பயங்கரமான அர்த்தங்களை கொண்ட பச்சை குத்தல்கள்

 

டாட்டூ அதாவது பச்சை குத்துதல் என்பது இன்றைய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான நாகரிக வளர்ச்சியில் ஒன்றாகும். ஒவ்வொருவரும் தங்கள் உடலில் ஒரு சிறிய உருவத்தையாவது குத்திக் கொள்ளும் அளவிற்கு பச்சை குத்துதல் எமது சமூகத்தில் இயல்பாக்கப்பட்டுள்ளது. பச்சை குத்திக் கொள்பவர்கள் தங்களுக்கு நல்லதென நினைக்கும் விடயங்களை அடையாளமிட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் இதனை நாம் விரும்பியவாறு குத்திக்கொள்வது சரியா தவறா என்று பார்த்தால், அதில் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் சில வகையான பச்சை குத்தல்கள் சில மோசமான அல்லது ஆபத்தான பொருளைக் கொண்டுள்ளன. எனவே நீங்கள் இது போன்று பச்சை குத்த விரும்பினால், அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அதை குத்த வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

 

கண்ணீர் துளிகள் (tear drops)

கைதிகளிடம் மிகவும் பிரபலமாக காணப்படும் பச்சை குத்தல்களில் கண்ணீர் துளி உருவம் மிகவும் பிரபலமானது. இதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. குறிப்பாக சிறைக்குள் இன்னொரு நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் என்றும் இப்போது அவர் அந்த நபருக்கு சொந்தமானவர் என்பதையும் காட்டுவதாகும். மற்ற அர்த்தம், இந்த உருவை குத்திக்கொண்டவர் யாரோ ஒருவரை கொன்றுள்ளதாகவும் அர்த்தப்படுகின்றது. வேறு சில ஆபத்தான காரணங்களுக்காக இந்த பச்சை குத்தப்பட்டாலும் இதன் பிரபலமான இரு அர்த்தங்களும் எதிர்மறை கருத்தையே கொண்டுள்ளது. ஆகவே இவ்வாறான உருவங்களை பச்சைக் குத்துவதற்கு முன்னர் சற்று சிந்தியுங்கள்.

 

சிலந்தி வலை (Spider Web)

இன்று நாம் காணும் மிகவும் பிரபலமான பச்சை குத்தல்களில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான மக்கள் இந்த பச்சை குத்தலை முழங்கையில் தான் குத்திக்கொள்வார்கள். இந்த வகை பச்சை குத்தல் 1970 கள் மற்றும் 80 களில் கைதிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது. இந்த பச்சை அவர் நீண்ட காலமாக சிறையில் இருந்தார் என்பதை குறிக்கிறது. மேலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதை அடையாளமாக காட்டுவதற்கு இந்த பச்சை பயன்படுத்தப்படுகிறது.

 

1488

இந்த பச்சை 14 மற்றும் 88 என்றும் அழைக்கப்படுகிறது. இது இனவெறி கும்பல்களிடையே பிரபலமான பச்சை குத்தலாகவும் கருதப்படுகிறது. இந்த பச்சை குத்தலில் உள்ள எண் 14 என்பது டேவிட் லேன் என்ற நாஜி தலைவரின் 14 சொற்களின் சொற்றொடர். “எங்கள் மனித வாழ்வையும் வெள்ளை நிறக் குழந்தைகளின் எதிர்காலத்தை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று அது கூறுகிறது. 88 என்பது HH அல்லது ஹெயில் ஹிட்லரைக் குறிக்கிறது.

 

கடற்கன்னி (Mermaid Tattoo)

இது உண்மையிலேயே ஒரு அழகான உருவாகும். அதேபோல மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் அப்பாவித்தனமான பச்சையம் போலவும் கருதப்படுகிறது. ஆனால் பண்டைய காலங்களில், இந்த வகை பச்சை குத்துவது நிறைய அர்த்தத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு சிறுவயது குழந்தையை பாலியல் துன்புறுத்தினார் என்று சொல்ல இந்த பச்சை குத்தப்பட்டது. இப்படியான இருண்ட அர்த்தத்தை நீங்கள் மறந்துவிட்டால் இந்த பச்சையும் மிகவும் அழகானதே.

 

முள்வேலி (Barbed Wire)

இந்த பச்சையம் ஒரு சிலந்தி வலை போல முழங்கைகளில் கைகளின் தசைகொண்ட பகுதிகளில் கவர்ச்சியாக வரையப்படும். ஆனால் இந்த டாட்டூவின் பின்னால் உள்ள அர்த்தம் அவ்வளவு அழகாக இல்லை. இந்த வகை டாட்டூ ஒருவர் ஒரு குற்றத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. கம்பியில் உள்ள முள்வேலியின் எண்ணிக்கை அவர் சிறையில் கழித்த ஆண்டுகளைக் குறிக்கிறது. எனவே நீங்கள் ஒரு முள்வேலி கம்பிகளை போல பச்சை குத்துவதற்கு முன்பு இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் .

 

பூனைகள்

பூனை போன்ற வடிவிலான இந்த பச்சையங்களை இன்றும் நாம் காண்கின்றோம். பூனை பச்சை குத்திக்கொள்வதற்கு முன், பூனை டாட்டூ குத்துவதைப் பற்றி இருமுறை சிந்தியுங்கள். இது திருடர்களின் மத்தியில் பிரபலமான ஒரு பச்சையம் ஆகும். முன்பெல்லாம் திருட்டின் தன்மையைக் காட்ட பூனை பச்சை குத்தல்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக, ஒரு பூனையை மாத்திரம் பச்சை குத்தி இருந்தால் நீங்கள் ஒரு தனித்திருடன் என்றும் அதுவே பல பூனைகளை பச்சையம் குத்தி இருந்தால் நீங்கள் திருடர்கள் கும்பலில் ஒரு உறுப்பினராக இருப்பதாகவும் குறிப்பிடப்படும்.

 

சிலுவை

மார்பில் சிலுவையை பச்சை குத்துவது தான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது ரஷ்யாவின் மிகவும் ஆபத்தான மாஃபியா கும்பல் குற்றவாளிகளுக்கே உரித்தான ஒரு அடையாளங்களில் ஒன்றாகும். எனவே ஒரு நபர் அவ்வாறு நீங்கள் பச்சை குத்திக்கொள்வதைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டால், நீங்கள் எந்த நேரத்திலும் ஆபத்தை சந்திக்க நேரிடலாம்.