உதடு வெடிப்பை குணப்படுத்த இயற்கையான முறைகள்

 

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிப்படுத்துவதில் உதடுகளும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. ஆனால் அத்தகைய உதடானது ஒருசில பருவ காலத்தில் அதிகம் வறட்சியடையும். குறிப்பாக குளிர்காலத்தில்தான் அதிகம் ஏற்படும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பாதிப்பாகும்.  ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை மட்டுமின்றி, உதடுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், உதடுகள் அதன் இயற்கை அழகை இழந்துவிடும். இதற்கு சில எளிய இயற்கை தீர்வுகள் உள்ளன.

 

தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலாடையை உதடுகளின் மீது தடவ வேண்டும்.

கொத்தமல்லியை நன்றாக அரைத்து,  இரவு உறங்குவதற்கு முன் உதட்டில் தடவிக் கொண்டால்,  உதடு சிவப்பாக மாறும். உதடு வெடிப்பும் குணமாகும்

நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கரட் சாறு, கிளிசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.

காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும்.

எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.

உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும். இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் கலந்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.

பாக்கு மரத்தின் வேரைக் கஷாயம் வைத்துக் குடித்தால் உதடு வெடிப்பும், எரிச்சலும் குணமாகும்.

கற்றாழை ஜெல் உதடு வறட்சியைத் தடுக்கும் அருமையான பொருள். எனவே தினமும் உதடுகளுக்கு கற்றாழை ஜெல்லை தடவி வர வறட்சியினால் உண்டாகும் வலி குணமாகும்.

1 டீஸ்பூன் ஒலிவ் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் ¾  டீஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளவும். இந்த கலவையை மூடி போட்ட ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் உதட்டிற்கு எப்போதெல்லாம் நீர்ச்சத்து தேவைப்படுகிறதோ,  அப்போதெல்லாம் இதனை பயன்படுத்தலாம்.

ரோஜாப்பூவில் சிறிது கிளிசரின் சேர்த்து அரைத்து, அதனை உதடுகளுக்கு தினமும் இரவில் தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதமும் தக்க வைக்கப்படும். இதனால் வெடிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

புண்ணாகிப்போன உதடு வெடிப்புகள் குணமாக நல்லெண்ணெய்யையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.

வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தாலும், உதடுகளின் வறட்சி தடுக்கப்படும்.

பாலக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண்ணும், உதடு வெடிப்பும் விரைவில் குணமாகும்.

விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் ஈரப்பதை அதிகரிப்பதோடு, உதடுகளும் மென்மையாகவும், இருக்கும்.

தேங்காய் எண்ணெயை தினமும் பலமுறை உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமல் இருப்பதோடு, உதடுகளின் இயற்கை அழகும் பாதுகாக்கப்படும்.

தேன் ஒரு அருமையான மொய்ஸ்சரைசர். எனவே தினமும் தேனைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்து வந்தால், உதடுகளில் உள்ள வறட்சியுடன், வெடிப்புகள் விரைவில் குணமடைந்து,  ஈரப்பதமும் தக்க வைக்கப்படும்.

க்ரீம் மில்க்கை உதடுகளுக்கு தடவி வந்தாலும், உதடுகளில் பிரச்சினை ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.