கலந்துரையாடல் என்பதை விட “மீட்டிங்“ என்று கூறினால்தான் எல்லோருக்கும் விளங்கும். இந்த வார்த்தையை கேட்கும்போதே சிலருக்கும் தூக்கமும் அலுப்பும் வரக்கூடும். சில வேலைத்தளங்களில் மீட்டிங் வைத்தால் அது எரிச்சலை தரக்கூடும். இன்னும் சில வேலைத்தளங்களில் மீட்டிங் எப்போது வைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள். பணி எவ்வளவு முக்கியமானது என்பதை விட ஒரு குழு கூடி அதைப் பற்றி பேசுவதும் கேட்பதும் மிகவும் முக்கியமானது. எதுவாயினும், மீட்டிங் என்று வந்தால் அதில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு மதிப்பை அதிகரித்துக்கொள்ளலாம் என்பது தொடர்பான சில டிப்ஸ்களை இன்று கொண்டுவந்துள்ளோம்.
ஸ்மார்ட் லுக்
ஆடைகளை மாத்திரம் வைத்து மக்களை அளவிட முடியாது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக, இது வேறு எந்த இடத்தில் பொருந்தினாலும் அலுவலகத்தில் பொருந்தாது. அழகாகவும், நேர்த்தியாகவும், தொழில் ரீதியாகவும் உடையணிந்தால், அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரக்கூடும். அதேபோல ஆடைக்கு ஏற்ற நடத்தையும் இருக்க வேண்டும். நீங்கள் அழகாக ஆடை அணிந்து ஒரு முட்டாள் போல் நடக்க முடியாது. அழகாக உடையணிந்து, நல்ல முறையில் பேசுவதும் பழகுவதும் அலுவலகத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக நிர்வாகத்துடனான சந்திப்பில் உங்கள் மதிப்பு கூடும்.
நேர முகாமைத்துவம்
நரகத்திற்குச் செல்வதென்றாலும் நேரங்காலத்தோடு செல் என்ற வாய்மொழி ஒன்றும் உள்ளது. அதற்கு சமமான முக்கியமான ஒன்றுதான் இது. நீங்கள் ஒரு மீட்டிங்கிற்குச் சென்றால், குறைந்தது மீட்டிங் ஆரம்பிக்க ஐந்து நிமிடங்களுக்கு முன்னராவது செல்ல முயற்சிக்கவும். இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் நடந்து வந்து படிக்கட்டுகளில் ஏறி, மீட்டிங் ரூமிற்குள் வந்து சற்று இளைப்பாறலாம். சில நேரங்களில் மீட்டிக் ரூமிற்குள் AC இருக்கலாம். தமக்கு சொகுசான இடத்தில் அமரலாம். மீட்டிங்கில் நீங்களும் ஏதாவது பேச, ப்ரெசன்ட்டேஷன் செய்ய இருந்தால், மீட்டிங் ரூமிலேயே ஒரு ஒருத்திகை பார்த்துக்கொள்ளலாம். இவை அனைத்திற்கும் மேலாக உங்கள் மீது முகாமைத்துவத்திற்கு நம்பிக்கை வரலாம். இதுவே நீங்கள் நேரம் கடந்து வந்தால் உங்கள் மீது ஒரு பொறுப்புணர்வற்ற நபர் என்ற பட்டத்தை சுமத்திவிடவும் கூடும். வியர்வை வடிய வடிய வந்து, அமர்வதற்கு சரியான இடம் கிடைக்காமல் ஏதோ ஒரு மூளைக்குள் அமர்ந்து மீட்டிங்கை கவனிப்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை.
