இணைய உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இது மிகவும் சவால் மிக்க விடயம்தான். ஆனால் சைபர்ஸ்பேஸில் உள்ள சிக்கல் என்னவென்றால், சைபர் கிரிமினல்கள் எங்கள் உடைமைகளை எந்நேரத்திலும் திருட வாய்ப்புள்ளது. ஆனால் நம் முக்கிய தரவை வேறு யாராவது திருடிவிடுவார்களென கவலைப்படாத சிலரும் இருக்கின்றனர். அப்படி சைபர் அட்டேக் நடந்து திருட வந்தாலும் டவுன்லோட் செய்யப்பட்ட படங்கள் மட்டுமே ஹேக் செய்யப்படும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்குதான் தவறுள்ளது. பெரும்பாலானோரின் தொழில் மற்றும் இரகசிய தரவுகள் ஈமெயில் கணக்கிலேயே இருக்கின்றன. இப்போது அலுவலகத்தில் வாட்ஸ்அப் குழுக்களும் இருப்பதால், அந்த செட்டிங்கில் முக்கியமான விஷயங்கள் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு உறுதியாக கூற முடியுமா? அதனால்தான் நாம் அனைவரும் நமது முக்கியமான தரவைப் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டுமென கூறுகின்றோம். அதன்பிரகாரம் உங்களுக்கு பயனளிக்கும் சில தரவுகளை இன்று கொண்டுவந்துள்ளோம்.
என்க்ரிப்ஷன்
என்க்ரிப்ஷன் அல்லது குறியாக்கம் என்பது கணினி நிபுணர்கள் மட்டுமே பயன்படுத்தும் அல்லது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயமென பலரும் எண்ணுகின்றனர். என்க்ரிப்ஷன் என்பது ஒரு டொக்கியூமெண்ட்டை அல்லது ஃபோல்டரை மற்றொரு டிவைஸினால் பார்க்க முடியாத வகையில், பாஸ்வர்டை தெரியாத நபர் அல்லது தேவையற்ற நபரால் பார்க்க முடியாத வகையில் செய்வதாகும். இப்போது, என்க்ரிப்ஷன் செய்வது மிகவும் கடினமான விடயமல்ல. ஈமையிலை இப்போது என்க்ரிப்ட் செய்வது மிகவும் எளிதானது. தானாக அனுப்பப்படும் ஈமெயிலைகூட என்க்ரிப்ட் செய்யும் திறனும் ஜிமெயிலுக்கு உண்டு.
டேட்டா பேக்கப்
இது பலர் கவனிக்காத மற்றும் அதிகம் தரவுப்பாதுகாப்பிற்கு உதவும் ஒரு முக்கியமான விடயமாகும். தரவு காப்புப்பிரதி அல்லது டேட்டா பேக்கப் என்பது உங்கள் தரவின் மேலதிக ஒரு பிரதியை வேறு எங்காவது வைத்திருக்கும் செயலாகும். இந்த டேட்டா பேக்கப் அந்தந்த சர்வீஸ்களின் கிளவுட் சேவையில் சேமிக்கப்படலாம். அல்லது பென்ட்ரைவ், ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைக்கலாம். எது எங்கிருந்தாலும் பரவாயில்லை தேவைப்படுவது அவற்றின் டேட்டா பேக்கப் மட்டுமே. அதற்கென்று அலட்சியமாக இருந்துவிடாமல் உங்கள் தரவுகளை என்க்ரிப்ட் செய்து வைப்பது உங்களது பொறுப்பாகும்.
அன்டி-மல்வெயார்
பெரும்பாலான மக்கள் கணினியை வாங்கியதும், ஒரு ஒபரேட்டிங் முறைமையை செலுத்திய பின் முதலில் வைரஸ் கார்டைத்தான் தேடுகிறார்கள். உண்மையில், வைரஸ் பாதுகாப்பிற்கு தேவைப்படுவது அன்டி மல்வெயார்தான். வழக்கமாக விண்டோஸ் 10 இயக்க முறைமையுடன் அந்த அன்டி மெல்வெயார் வருகிறது. அது போதாவிட்டால் காஸ்பர்ஸ்கி மற்றும் ஏ.வி.ஜி போன்ற நம்பகமான தீம்பொருள் எதிர்ப்பு நிரல் (அன்டி மல்வெயார்) களை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அவற்றில் உள்ள முழு திறனையும் பெற, நீங்கள் ஒரு சிறிய கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் பலபயன்களை தரும் அன்டி மல்வெயார் சேவைக்கு பணம் செலுத்துவது உண்மையில் பெரும் இழப்பல்ல. காரணம் கணினியில் இந்த வகையான பாதுகாப்பு மென்பொருள் இருக்கும்போது, வைரஸ்கள், பக்ஸ், ட்ரோஜன் ஹார்ஸ்கள், ஸ்பைவேர், ஸ்கேர்வேர் போன்ற தேவையற்ற, தீங்கிழைக்கும் நிரல்கள் வந்து நம் கணினிக்கு தீங்கு விளைவிக்க முடியாது.
