விதவிதமான சுவையான கட்லட் செய்முறை

 

கட்லட் என்று சொல்லும்போதே நாவில் உமிழ்நீர் சுரக்கின்றதா? சுடச்சுட ஆவிபறக்கும் போது சாப்பிடும் செமன் போட்ட கட்லட்டை நினைக்கும் போது உடனே சாப்பிடத் தோன்றும். தினமும் கட்லட் போட்டு சாப்பிட முடியுமா? விதம் விதமாக செய்தால் அலுப்பு ஏற்படாமல் தினமும் சாப்பிடலாம். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

 

சீஸ் கட்லட்

தேவையான பொருட்கள்

 • வெட்டிய மொஸெரெல்லா சீஸ்
 • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
 • வேகவைத்த கரட்
 • உப்பு
 • மிளகுத்தூள்
 • முட்டை – 1
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்

 

 • உருளைக்கிழங்கு, கரட், உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
 • அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளை செய்து நடுவில் ஒரு துளை போட்டு, அதில் ஒரு துண்டு சீஸ் போட்டு, உருண்டையாக மீண்டும் செய்துகொள்ளவும்.
 • செய்த உருண்டைகளை முட்டையில் நனைத்து, கொதிக்கும் எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

 

பொலொஸ் கட்லட்

தேவையான பொருட்கள்

 • பொலொஸ் – 1
 • நறுக்கிய சிவப்பு வெங்காயம் – 2
 • நறுக்கிய மிளகாய் – 2
 • நறுக்கிய பூண்டு – சிறிதளவு
 • உப்பு
 • மிளகுத்தூள்
 • எலுமிச்சை சாறு
 • ஏலக்காய் தூள்
 • கறிவேப்பிலை
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்
 • முட்டை – 1
 • எண்ணெய்

 

 • பொலொஸிலுள்ள விதைகளை அகற்றி அவித்து நீரை வடித்து பிசைந்து கொள்ளுங்கள்.
 • அதற்கு உப்பு, மிளகுத்தூள், பச்சை மிளகாய், சிவப்பு வெங்காயம், ஏலக்காய், போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
 • சட்டியில் எண்ணெய் சிறிதளவு இட்டு அடுப்பில் வைத்து சூடாகும் போது கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு பொலொஸ் கலவையை அதில் போட்டு பிரட்டிக்கொள்ளவும்.
 • கையில் ஒட்டாத வகையில் கலவை இருக்க வேண்டும்.
 • இதையும் உருண்டைகளாக செய்து முட்டையில் நனைத்து பிஸ்கட் தூளில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.

 

இறால் கட்லட்

தேவையான பொருட்கள்

 • தோல் உரிக்கப்பட்ட இறால் – 200 கிராம்
 • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
 • நறுக்கிய வெங்காயம் – 1
 • நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு மற்றும் மிளகு
 • எண்ணெய் – சிறிதளவு
 • ரம்பை – ஒரு துண்டு
 • இலவங்கப்பட்டை – ஒரு துண்டு
 • நறுக்கப்பட்ட பூண்டு – சிறிதளவு
 • முட்டை – 2
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்

 

 • இறாலை வினாகிரி மற்றும் உப்பு சேர்த்து அவிக்கவும்.
 • அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடாகும்போது, ​​பூண்டு, வெங்காயம், ரம்பை, இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • அடுத்து, உருளைக்கிழங்கை நசுக்கி தாளிப்பில் போட்டு அதோடு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு இலவங்கப்பட்டை மற்றும் ரம்பையை அந்த கலவையிலிருந்து அகற்றவும்.
 • கலவையில் சிறிது எடுத்து, நடுவில் ஒரு இறால் வீதம் வைத்து உருண்டை செய்து முட்டையில் நனைத்து பொரித்தெடுக்கவும்.

 

முட்டை கட்லட்

தேவையான பொருட்கள்

 • வேகவைத்த முட்டைகள் – 5
 • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
 • வேகவைத்த இறைச்சி – 100 கிராம்
 • நறுக்கிய வெங்காயம்
 • வெட்டப்பட்ட பச்சை மிளகாய்
 • உப்பு
 • மிளகுத்தூள்
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்

பெடரிற்கு

 • பிஸ்கட் தூள்
 • உப்பு
 • நீர்

 

 • உருளைக்கிழங்கு மற்றும் இறைச்சியை நறுக்கிக்கலக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 • இப்போது ஒரு முட்டையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை எடுத்துவிட்டு, மீதமுள்ள பாதியை உருளைக்கிழங்கு மற்றும் இறைச்சியை கலந்த கலவையுடன் சேர்த்து முட்டை போல வடிவமைத்துக்கொள்ளுங்கள்.
 • ஒரு தடிமனான பெட்டர் செய்ய சிறிது உப்பு சேர்த்து பிஸ்கட் தூளையும் கலக்கவும்.
 • கட்லெட்டுகளை அந்த பெடரிற்குள் நனைத்தெடுத்து, அவற்றை பிஸ்கட் தூளில் பிரட்டி பிரித்தெடுக்கவும்.

 

வாழைக்காய் கட்லட்

தேவையான பொருட்கள்

 • வேகவைத்த வாழைக்காய் – 200 கிராம்
 • சிறிய செமன் – 1
 • நறுக்கிய சிவப்பு வெங்காயம் – 3-4
 • நறுக்கிய பச்சை மிளகாய் – 2
 • மிளகுத்தூள்
 • உப்பு
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்
 • முட்டை – 1

 

 • எண்ணெய் சூடாகும்போது, ​​நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய்களையும் சேர்த்து தாளித்து வரும்போது, செமனையும் நசித்து அதில் போட்டு கிளறவும்.
 • இறுதியாக நன்கு மசித்த வாழைக்காயையும் அதில் சேர்க்கவும்.
 • அடுத்து உப்பு மற்றும் மிளகுத்தூளையும் அதனுள் சேர்க்கவும்.
 • பிறகு அந்த கலவையை கலந்து விட்டு சிறிய கட்லட் உருண்டைகளாக பிடித்து முட்டையில் நனைத்து பிஸ்கட் தூளில் போட்டு பிரட்டி பொரித்தெடுக்கவும்.