குழந்தைகளின் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை

 

குழந்தைகளின் உணவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய முக்கியமான சில விடயங்கள் உள்ளன. காரணம் குழந்தைகளின் உணவில் ஆரோக்கியம் முக்கிய இடத்தை பெறுகின்றது. அதற்கேற்றவாறு நாம் தயாரித்து கொடுக்கும்போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

 

பருப்பு வகைகள்

உளுந்தப் பருப்பு, பாசிப்பயறு, கடலைப் பருப்பு, துவரம்பருப்பு என அத்தனை பருப்பு வகைகளுமே குழந்தைகளுக்கு தினமும் சாப்பிடத் தரத்தக்கவையே. இவற்றில் கூடுதலாக சோயா பீன்ஸ் பருப்பு, முக்கடலை, பட்டாணி என்று தினமொரு வெரைட்டியாக சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பருப்பு வகைகள் இல்லாமல் குழந்தைகளின் ஒரு நாள் கூட கழிய அனுமதிக்காதீர்கள். இவற்றை நீங்கள் உங்கள் வழக்கப்படி குழம்பு சாதமாகவோ அல்லது தனியாக அவித்தோ, வறுத்தோ கூட அவர்களைச் சாப்பிடச் செய்யலாம். இவை அனைத்துமே புரதம் நிறைந்த உணவுவகைகள் லிஸ்டில் சேர்ந்தவை. குழந்தைகளின் அடிப்படை உடல் பலத்தை கட்டமைக்கக் கூடியவை இவையே.

 

கீரைகள்

இலங்கையில் பலவகைக் கீரைகள் பழக்கத்தில் உள்ளன. அதில் சாப்பிடக் கூடியவை மட்டுமே கிட்டத்தட்ட 60 வகைகள் உண்டு. அவற்றில் உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான சுவையில் அமையும் கீரைகளை தினம் ஒன்றாக வாரம் முழுவதும் அவித்தோ, பொரித்தோ அல்லது மசித்தோ சாப்பிடத் தரலாம். கீரைகளை குழந்தைகள் தனியாகச் சாப்பிட விரும்பாவிட்டால் அவற்றை சப்பாத்தி மற்றும் பூரியில் ஸ்டஃப் செய்து கொடுத்து சாப்பிடப் பழக்கலாம்.

 

வால்நட்

வால்நட்டைப் பார்த்திருப்பீர்கள். அதன் வடிவமே கிட்டத்தட்ட மனித மூளை போன்றது தான். ஒரு கைப்பிடி வால்நட்டில் மட்டும் 2.6 கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிரம்பியுள்ளது. இது மனித மூளையின் செயல்திறன் அதிகரிப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பிலும், இதய செயல்பாட்டைச் சீரமைப்பதிலும் கூட வால்நட்டின் பங்கு அதிகம்.  எல்லாவற்றையும் விட முக்கியமாக வால்நட்டில் அதிகமிருக்கும் மெலட்டோனின் குழந்தைகளின் ஆரோக்யமான தூக்கத்திற்கு உத்தரவாதமளிக்கிறது.

 

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் பாலிஃபீனால் ஆண்ட்டி ஆக்ஸிடண்டுகளின் சதவிகிதம் அபரிமிதமாக இருப்பதால் அவை ரத்த நாளங்களைப் பாதுகாத்து அவற்றில் வீக்கமிருப்பின் அதையும் சரி செய்து கொள்ள உதவுகிறது. அத்துடன் பிற எந்தப் பழங்களிலும் இல்லாத க்வாலிட்டியாக ப்ளூபெர்ரி பழங்களுக்கு மாத்திரம் டியூமர் செல்களை உருவாகாமல் தடுக்கும் சக்தியும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால் நம் குழந்தைகளின் மெனுவில் நிச்சயம் இடம் பெற வேண்டிய பழவகைகளில் இது முக்கிய இடம்பிடிக்கிறது.