மனிதர்களாகிய நாம் எவ்வாறான சமூகத்தினராக இருந்தாலும் நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்ளாதவரை பிறரது முன்னிலையில் உணர்வாக வாழ முடியும். சில சந்தர்ப்பங்களில் பணக்காரர்கள் அழகாக ஆடை அணிந்து இருந்தால்கூட அவர்களின் பேச்சு முறை ஒரு ஒழுக்கம் இன்றி அவலட்சணமாக இருக்கும். அதே போல சிலரிடம் போதிய அளவு வசதி இல்லாவிட்டாலும் அவர்களின் நடை, உடை, பாவனை என்பன மிகவும் அழகாகவும் க்ளாஸியாகவும் இருக்கும். அதனால் போதியளவு வசதி இல்லாவிட்டாலும் அல்லது பணம் இல்லாவிட்டாலும் எவ்வாறு சிறப்பாக வாழலாம் என்பதை பற்றிய பதிவே இது.
ஆடையின் தரம்
பொதுவாக ஒருவரிடம் போதியளவு பணவசதி இல்லாவிட்டாலும், ஒரு இடத்திற்கு போகும் போது அதற்கு ஏற்றவாறு, சீராக அணிந்து செல்லலாம். தன்னிடம் இருப்பது ஒரே ஒரு ஆடை என்றாலும், தனது உடல் அமைப்பிற்கு ஏற்ப, அழகாக, துவைத்த ஆடையை, ஸ்லிம்மாக உங்களை காட்டக்கூடிய ஒரு ஆடையை தெரிவு செய்வது சிறந்தது. தேவைக்கு அதிகமாக பெரிதாக இருக்கும் ஆடை அவலட்சணமான தோற்றத்தை அளிக்கும். அதே போல அணியும் சப்பாத்து கூட பழையதாக இருந்தாலும், அதை அடிக்கடி சுத்தம் செய்து, போலிஷ் செய்து, நல்ல முறையில் அணிந்தால் அழகாக இருக்கும். அதே போல அணியும் ஆடைக்கு ஏற்ப பர்ஸ், ஹேண்ட்பேக் போன்றவற்றை பாவிப்பதும் உங்களிடம் மதிப்பான தோற்றத்தை வளர்க்கும்.
பர்சனல் க்ரூமிங்
இந்த பெர்சனல் க்ரூமிங் என்பது அவ்வளவு பெரிதான விடயம் ஒன்றல்ல. மிகவும் இலகுவாக கையாளக்கூடிய நாம் தினசரி செய்யக்கூடிய ஒன்று. அதாவது ஒரு நபர் தனது தோற்றத்தை பராமரிப்பது, ஷேவ் செய்வது அல்லது தாடியை சரியாக ஒழுங்கமைப்பது, தலைமுடியை சீராக வாறுவது, தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது, நகங்களை வெட்டுவது, பல் துலக்குவது போன்றவையாகும். இது போல தினசரி அடிப்படையில் உங்கள் சொந்த ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் பராமரிப்பது உங்களது மதிப்பான தோற்றத்தை வளர்க்கும்.
ட்ரெண்ட்
ட்ரெண்ட் என்ற விடயம் சமூகத்தில் மாத்திரமன்றி சோஷியல் மீடியாக்களில் பரவலாகவே உள்ளது. ஒரு மனிதன் தனது ஆடைத்தெரிவில் ட்ரெண்டாக இருப்பது மாத்திரம் இன்றி, சோஷியல் மீடியாக்களில்கூட ட்ரெண்டில் இருப்பதற்கு பலரும் எதிர்பார்க்கின்றனர். அதாவது ஒரு மனிதனுக்கு சமூகத்தில் பலருடன் பழக முயற்சிக்கின்றனர். அந்த ட்ரெண்ட் அனைத்தும் அவர்களுக்கு பொருந்தாது. எடுத்துக்காட்டாக, புதிதாக வந்துள்ள பெரிய பேக்கி ஃபேஷன் ஆடை ட்ரெண்டில் இருந்து அதை இளைஞர்கள் அணியும் போது மிகவும் பொருந்தும். ஒரு வயதானவர் அந்த ட்ரெண்டில் ஆடை அணியும் போது, அவரது தோற்றத்தின் அழகு குறையலாம்.
