உலக வல்லரசாக சீனா மாறினால் என்ன நடக்கும்?

 

உலக வல்லரசாக மாற வேண்டுமென சீனா கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றதென அனைவரும் அறிவர். சீன ஜனாதிபதி ஸீ ஜிங் பீங் 2050 ஆம் ஆண்டிற்குள் சீனாவை உலக வல்லரசு நாடாக மாற்றுவேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவ்வாறு சீனா உலக வல்லரசாக மாறினால் ஏற்படப்போகும் மாற்றங்கள் உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். அவைபற்றி இன்று பார்ப்போம்.

 

சக்திவாய்ந்த நாடுகளாக ஆபிரிக்கா

சீனா உலக வல்லரசு நாடாக மாறுவதை அடுத்து உலகில் சக்தி வாய்ந்த நாடுகளாக ஆபிரிக்க நாடுகளும் மாறும். ஏனென்றால் மேற்கத்திய நாடுகளை விடவும் சீனா தனது பொருளாதார முதலீட்டை ஆபிரிக்காவில் செய்து வருகிறது. அது மேலும் உயர்ந்து 2025இல் ஒரு ட்ரில்லியன் டொலரையும் தாண்டிவிடும் எனவும் குறிப்பிடப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் பலவும், ஆபிரிக்க நாடுகளில் இருக்கும் சர்வாதிகாரிகளின் ஆட்சிகளுக்கு அமைய பணத்தை அளந்துதான் செலவு செய்கின்றன. ஆனால் சீனாவோ பணத்தை வாரி வழங்குவது மாத்திரமன்றி அந்தப் பணத்தை எவ்வாறு செலவு செய்கின்றனர் என்பது பற்றியும் கேள்விகள் எழுப்புவது இல்லை. இதனாலே ஆபிரிக்காவில் சீனாவின் பங்குகள் அதிகம். மேலும் ஆபிரிக்காவில் கிடைக்கும் யுரேனியம், மங்கனீசு போன்ற மூலப்பொருட்கள் சீனாவினால் பெரிதளவு கொள்வனவு செய்யப்படுகிறது. இதனால் சீனா வல்லரசாக மாறும்போது ஆபிரிக்க நாடுகளும் சக்தி வாய்ந்த நாடுகளாக மாறக்கூடும்.

 

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி

இப்பொழுதெல்லாம் அமெரிக்கா பெரிதளவு பொருளாதாரத்துடன் சர்வதேச வல்லரசு நாடாக கணிக்கப்படுவது அதன் நாணயமான  டொலரினால் என்பது எமக்குத் தெரியும். ஏனென்றால் பல்வேறு நாடுகளில் சர்வதேச நாணயமாக டொலர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்படி சர்வதேச நாணயமாக திகழும் டொலரை கீழே தள்ளிவிட்டு சீனா தனது நாணயமான யுவானை கொண்டுவர பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இவ்வாறு சீன நாணயம் மேலோங்கி விட்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் அடிவாங்கும். ஏற்றுமதி விலைகள் குறையும் இறக்குமதி விலைகள் அதிகரிக்கும். இதை கண்ணோட்டமாக கொண்டே சீனா முன்னெடுத்து செல்கிறது.

 

உலகமெங்கும் சீனாவின் கம்யூனிச கல்விமுறை

பல நாடுகளுக்கும் நிதி உதவிகளையும் கடன் வசதிகளை வழங்கும் சீனா, தனது கல்வி முறைகளையும் பிற நாடுகளைக் காட்டிலும் அதிகம் பரப்ப விரும்புகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் அதிகமான ஆபிரிக்க மாணவர்கள் சீனாவில் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக அரசியலில் ஆர்வமுள்ள மாணவர்களை குறிவைக்கும் சீனா கம்யூனிச சித்தாந்தங்களை போதிக்கின்றது. மேலும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பலநாடுகளில் கம்யூனிச கொள்கை சார் கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறது. அதில் சீன ஆசிரியர்கள் பலர் கல்வி கற்பிக்கின்றனர். அதிலும் அவர்கள் சீனாவின் அருமை பெருமைகளை பாராட்டி சொல்லிக் கொடுக்கின்றனர். கம்யூனிச கொள்கையை நியாயப்படுத்தும் வகையில் பல வேலைகளை கல்விமுறையில் எடுத்து செல்கின்றனர்.  இதன் மூலம் சீனாவின் கல்வி முறைமை உலகம் பூராவும் பல நாடுகளிலும் பரப்பப்படலாம்.

 

சீனாவிற்கு அடிபணிந்த ஜப்பான்

இரண்டாம் உலகப்போரின் காலத்திலிருந்தே ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. சீனாவின் பொது பிரசாரங்களிலும் ஜப்பான் மீதான வன்மத்தை வெளிப்படும் விதமாக அரசியல்வாதிகள் உரையாற்றுகின்றனர். போர்க் கால கட்டங்களில் ஜப்பான் செய்த அட்டூழியங்களை சீன மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான செயல்களை செய்கின்றனர். ஜப்பான் செய்த அட்டூழியங்களுக்கு பொது மன்னிப்பும் கேட்கவில்லை. இவ்வாறான இரு நாடுகளுக்கிடையிலான மோதலின் காரணமாக சீனா வல்லரசாகும் போது ஜப்பான் சவால்களை சந்திக்க நேரிடும்.

 

சீனாவுக்கு கீழ் தாய்வான்

தனி நாடாக கருதிக்கொள்ளும் தாய்வான் தம்முடன் இணையாவிட்டால் பெரிதும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பகிரங்கமாகவே தமது உரைகளில் கூறியுள்ளார். தானாகவே இணையாவிட்டால் வலுக்கட்டாயமாக இணைக்க தயார் நிலையிலுள்ளது சீனா. ஆனால் தாய்வானுக்கு அமெரிக்காவின் உதவி இருப்பதால் சீனாவினால் அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளது.

 

வல்லரசு நாடு என்ற பதவிக்கான மோதல்

சீனா தனது வளர்ச்சியை அமைதியான வளர்ச்சி என்பதாகவே கூறிவருகிறது. ஆனால் அந்த வளர்ச்சி எப்பொழுதும் அமைதியான வளர்ச்சியாக மாத்திரமே இருக்காது. ஏனென்றால் தற்போது வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா, பலவிதமான போர் சூழல்களுக்கு பிறகுதான் இப்பொழுது வல்லரசு நாடாக இருக்கிறது. அப்படி இருக்கையில் தனது வல்லரசு இடத்தை வெறுமனே விட்டுக் கொடுக்காத அமெரிக்காவிடமிருந்து பெரும் போரின் பிறகுதான் கைப்பற்ற வேண்டும். இதனை அறிந்த சீனா தனது வளர்ச்சியை தனது அதீத பலம் மிக்க இராணுவத்தின் மூலம் முயற்சித்து வருகிறது. அந்த இராணுவத்தின் முன்னாள் அமெரிக்காவே வந்து நின்றாலும் அசைக்க முடியாத அளவுக்கு வலுப்படுத்துவதாக சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.

சீனாவின் மிகப்பெரிய நோக்கமே வல்லரசு நாடு என்ற பதவியில் சீனாவை நிலைநிறுத்தி, அமெரிக்காவை அப்பதவியிலிருந்து பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வீழ்த்துவதேயாகும்.