நீங்கள் உயிருடன் இருக்கும்போது எதைச் சேகரித்தாலும் இறந்த பிறகு தனியாகத்தான் செல்லவேண்டும். நாம் செய்த பாவ புண்ணியங்கள் மாத்திரமே எம்முடன் வருமென்பது ஐதீகம். ஆனால் இந்த கட்டுரையில் அதற்கு கருத்துக்கு முரணான சில கதைகளை கூறவுள்ளோம். சவப்பெட்டியில் சில வித்தியாசமான பொருட்களை வைத்து புதைக்கப்பட்ட பிரபலங்கள் தொடர்பாகவே இன்று கூறவுள்ளோம்.
பாப் மார்லி – கிட்டார், பைபிள், மரிஜுவானா, கஞ்சா
ரெகே பாணியில் இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஜமைக்க நாட்டு பாப் மார்லியை பற்றி நாங்கள் புதிதாக சொல்லத்தேவையில்லை. ரெகே இசைக்கு கூடுதலாக, பாப் மார்லியும் உலகம் முழுவதும் ரஸ்தாபெரியனிசத்தை ஊக்குவித்தார். ரஸ்தாபெரியனிசம் என்பது கிறிஸ்தவ மதம் சார்ந்த ஒரு நம்பிக்கையாகும். பாப் மார்லி தனது 36 வயதில் புற்றுநோயால் இறந்தார். பாப் மார்லின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான நைன் மைளில் நடைபெற்றது. மார்லியின் சவப்பெட்டியில் அவர் விரும்பிய சிவப்பு கிப்சன் கிட்டார், 23-ஆம் சங்கீதத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பைபிள் மற்றும் சில மரிஜுவானா மற்றும் கஞ்சாவுடன் புதைக்கப்பட்டார்.
ஃபிராங்க் சினாட்ரா – ஜாக் டேனியல்ஸின் விஸ்கி போத்தல், சிகரெட், லைட்டர் மற்றும் சில நாணயங்கள்
பிரபல முன்னாள் அமெரிக்க பாடகரும் நடிகருமான பிராங்க் சினாட்ரா, ஜாக் டேனியல்ஸ் விஸ்கிக்கு பெரிதும் அடிமையான ஒருவராவார். அவர் இந்த விஸ்கியை மிகவும் நேசித்தது மட்டுமின்றி, அதை அவர் “கடவுளின் அமிர்தம்” என்றும் அழைத்தார். தனது இசை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முழுவதும் ஒரு துணையாக இதை வைத்திருந்ததால், தனது இறுதி பயணத்தில்கூட இந்த விஸ்கியை தன்னுடன் எடுத்துச் செல்ல மறக்கவில்லை. தனது 82 ஆவது வயதில் 1998 ஆம் ஆண்டில் அவர் காலமானார். அவரது வேண்டுகோளின் பேரில், ஜாக் டேனியல்ஸ் ரக விஸ்கி போத்தல், கேமல் வர்க்க சிகரெட் பெட்டி, ஒரு லைட்டர் மற்றும் சில நாணயங்களுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
சினாட்ராவின் ஜாக் டேனியல்ஸின் அன்பின் காணிக்கையாக, ஜாக் டேனியல்ஸ் நிறுவனம் பின்னர் ‘சினாட்ரா செலக்ட்’ என்ற விஸ்கியையும் தயாரித்தனர்.
ஜோன் எஃப். கென்னடி – திமிங்கில பல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி திமிங்கில பற்கள் மற்றும் எலும்புகளின் விசித்திரமாக ஈர்க்கப்பட்டார். இந்த பற்கள் மற்றும் எலும்புகளினாலான பல்வேறு சிற்பங்களை சேர்த்தார். இந்த விருப்பத்தை அறிந்த கென்னடியின் மனைவி, கிறிஸ்மஸில் அமெரிக்க ஜனாதிபதி சின்னத்துடன் பொறிக்கப்பட்ட 9 1/2 அங்குல நீல திமிங்கல பல் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார். 1963 இல் துரதிஷ்டவசமான படுகொலைக்குப் பிறகு, கென்னடியின் உடல் அவரது நீல திமிங்கில பற்களோடு சேர்த்து சவப்பெட்டியில் புதைக்கப்பட்டது.
