்டு வெளியே செல்ல ஆரம்பித்த பின்னர் முன்னரைப் போல தெரிந்தவர்களை பார்த்து சிரிக்கின்றீர்களா? இல்லைதானே? முன்பு தெரிந்தவர்களை வீதிகளில் கண்டால் புன்னகைப்போம். ஆனால் இந்த கொரோனவினால் மக்களிடையே உள்ள பாதுகாப்பின் காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் முகக்கவசம் போட்டு வெளியே செல்வதால் சிரிக்கின்றார்களா முறைக்கின்றார்களா என எதுவும் தெரியாது. அப்படி வழமையாக பிறரை கண்டு புன்னகைத்து பழகிய நாம், புதிதாக தலையை அசைப்பது, கைகளால் சைகை செய்வது போல பலவற்றிற்கு பழகியுள்ளோம். எதுவாக இருந்தாலும் புன்னகைத்து ஒருவருடன் நட்பாக பார்ப்பதுபோல வராதல்லவா? அந்தவகையில், மக்களுடனான நட்புறவுகளுக்கு முகக்கவசம் தடையாகவே உள்ளது. அதற்காக கழற்றி வீசிவிடாதீர்கள் மக்களே! பாதுகாப்பு முக்கியம்.
மேக்கப்
முகக்கவசம் போடும் இடத்தை தவிர்த்து ஏனைய இடங்களுக்கு மாத்திரம் மேக்கப் போட முடியாது தானே? முழுமையாக மேக்கப் போட்டுத்தான் ஆகவேண்டும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் அழகாக வீட்டிலிருந்து மேக்கப் போட்டுக்கொண்டு சென்று பின்னர் அலுவலகத்தில் சென்று கழற்றும்போது பாதி மேக்கப் முகக்கவசத்தில் ஒட்டிவிடுகின்றது. அதற்காக மீண்டும் மேக்கப் போட முடியுமா? முடியும். இனி சற்று நேரத்தோடு அலுவலகத்திற்குச் சென்று அங்கே மேக்கப் போட்டுக்கொள்ளுங்கள்.
ஒரே மாஸ்க் ஒரு மாத காலம்
பேஸ்மாஸ்க் என்று பலரும் இன்று பாவிக்கும் சர்ஜிக்கல் மாஸ்க் ஒரு சில மணித்தியாலங்கள் மாத்திரமே பயன் தரக்கூடியது. ஆனால் எமது நாட்டில் அவை பல நாட்கள் வரை பாவனையில் உள்ளன. ரீயூசபல் மாஸ்க்ஸ் அதாவது மீண்டும் பாவிக்கக்கூடிய முகக்கவசம் மட்டுமே மீண்டும் மீண்டும் பாவிக்கக்கூடியது. சிலர் ஒரு தடவை மாத்திரம் பாவிக்கக்கூடிய முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் அதன் நிறமே மறைந்து போகும்வரை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தி இல்லாத புதிய நோயை தேடிக்கொள்ளாதீர்கள்.
மூச்செடுக்க முடியலடா சாமி!
இது சிலருக்கு உண்மையாகவே பிரச்சினைதான். முகக்கவசத்தைப் போடும்போது, சிலருக்கு சுவாசிப்பது கடினம் என்று நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தின் காரணமாக, சுவாசிப்பது கடினம் என்று உணர ஆரம்பிக்கலாம். பின்னர் முகக்கவசத்தை அணிந்தும் அதை மூக்கிற்கு கீழே வைத்திருப்பார்கள். அப்படிச் செய்யாதீர்கள். நோய் எப்படி தாக்குமென தெரியாதல்லவா? ஆகவே முகக்கவசத்தை முழுமையாக அணியுங்கள். முகக்கசத்துடன் சுவாசிக்க பழகிக்கொள்ளுங்கள்.
பகலிலும் பனிமூட்டம்
கண்ணாடி போடுபவர்களுக்கு இந்த பிரச்சினை காணப்படுகின்றது. இது கண்ணாடிகளுக்கு மட்டுமல்ல, சன்கிளாஸுக்கும் பொருந்தும். இப்போது முகக்கவசத்தை அணிந்து கொண்டு கண்ணாடிகளையும் அணிகின்றோம். இரண்டு முறை சுவாசிக்கும்போதே கண்ணாடியின், உட்புறமெல்லாம் ஆவி போல படிந்து விடும். கண்ணாடியில் நேரடி மூடுபனி போல உருவாகத் தொடங்குகிறது. இதனால் கண்ணாடி அணிபவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கண்ணாடி, சன்கிளாசஸ் போன்றவரை போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு இது இன்னும் கடினமாக இருக்கும்.
தோல் பிரச்சினை
சிலர் நாள் முழுவதும் முகமூடி அணிந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒப்பீட்டளவில் மென்மையான சருமம் கொண்ட பெண்கள் தோல் வெடிப்பு, கொப்புளங்கள், வியர்க்குரு மற்றும் முகப்பரு போன்றவற்றிற்கு ஆளாவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலருக்கு முகக்கவசம் அணியும் போது அரிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரே முகக்கவசத்தை துவைக்காமல் அதையே தொடர்ந்து பாவிக்கும் போது சருமப்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எதுவும் வருமுன் காப்போம்.