ஃபேஷன் பற்றி பேச விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கின்றார்களா? தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், ஃபேஷன் என்ற விடயத்தில் பெண்களே அதிக ஆர்வம் காட்டினர். ஆனால் இப்போதெல்லாம், ஃபேஷன் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்றாக மாறியுள்ளது. இன்று நாம் பெண்கள் உதடுகளுக்கு பூசிக்கொள்ளும் லிப்ஸ்டிக் பற்றி பேசப்போகிறோம். ஆண்களே இது பெண்களுக்கான பதிவென ஓடிவிடாதீர்கள். நீங்களும் படித்துவிட்டு உங்கள் காதலி, சகோதரி என உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இதுபற்றி கூறுங்கள்.
லிப்ஸ்டிக் என்றால் என்ன?
லிப்ஸ்டிக் என்றால் என்னவென்று யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். தமிழில் இதனை உதட்டுச்சாயம் என கூறுவார்கள். ஆனால், ஆங்கில பெயரையே அனைவரும் அறிவர். லிப்ஸ்டிக்கை பயன்படுத்தாவிட்டாலும் இதுபற்றி அறிந்தோர் அதிகம். ஆனால் இந்த வார்த்தையின் தவறான உச்சரிப்பு காரணமாக பலரும் தவறாகவே கூறுகின்றனர். லிப்ஸ்டிக்கை பயன்படுத்தும் பெண்களும் “லிப்டிக், லிப்டிப், லிஸ்டிக்” என்று கூறுகின்றனர். ஆனால் அதன் அர்த்தத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், இது முற்றிலும் தவறானது. லிப்ஸ்டிக் என்கிற வார்த்தையில் லிப் என்பது உதடு என்றும் ஸ்டிக் என்பது குச்சி என்றும் பொருள்படும். ஆகவே இனி சரியாக உச்சரியுங்கள்.
உதட்டுச்சாயம் பற்றிய வரலாறு
உதட்டுச்சாயம் பற்றிய வரலாறு பற்றி அறிய வேண்டுமென்றால் மனித நாகரிகத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து அறிய வேண்டும். மனித நாகரிகத்தின் ஆரம்ப காலங்களில் இருந்து மேக்கப் அலங்காரம் இரு பாலினங்களும் தங்கள் முகங்களை வடிவமைக்கப் பயன்படுத்திய ஒரு முறையாகும். கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, முதன்முதலில் மரங்களின் பட்டை போன்ற இயற்கை பொருட்களை வைத்து சுமேரிய நாகரிகத்தினர் ஒப்பனை அதாவது மேக்கப் இட்டுள்ளனர். கிளியோபாட்ரா உள்ளிட்ட எகிப்திய பெண்கள் பிரகாசமான வண்ணங்களில் உதட்டுச்சாயம் பூசியிருந்ததாக அறியப்படுகிறார்கள். பூச்சிகளின் வண்ணங்களிலிருந்து வர்ணங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆரம்பகால லிப்ஸ்டிக்குகள் அரபு விஞ்ஞானியால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சீனர்கள் தங்கள் உதடுகளை மெழுகிலிருந்து பாதுகாக்கும் முதல் உதட்டுச்சாயங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
லிப்ஸ்டிக் செய்யும் முறை
உதட்டுச்சாயம் எப்படி செய்வது என்று நம்மில் பெரும்பாலோருக்கு தெரியாது. உதட்டுச்சாயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்கள் மெழுகுகள், தாவர எண்ணெய்கள், எண்ணெய்கள் மற்றும் தேன்கூட்டு மெழுகுகள் போன்ற நிறமூட்டிகள் ஆகும். அதற்கு கூடுதலாக, நீங்கள் ஒவ்வொரு வகையான உதடுகளுக்கும் பலவிதமான நல்ல மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்களை சேர்க்கலாம். இந்த உதட்டுச்சாயம் முதலில் நிறமூட்டிகளையும் எண்ணெய்களையும் கலந்து, பின்னர் கரைந்த மெழுகுடன் கலந்து, பின்னர் வாயுக்குமிழ்கள் வராத ஒரு அச்சுக்குள் வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
பெண்கள் மற்றும் லிப்ஸ்டிக்
உதட்டுச்சாயம் பூசுவது பெண்களின் கலாசாரத்தில் பிண்ணிப் பிணைந்ததென குறிப்பிட்டோம். ஆனால் பெண்கள் ஏன் உதட்டுச்சாயம் பயன்படுத்துகிறார்கள்? உதடுகளைப் பாதுகாக்கும் லிப் பாம் பற்றிய கதை வேறு. ஆனால் பெண்கள் நீண்ட காலமாக லிப்ஸ்டிக் பயன்பாட்டில் ஈர்க்கப்படுகிறார்கள். உதடுகளும் உடலில் மிகவும் கவர்ச்சியான உறுப்புகளில் ஒன்றாகும். காலப்போக்கில் உதட்டுச்சாயத்தின் நிறமும் தரமும் பெரிதும் மாறியிருந்தாலும், இந்த உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துவதற்கான முதன்மை நோக்கம் அன்றிலிருந்து அப்படியே உள்ளது.
