தெரிந்தவர்களின் வீட்டிற்குச் செல்கின்றீர்களா? – இவற்றைக் கடைப்பிடியுங்கள்

 

எமக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்குச் செல்வது வழமைதானே. திடீரென்று அல்லது எதிர்பாராத விதமாக வந்த அழைப்பின் பேரில் நீங்கள் செல்லலாம். எப்படியாக இருந்தாலும், அங்கு சென்று பின்பற்ற வேண்டிய பல பழக்கவழக்கங்கள் உள்ளன. அங்கு சென்று நாம் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால், பிற்காலத்தில் இது ஒரு பெரிய பாதகமான நிலைமைகளை ஏற்படுத்தும். ஆகவே இனி நாம் வழங்கும் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள்.

 

அழைப்பை மறுக்காதீர்கள், முன்கூட்டி அறிவியுங்கள்

யாராவது உங்களை விருந்து அல்லது உணவுக்கு அழைத்தால், நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத சில காரணங்களால் நீங்கள் கலந்து கொள்ள முடியாவிட்டால், தயவுசெய்து அழைக்கப்பட்ட தரப்பினருக்கு முன்கூட்டியே தெரிவிக்கவும். அழைப்பை ஏற்றுவிட்டு செல்லாமல் இருப்பது அவர்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும். மேலும், நாங்கள் ஒரு வீட்டிற்கு அழைக்கப்படாத விருந்தாளியாக சென்றால், குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் முன்பே தெரிவிப்பது நல்லது. நீங்கள் அவர்களைப் பார்க்கச் செல்வது அவர்களுக்கு இடையூறாக இருக்குமா இல்லையா என்று கண்டறிய அவர்களுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுங்கள். அதனை விடுத்து, திடீரென சென்று கதவைத் தட்டினால் அவர்களுக்கு இடையூறாகவும் இருக்கும். மேலும், அழைக்கப்படாத பயணத்தில் அதிகமானவர்களை அழைத்துச் செல்வது நல்லதல்ல. முடிந்தவரை தனியாக செல்ல முயற்சி செய்யுங்கள்.

 

வெறுங்கையுடன் செல்லாதீர்கள்

விருந்துக்கு அல்லது சாதாரண அழைப்பின் பேரில் என எவ்வாறு சென்றாலும் வெறுங்கையுடன் செல்லாதீர்கள். அந்த குடும்பத்திற்கு ஒரு சிறிய பரிசையாவது கொண்டு செல்லுங்கள். கொடுக்கும் பரிசு அவ்வளவு பெறுமதியில்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுக்குப் பொருந்தக்கூடிய மற்றும் பயனளிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். உதாரணமாக, சீனி நோய் அல்லது கொலஸ்ட்ரோலில் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு சொக்கலேட் கேக்கை எடுத்துச் செல்வது பயனற்றது. கேக் எவ்வளவு மதிப்புமிக்க மற்றும் சுவையாக இருந்தாலும், அது அவர்களுக்கு பெரிதும் பயனளிக்காது. மேலும், நீங்கள் சிறு குழந்தைகளுடன் ஒரு வீட்டிற்குச் செல்லும்போது, ​​இனிப்புகள் மற்றும் பழம் போன்றவற்றைக் கொண்டு போவது நல்லது. அப்படியும் இல்லாவிட்டால் நீங்கள் வீட்டிற்கு வருகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க அழைக்கும் போது வீட்டிற்கு ஏதேனும் தேவையா என கேட்டு அவற்றையும் வாங்கிச் செல்லலாம்.

 