சோஷியல் மீடியா ட்ரெண்ட் என்று எடுத்துக்கொண்டால் பேஸ்புக்கிலும் அதே போல ஒரு விடயம் உண்டு. குறிப்பாக யுவதியொருவர் விமானத்தில் புதிய முறையில் செல்பீ எடுத்தால் அதை அனைவரும் செய்யலாம் என்று எண்ணி செய்வதுகூட உங்கள் தரத்தையும் மதிப்பையும் பாதிக்கும்.
நடத்தை
உங்கள் நன்மதிப்பை தக்கவைக்க கல்வியும் முக்கியம். கல்வி என்பது ஒருவரின் சிந்தனை, பேச்சு மற்றும் உலகக் கண்ணோட்டத்தை அறிவூட்டுகிறது. அப்படி ஒரு மனிதருடன் நீங்கள் பேசும்போது, அந்த உரையாடல் நன்றாக இருக்கிறது. எந்த இடத்தில் உள்ளோம், எப்படி இருக்கிறோம், எந்த சந்தர்ப்பத்தில் இருக்கிறோம் என்று ஒன்றும் பார்க்காமல் முரட்டுத்தனமாக, மோசமாக பேசுவதும், ஒருவரின் மனம் நோகும்படி பேசுவதும் உங்கள் மீது மக்களிடம் உள்ள உயர்வான எண்ணம் அற்று கேவலமான எண்ணமே தோன்றும்.
மரியாதை, கெளரவம்
சிலரிடம் எவ்வளவு அறிவு அல்லது பணம் இருந்தாலும், மற்றொரு நபரை எவ்வாறு மதிக்க வேண்டும், ஒருவரை எவ்வாறு ஓரங்கட்டாமல் இருப்பது, ஒருவரை எப்படி கையாண்டு ஏற்றுக்கொள்வது என்பது பற்றி தெரியாமல் இருப்பார்கள். இவர்களிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக, “பெண்களுக்கு மூளையே இல்லை” என்று கிண்டலாக சிரிக்கும் ஒரு ஆணிடம் மதிப்பிருக்காது. மற்றவர்களை அவமதிப்பது அல்லது பாகுபாட்டுடன் நடத்தத் தெரியாத ஒரு மனிதனிடம்கூட நன்மதிப்பு இருக்காது. வயதான, இளைய, சிறந்த அல்லது குறைவான ஒருவரிடம் மரியாதையுடன் பேசத் தெரியாத ஒருவருக்கும் இது பொருந்தும்.
தரமான சிந்தனை
நன்னடத்தை கொண்ட மனிதனிடம் சிறந்த பண்புகளும் இருக்கும். ஒருவரது மக்களுடனான பேச்சு முறையை போலவே சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களும் அவரது தரத்தை மதிப்பிடும். மக்களின் கௌரவமான நடத்தைக்கு இந்த சிந்தனை சார்ந்த அணுகுமுறைகள் அவசியம். அதனை பொதுவாக நீங்கள் தொழில்முறை ப்ரொபஷனல் என்று சொல்லலாம். அது உங்கள் வேலையாக அல்லது சமூகத்தில் வேறு ஏதாவதாகவும் இருக்கலாம். எல்லாவற்றிலும் உங்கள் அளவை பராமரிக்கவும், நேர்மையாகவும், நீங்கள் சொல்வதிலும் செய்வதிலும் நேர்மையாக இருங்கள். உதாரணமாக, அடுத்தவர்களின் பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது, வதந்திகளை பரப்புவது, ஏளனம் செய்வது அல்லது பழி போடுவது என்பது ஒரு க்ளாஸ் இல்லாத மனிதனின் பண்புகளாகும்.
மதிப்பு
தான் மதிப்பு மிக்க ஒருவராக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும். அதற்காக தன்னை பற்றி தானே பெருமை பேசக்கூடாது. அவர்களிடம் உள்ளதைப் பற்றி பெருமையாகப் பேசாமல் இருப்பது மற்றும் அவர்கள் எதை செய்துள்ளனர் என்பது பற்றி பேசாமல் இருப்பது மதிப்புமிக்க ஒருவரின் பண்புகள்.