நல்லதொரு ஒப்பரேட்டிங் சிஸ்டம் (OS)
இது மற்றொரு மிக முக்கியமான விஷயம். பொதுவாக, நம் நாட்டில் பெரும்பாலான கணினி பயனர்கள் விண்டோஸ் இயக்க முறைமைகளையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த விண்டோஸ் இயக்க முறைமைகளில் பெரும்பாலானவை தரமற்றது. அதாவது கிராக் ஷீட் மூலம் எடுக்கப்பட்டவை. சில நேரங்களில் கணினி விற்கப்படும் கடைகளில் திருட்டு பிரதி ஒன்றையே போட்டு தருவார்கள். இந்த திருட்டு பிரதிகளின் சிக்கல் இதுதான். இயக்க முறைமை (ஒபரேட்டிடிங் சிஸ்டம்) அப்டேட் செய்ய முடியாது போகும். செக்கியூரிட்டி அப்டேட்ஸ் வராது. அப்படி நிகழும்போது, மேற்கூறிய மல்வெயார் ஹேக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதனால்தான் சிறிது செலவானாலும், ஒரிஜினல் இயக்க முறைமையை நீங்கள் செலுத்தி நிறுவ வேண்டும். அல்லது இலவச லினக்ஸ் அடிப்படையிலான இயக்க முறைக்குச் செல்லுங்கள்.
பாஸ்வேர்ட்/ டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்
உண்மையில் இப்போதெல்லாம் நாம் பாஸ் வேர்டிற்கு பதிலாக பாஸ் சென்டென்ஸ் தான் பாவிக்க வேண்டியுள்ளது. முன்னரைப்போல பாஸ்வர்ட் இலகுவாக இருந்தால் ஹேக்கர்களுக்கும் இலகுவாக தரவுகளை திருடி யாருக்காவது விற்க அல்லது துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புண்டு. இப்போதைய கடவுச்சொற்கள் ஒரு கடினமான, நீண்ட, யூகிக்க கடினமாக இருக்க வேண்டும். மேலும் தற்போதைய காலத்திற்கு உங்களது தரவுகளுக்கு டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்று இரு சேவைகள் இருக்கவேண்டும். அதாவது பாஸ்வர்டை கொடுத்தால் மட்டும் போதாது. தொலைபேசி அல்லது ஈமெயிலிற்கு வெரிஃபிகேஷன் கோட் அனுப்பி அடையாளத்தை உறுதிபடுத்திக்கொள்ளல் வேண்டும். நீங்கள் அந்த குறியீட்டையும் உள்ளிட வேண்டும். அந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை வைத்திருப்பது பயனுள்ளது.
ஸ்பாம் லிங்க்ஸ்
இது சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் அடிக்கடி கூறும் விடயமாகும். அதாவது, நீங்கள் பார்க்கும் எல்லா லிங்க்-களையும் கிளிக் செய்து குரங்கு போன்று தாவி தாவி போகவேண்டாம். குறிப்பாக மின்னஞ்சல்களில் இது போன்ற பல ஸ்பாம் லிங்க்ஸ் உங்களிடம் இருக்கும்போது அவற்றை திறந்து பார்க்க முயற்சிக்காதீர்கள். அவற்றில் சில நிச்சயமாக சந்தேகத்திற்குரியதாக இருக்கும். ஆனால் அவை சிலருக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக, “யுவர் பேஸ்புக் அக்கவுண்ட் நொட் செக்கியூர்ட், க்ளிக் திஸ் லிங்க் என்ட் செஞ் த பாஸ்வேர்ட்” என்று பேஸ்புக் குழுவின் ஈமெயிலை பார்க்க முடியும். ஒருவர் இப்படி ஒரு விஷயத்தைப் பார்க்கும்போது, அதை பற்றி அதிகம் யோசிக்காமல் கிளிக் செய்கிறார். ஆனால் இதை உற்று நோக்கினால் உண்மையில் பேஸ்புக் குழுவால் அனுப்பப்படவில்லை என்பதை வெளிப்படுத்தும். எனவே ஏதாவது லிங்க் ஒன்றைக் கிளிக் செய்வதற்கு முன் ஒன்றிற்கு பத்துமுறையாவது கவனமாக இருப்பது நல்லது.
சாதாரண அறிவு
டேட்டா செக்கியூரிட்டிக்கு பொது அறிவு முக்கியமானது. ஒரு எளிய உதாரணம் தருகிறோம். உங்கள் கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவாறு அப்படியே வைத்துவிட்டு ஒருபோதும் போய் விடாதீர்கள். ஒன்று அதிலிருந்து உங்கள் எக்கவுண்ட்களை ரிமூவ் செய்து விட்டு வெளியேறவும் அல்லது டீஎக்டிவேட் செய்வதும் நல்லது. அல்லது முழுமையாக அணைக்கவும். மேலும், நீங்கள் கடைக்கு அவசரமாக போகும்போதும் கணினி வெறுமனே திறந்து விட்டு செல்ல வேண்டாம். சிக்கலான பாஸ்வர்டஸ் தேவை என்று நாங்கள் மேலே கூறியுள்ளோம். பெரும்பாலான மக்கள் அவற்றை நினைவில் கொள்வதில்லை. எனவே பாஸ்வேர்டை நோட்பேடில் எழுதி வைத்துவிட்டு டெஸ்க்டொப்பில் வைத்திருப்பார்கள். மற்றவர்கள் அதை ஒரு ஒட்டும் குறிப்பில் எழுதி மேசையில் ஒட்டிக்கொள்கிறார்கள். அப்படி செய்வதால் பாஸ்வர்ட் வைத்திருப்பதில் ஏதேனும் பயனுள்ளதா? ஆகவே சிந்தித்து செயற்படுங்கள்.