பிசி
உங்களை மற்றவர்களிடத்தில் தனித்துவமாக எடுத்துக்காட்ட நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை இங்கே சொல்லவுள்ளோம். மீட்டிங்கிற்கு நேரத்தோடு செல்வோம். மீட்டிங் தொடங்கும் வரை ஒருசிலருடன் அமர்ந்து நாட்டு நடப்புகள், நட்பு ரீதியான விடயங்கள் ஆகியவற்றை பேசுங்கள். குறிப்பாக “இந்த மீட்டிங் முடிந்தவுடன் இன்னொரு முக்கியமான மீட்டிங் ஒன்றிற்கு செல்ல வேண்டும்” என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால் “முக்கியமான ஒரு நபரை சந்திக்க வேண்டி உள்ளது” இவ்வாறுகூட சொல்லலாம். இது பொதுவாக மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் செய்பவர்களுக்கே பெரிதும் பொருந்தக்கூடியது. இவ்வாறு கூறுவதன்மூலம் நீங்கள் பிசியான நபர் என காட்டிக்கொள்ளலாம். தேவையற்ற இழுத்தடிப்புகளும் இருக்காது. மீட்டிங் முடிய அங்கிருந்து கழன்றுவிடலாம்.
அடிக்கடி கேள்வி கேளுங்கள்
மீட்டிங்கில் உற்சாகத்துடன் செயற்படுங்கள். அடிக்கடி சந்தேகங்களை கேட்டு தீர்த்துக்கொள்ள வேண்டும். வெறுமனே அங்கிருப்பதை சாப்பிட்டுவிட்டு வருவது மட்டும் கூடாது. சாப்பிட்டதன் பலனை அங்கேயே காட்டிவிடவும் வேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும் அடிக்கடி கேள்வி கேட்பது சரியானது. நீங்கள் அந்த மீட்டிங்கில் மிகுந்த ஈர்ப்போடு இருக்கிறீர்கள் என்றும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதனால் நீங்கள் அதில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று முகாமைத்துவம் கருதும். யாராவது பவர் பொயிண்ட் பிரசண்டேசன் வழங்கினால் அவற்றின் உள்ளடக்கங்களை கேள்வி கேட்கவும். இன்னொரு முறை காட்டுமாறும் கேட்கலாம். விளக்கம் கேட்கவும். ஆனால் முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காமல் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
முகபாவனை
மேலே கூறியது போலவே இதுவும் முக்கியமானது. நீங்கள் மீட்டிங்கில் பேசுவதை கேட்கவில்லை என்றாலும், நீங்கள் கேட்பது போல நடிக்க வேண்டும். நன்றாக பேசும் நபரைப் பாருங்கள். அடிக்கடி தலையை அசையுங்கள். நீங்கள் பேனா, புத்தகம் அல்லது மடிக்கணினி அல்லது டேப்லெட்டைக் கொண்டு வந்தால், அவர்கள் சொல்வதை பதிவு செய்கிறீர்கள் என்று பாசாங்கு செய்யுங்கள். இது அந்த மீட்டிங் உங்களுக்கு பயனற்றது அல்லது ஆர்வமில்லை என்றால் மாத்திரம் இவ்வாறு செய்யுங்கள். மற்றபடி முறையாக செவிமடுத்து சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சாரம்சம்
மீட்டிங் என்பது உண்மையில் உங்களுக்கு ஒரு பொருட்டாகவும், மதிப்பாகவும் இல்லையென்றாலும் பரவாயில்லை. மீட்டிங் முடிந்ததும் அல்லது மீட்டிங்கிற்கு உங்களை அழைத்த நபரிடம் மீட்டிங்கில் பேசியவரின் சாராம்சத்தை பற்றி கேளுங்கள். இதன் மூலம் மீட்டிங்கின் மீது நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள் என்று எல்லோரும் உணரலாம். நீங்கள் உண்மையிலேயே மீட்டிங்கை கேட்காமல் இருந்திருந்தாலும் இதன் மூலம் உங்களுக்குத் தேவையான சில முக்கியமான புள்ளிகளின் சுருக்கத்துடன் இது வருகிறது. இரண்டு வேலைகளையும் இதன் மூலம் உங்களுக்கு செய்ய முடியும்.