தலையிடியாக மாறிவிட வேண்டாம்

அழைப்பின் பேரில் நீங்கள் ஒரு வீட்டிற்குச் சென்றால், அவர்களின் விருந்தை சுதந்திரமாக அனுபவிக்க உங்களுக்கு தடையில்லை. ஆனால் அந்த விருந்தோம்பலை எல்லைகளைத் தாண்டாமல் அனுபவிக்கவும். உணவு நேரங்களில் ஒழுங்காக இருங்கள். உங்கள் அழைப்பாளர்களை சங்கடப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம். அன்றிரவு தங்குவதற்கு உங்களை அழைக்கவில்லை என்றால், தங்கிவிடாதீர்கள். மேலும், நீங்கள் அழைக்கப்படாமல் சென்றால், சென்ற வேலையை சுருக்கமாக முடித்துக்கொண்டு வந்துவிடுங்கள். ஒரு மணிநேரம் உட்கார்ந்துகொள்வது, தற்பெருமை காட்டுவது, சாப்பிடுவது, வீட்டில் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிடுவது போன்றவற்றை செய்ய வேண்டாம். அதுவும் அவர்களுக்கு ஒரு தொல்லையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு சாப்பிட அல்லது குடிக்கக் கொடுத்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.

 

சிறுபிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் குழந்தைகளுடன் வேறொருவரின் வீட்டிற்குச் செல்லும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும். அல்லது அது குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவும் துன்புறுத்தலும் ஏற்படுத்தும். சிறு குழந்தைகள் வீடு முழுவதும் ஓடலாம். மற்றவர்களை தொந்தரவு செய்யலாம் அல்லது வீட்டு தளபாடங்களைக்கூட சேதப்படுத்தலாம். எனவே வீட்டிற்குச் சென்று நடந்துகொள்வது எப்படி என்பதை உங்கள் குழந்தைகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள். அவர்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும். சொக்கலேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகளுடன் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம். குழந்தைகள் அறியாமல் அவற்றை தளபாடங்கள் அல்லது சுவர்களில் தேய்க்கலாம். குழந்தைகளுக்கு வீட்டில் உணவு அல்லது பானம் வழங்கப்பட்டால், அவர்கள் கவனமாக சாப்பிடுவதையும் குடிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

தேவையற்ற விடயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்

நீங்கள் அழைக்கப்படாத ஒரு விருந்துக்கு அல்லது வீட்டிற்கு சென்றாலும், வீடு மற்றும் அதன் குடியிருப்பாளர்கள் பற்றி தேவையற்ற கதைகளையும் ஆலோசனையையும் சொல்லாமல் இருப்பது நல்லது. நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை நீங்கள் விரும்பாவிட்டாலும், அந்த வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளை வெறுக்கவோ, குறை சொல்லவோ வேண்டாம். ஒருவேளை வீட்டுக்காரர் விலங்குகளைப் குழந்தைகளைப் போலவே நடத்துகிறார் என்றால் அவரது மனம் வருத்தத்திற்கு உள்ளாகும். மேலும், “இன்னும் கல்யாணம் ஆகவில்லையா?, குழந்தைகள் இல்லையா?, வேலைக்கு போகாமல் இருக்கீன்றீர்களா? போன்ற தேவையற்ற தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டு குடியிருப்பாளர்களை சங்கடப்படுத்த வேண்டாம்.

 

உதவுங்கள் – மதியுங்கள்

நாங்கள் செல்லும் சந்தர்ப்பங்களில் வீட்டார் சற்று வேலையாக இருக்கலாம். அந்த நேரத்தில், தேநீர் தயாரிக்கும் பொறுப்பை அவர்களுக்கு கொடுத்துவிடாதீர்கள்.  உங்களிடம் கேட்காமலேயே ஒருவேளை தேநீரை தந்துவிட்டால், கோப்பையை நீங்களே கழுவி வைக்க முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு அதிக வேலைகளை ஏற்படுத்திவிட வேண்டாம். நீங்கள் எவ்வளவு நட்பாக இருந்தாலும், நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பது போல் செயற்பட வேண்டாம். வீட்டின் குடியிருப்பாளர்கள் வெறுங்காலுடன் வீட்டிற்குள் இருந்தால், வீட்டின் நுழைவாயிலில் தங்கள் செருப்புகளை கழற்றி வைத்திருந்தால், நீங்களும் உங்கள் செருப்புகளை கழற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைய வேண்டும். உங்கள் கால்களை நாற்காலிகள் மற்றும் மேசைகளில் வைக்கவும், டிவியை இயக்கவும் முயற்சிக்காதீர்கள். புகைப்பிடித்து இடுக்குகளில் தட்டிவிடவோ அல்லது வெற்றிலை சாப்பிடவோ முயற்சிக்காதீர்கள்.