ரோல் டால் – பென்சில், சொக்கலேட், வயின், அரிவாள், ஸ்னூக்கர் குச்சி
‘சார்லி எண்ட் த சொக்கலேட் பெக்டரி’ என்று சொன்னவுடன் இந்த எழுத்தாளரை நீங்கள் நினைவில் கொள்வீர்கள். ரோல் டால் குழந்தைகளின் உலகத்தை சுவாரஸ்யமாக்க பல கதைகளை வழங்கிய மிகவும் பிரியமான எழுத்தாளர்களில் ஒருவர். அந்தக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பல படங்களும் வெளிவந்தன. ரோல் டால் தனது கடைசி விருப்பமாக தன்னை அடக்கம் செய்யும்போது தனக்கு பிடித்த விடயங்களை சேர்க்குமாறு கூறியிருந்தார். அதாவது அந்த தொகுப்பு அவரது கற்பனை உலகத்தைப் போலவே விசித்திரமாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதில் ஒரு பென்சில், சொக்கலேட், ஒரு போத்தர் பர்கண்டி வயின், ஒரு இயந்திர அரிவாள் மற்றும் ஸ்னூக்கர் விளையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் சில குச்சிகள் இருந்தன.
பெல்லா லுகோசி – டிராகுலா உடை
பெல்லா லுகோசி திரைப்பட இரசிகர்களுக்கு அந்நியராக இருக்கமுடியாது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்த ஒருவர். ஏனெனில் படத்தில் டிராகுலாவின் கதாபாத்திரம் பற்றி பேசிய முதல் நடிகர் பெல்லா லுகோசி. 1931 ஆம் ஆண்டில் பிராம் ஸ்டோக்கரின் நாவலான டிராகுலா ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டபோது, டிராகுலாவின் கதாபாத்திரம் ஹங்கேரிய பெல்லா லுகோசியால் உயிர்ப்பிக்கப்பட்டது. அதுவரை சினிமாவில் பார்க்கப் பழகாத இந்த கதாபாத்திரம் பெல்லா லுகோசியின் தோற்றத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. இருப்பினும், பெல்லா லுகோசியின் டிராகுலா கதாபாத்திரத்தின் புகழ் காரணமாக, அவர் அந்த கதாபாத்திரத்திலிருந்து வெளியேறி சினிமாவில் மற்ற வேலைகளைச் செய்வது கடினமாக மாறியது. 1956 இல், தனது 73 ஆவது வயதில் பெல்லா லுகோசி காலமானார். அப்போது சிறந்த டிராகுலா கோட் உட்பட கவுண்டர் டிராகுலா ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டே சவப்பெட்டியில் வைக்கப்பட்டார்.
ஜோர்ஜ் பர்ன்ஸ் – மூன்று சுருட்டு
ஜோர்ஜ் பர்ன்ஸ் முன்னாள் அமெரிக்க நகைச்சுவை நடிகர். சினிமா, வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஜோர்ஜ் பர்ன்ஸின் புகழ்பெற்ற ஆளுமைகளில் இன்னொன்று தான் அவரது சுருட்டு. அவர் எப்போதும் அதனை தனது கையில் வைத்திருந்தார். சுருட்டுகளுக்கு பெரிதும் அடிமையாக இருந்த பர்ன்ஸ், புகைபிடிப்பதை விட்டுவிட மருத்துவ ஆலோசனையும் பெற்றார். ஆனால் பர்ன்ஸ் ஒருபோதும் இந்த பழக்கத்தை கைவிடவில்லை. இறுதியில் 100 வயதில் இறந்தார். ஜோர்ஜ் பர்ன்ஸ் தனது இறுதி பயணத்தை மேற்கொள்ளும்போதுகூட அவருக்கு பிடித்த மூன்று சுருட்டுகளை தனது கோட் பாக்கெட்டில் சுமந்து சென்றார்.
ஹாரி ஹூடினி – அம்மாவின் கடிதங்கள்
ஹாரி ஹூடினி உலகில் புகழ்பெற்ற மேஜிஷியன்களை பற்றி அதிகம் பேசப்படுபவர்களில் ஒருவர். ஹங்கேரியரான இவர், எந்த வலையில் இருந்தும் தப்பிக்கும் அற்புதமான திறனைக் கொண்டிருந்தார். ஹூடினியின் மேஜிக் ஷோக்களின் சிறப்பம்சங்களில் கைவிலங்கு, சிறைகள் மற்றும் சவப்பெட்டிகளிலிருந்து அவர் ஆச்சரியமாக தப்பித்தமை என்பன குறிப்பிடத்தக்கவை. குழந்தை பருவத்திலிருந்தே கடினமான வாழ்க்கையை வாழ்ந்த ஹூடினி, தனது தாயை மிகவும் நேசித்தார். அவர் தனது தாயை ஒரு ‘தேவதை’ என்றும் கருதிவந்தார். ஹாரி ஹூடினி தனது தாயின் மரணத்தின் வலியிலிருந்து ஒருபோதும் மீளமுடியாமல் இருந்தார். ஹூடினியின் கடைசி விருப்பத்தின்படி, அவர் தனது தாயார் அனுப்பிய கடிதங்களால் செய்யப்பட்ட தலையணையில் தலையை வைத்தபடி சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டார்.