குதிகால் வெடிப்பு என்பது அதிகப்படியான வறட்சியினால் கால்களில் வரும் பித்த வெடிப்பகும். இதனால் பெரும்பாலானோருக்கு சில அசௌகரிய சூழ்நிலைகள் ஏற்படும். சிலர் இதனை மறைக்க பல மருந்துகளை எடுத்தும் பணம் வீணாகி இருக்கிறதே தவிர வெடிப்பு குணமாகியதில்லை. அதனால் இலகுவான முறையில் இந்த குதிகால் வெடிப்பை நீக்க, மறைக்க சரி செய்ய வழிகளை காட்டித்தரவுள்ளோம். ஏதேனும் ஒன்றை தினமும் நேரம் ஒதுக்கி செய்து வந்தால் மட்டுமே பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாகவும் மென்மையாகவும் மாறும்.
எண்ணெய் மசாஜ்
தினந்தோறும் இரவில் படுக்கும் முன், ஒலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும்.
மருதாணி
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி பவுடருடன் தேயிலைத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது வெடிப்பை நீக்க உதவும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.
வேப்பிலையும் மஞ்சளும்
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து , இந்த கலவையில் விளக்கெண்ணெய்யுடன், பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் பித்த வெடிப்பு நீங்கும்.
எலுமிச்சை
கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர கால் வெடிப்பு மறைந்து பாதம் பளபளப்பாகும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து பின் கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்குவதோடு வெடிப்பையும் மறைய செய்யும்.
விளக்கெண்ணையும் சுண்ணாம்பும்
சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் (அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு )இவை இரண்டும் தேவையான அளவு எடுத்து கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி வெடிப்பு உள்ள இடத்தில் தடவிவர உடனடி பலன் கிடைக்கும். விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.
பழுத்த பப்பாளி
நன்கு பழுத்த பப்பாளி பழத்தை அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு மறையும்.
வாழைப்பழமும் ஒலிவ் எண்ணெய்யும்
வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் சேர்த்துக் கலந்து, குதிகால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படித் தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.