லிப்ஸ்டிக் ட்ரெண்டிங்
லிப்ஸ்டிக் என்பது ஒரு நவநாகரீக கலாசாரமாகும். அது எப்போதும் மாறாமல் உள்ளது. இன்று, லிப்ஸ்டிக் என்பது ஒரு ட்ரெண்ட் ஆகியுள்ளது. மேலும் இது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் தினமும் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் லைட் வண்ண லிப்ஸ்டிக் ட்ரெண்டிங்கிற்கு வரும்போது, டார்க் வண்ண லிப்ஸ்டிக்குகள் பிறகு பிரபலமாக வருகின்றன. லிப் லைனர்களும் லிப் க்ளோஸ்ஸும் சந்தைக்கு வருவது இப்படித்தான். எனவே இந்த நேரத்தில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் எவரும் லிப்ஸ்டிக்கில் ட்ரென்டிங்கில் இருப்பது என்ன என்பதைக் கண்டுபிடிப்பது நல்லது.
லிப்ஸ்டிக் பாவிப்பதன் நன்மைகள்
முன்பு குறிப்பிட்டபடி, லிப்ஸ்டிக் அழகுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. லிப்ஸ்டிக் பாவிப்பதால் உதடுகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது. மேலும், மெடிக்கல் லிப் பாம் வறண்ட சருமத்தை மீட்டெடுக்கவும், உங்கள் உதடுகள் வறண்டு போகாமல் பாதுகாக்கவும் முடியும். மேலும், நீங்கள் கூட்டத்தில் ஒரு உரையை பேச விரும்பினால், ஒரு அழகான லிப்கோட் உங்கள் அந்த பேச்சுக்கு அதிக கவனம் செலுத்த முடியும். மேலும் பேச்சாளரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
லிப்ஸ்டிக்கில் உள்ள தீமைகள்
இந்த உதட்டுச்சாயங்களில் நன்மைகள் போலவே சில பக்க விளைவுகளும் உள்ளன. லிப்ஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈயம் போன்ற உலோகங்கள் சிறுநீரகங்களையும் நரம்பு மண்டலத்தையும் சேதப்படுத்தும். லிப்ஸ்டிக் தயாரிப்பதில் காலாவதியாகாமல் நீண்ட காலம் பயன்படுத்த பயன்படும் சில பொருட்கள் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். ஆனால் லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது உங்களுக்கு தெரிந்த வகையில் பாதுகாப்பாக கையாண்டால் இந்த பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். முடிந்தவரை இயற்கை, மருத்துவம் சார்ந்த லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துங்கள். லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு லிப் பாம் தடவவும். இது லிப் கோட்டுடன் உள்ள நேரடி தொடர்பைத் தடுக்கிறது. மேலும், முடிந்தவரை கன உலோகங்களைக் கொண்டிருக்கும் டார்க் வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.