பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மேலதிகமாக ஒன்றை வைத்திருப்போம். அதற்கென எல்லாவற்றிலும் இரண்டு அவசியமில்லை. ஆனால் சில பொருட்களை மேலதிகமாக வைத்திருக்கும்போது வேலை எளிதாக்குவதோடு, பிரச்சினைகளையும் தடுக்கின்றது. சில பொருட்களை மேலதிகமாக வைத்திருப்பது இடத்தை நிரப்புவதோடு, இடைஞ்சலாகவும் இருக்கும். உண்மையாகவே சில பொருட்களை இரண்டாக வைத்திருப்பது உங்களுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமையும். அதுபற்றி இன்று பார்ப்போம்.
இரு சோடி சப்பாத்துக்கள்
பலர் நினைக்காத ஒரு விடயம் இதுவாகும். ஆனால் அன்றாட பயன்பாட்டிற்கு ஒரு சப்பாத்திற்கு பதிலாக இரண்டு ஜோடி சப்பாத்துக்கள் இருந்தால், இரண்டு சப்பாத்துக்களின் ஆயுளையும் நாம் கணிசமாக அதிகரிக்க முடியும். தனிப்பட்ட சுகாதாரத்திற்கும் இது மிகவும் பயனுள்ளது.
இப்போது நீங்கள் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து ஒரே சப்பாத்தை போடும்போது, அதற்கு காற்று புக வழியில்லாமல் விரல்களுக்கிடையில் வரும் வியர்வைகளினால் சப்பாத்து துர்நாற்றம் அடிக்கத்தொடங்கும். எனவே ஒரே சப்பாத்தை தொடர்ந்தும் அணிவது நமது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, எங்கள் கௌரவத்திற்கும் கேடு விளைவிக்கும். இதுவே இரு ஜோடி சப்பாத்துக்கள் இருந்து ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தினால், பிரச்சினை இல்லாமல் பாவிக்கலாம். மேலும், ஒரு சப்பாத்தை பயன்படுத்த முடியாமல் போகும்வரை பயன்படுத்தலாம். இதனால் நீண்ட காலம் அவற்றின் ஆயுள் நீடிக்கும்!
இரு மொனிட்டர்கள்
இரு மொனிட்டர்களை வைத்திருப்பது தற்காலத்தில் மிகவும் அவசியமாக போய்விட்டது. அதாவது வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றது. உதாரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, கணினியில் ஏதேனும் தட்டச்சு செய்தால், அந்த நேரத்தில் டொக்கியூமென்டரி சம்பந்தமாக ஏதாவது அவசியமாக இருக்கும். அப்போது தட்டச்சு செய்து கொண்டே இன்டர்நெட்டில் பார்க்க வேண்டும் என்றால், ஒரே கணனியில் அவ்வாறு செய்ய முடிந்தாலும் அது அசௌகரியமாக இருக்கும். அதுவே இரு மொனிட்டர்கள் இருந்தால் வேலை மிகவும் சுலபமாக முடிந்துவிடும்.
இரு ஈமெயில்கள்
இது பணம் செலவாகும் விடயம் அல்ல என்பதால் அனைவருக்கும் இலகுவாக செய்யமுடியும். ஆனால் இரண்டு மின்னஞ்சல் கணக்குகள் தொழில்முறையாளர்களுக்கு மிகவும் முக்கியம். தனிப்பட்ட தேவைக்கு ஒன்றும் மற்றது தொழில்முறை வேலைக்கும் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் அப்படி இரு அக்கவுண்ட்கள் இருப்பதால் வரும் ஈமெயில்கள் எதனுடையது என்றும் இலகுவாக பார்த்திடலாம்.
இரு டெனிம்கள்
நிச்சயமாக இதில் புதிதாக ஒன்றும் சொல்லத்தேவையில்லை. அணிந்து அணிந்து பழையதாகும் வரை அணிய சிறந்த ஆடை என்றால் டெனிம் தானே. டெனிம் எங்கும் எந்த இடத்திலும் அணிய ஒரு நல்ல ஆடை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதே டெனிமை தொடர்ந்து அணிவதும் நல்லதல்ல. மேலும் டெனிமிற்கும் நல்லது அல்ல. அடிக்கடி கழுவும் போது அதன் ஆயுட்காலமும் குறைவடையும். குறைந்தபட்சம் இரண்டு டெனிம்களை மாறி மாறி அணியுங்கள். நீண்ட காலம் சமாளிக்கலாம். மேலும் நிறம் மங்குவதும் குறையும்.
டெனிம் சற்று கனதியானது. ஆகவே, காற்றோட்டம் குறைவாகவே இருக்கும். ஆகையால் தொடர்ச்சியாக அணிவது உடலுக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இரண்டு மொபைல்கள்
பொதுவாக பலருக்கு இரண்டு தொலைபேசிகள் இருப்பது போலவே இரண்டு சிம் அட்டைகளும் இருக்கலாம். இப்போது இலங்கையின் இரண்டு முக்கிய தொலைபேசி நெட்வொர்க்குகளிலிருந்து பெரும்பாலான அழைப்புகளைப் பெறுகிறோம். அவற்றிக்கு இடையிலான அழைப்புக்கான செலவும் அதிகம். அதுவே இரு சிம் அட்டைகளும் இருந்தால் அந்தந்த நெட்வேர்க்கிலிருந்து அவற்றிற்கே அழைப்பை தொடரலாம். சில மொபைல்களில் இரு சிம் அட்டைகளையும் ஒரே மொபைலில் வைத்திருப்பதால் நெட்வேர்க் பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் ஒரு ஸ்மார்ட்போனுடன் இன்னொரு சிறிய போன் இருப்பதும் சிறந்தது. ஒருவேளை காதலியுடன் பூப்பறித்துக்கொண்டு இருக்கும் நேரம், ஸ்மார்ட்போனில் சார்ஜ் முடிந்தாலும் சிறிய மொபைலில் தொடர்ந்தும் பூப்பறிக்கலாம்.
இரு தொழில்கள்
இப்போதெல்லாம் இரண்டு வேலைகள் இருப்பது மிகவும் சிறப்பானது. இங்கே நாம் இரண்டு வேலைகள் என்று சொல்வது, ஒன்று நாம் செய்யும் பிராதான வேலையாகும். மற்றது ஒரு சிறிய சைட் பிஸ்னஸ் போன்றது. இதனை ப்ரீலான்ஸ் என்றும் சொல்லலாம். நிரந்தரமாக ஒரு தொழிலை வைத்துக்கொண்டு, ஃப்ரீலான்ஸாகவும் எதையாவது செய்யுங்கள்.
கடந்த காலங்களில் மக்கள் தத்தமது வாகனங்களில் வீட்டுக்குத்தேவையான பொருட்களை எடுத்துப்போய் வீடு வீடாக விற்பனை செய்தார்கள். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையும் விற்றார்கள். அதனை இப்பொழுதுகூட செய்யலாம். அப்படி செய்ய தடையாக பிரதான வேலைகள் இருந்தால், வார இறுதி நாட்களில் வேலைமுடித்துவிட்டு வரும் வழியில் Uber, PickMe போன்றவற்றையும் செய்யலாம்.
ஆனால் ஒன்று, வாழ்வில் இரு காதலர்களை வைத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் வேலை இலகுவாக அமைவதற்கு பதிலாக தலையிடியாக மாறிவிடும்.