பண்டைய நாகரிகத்தின் தூணாக எகிப்து இருந்துள்ளது. உலகின் மிக நீளமான நதியான நைல், இந்த நாகரிகத்தின் உயிர்நாடி எனவும் விளக்கப்படுகின்றது. கிரேக்க நாகரிகம் கூட எகிப்திய நாகரிகத்தின் உத்வேகத்தினால் உருவாகியது என்று சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். வானத்தை தொடுமளவிற்கு கம்பீரமான பிரமிட்டுகள் நைல் நாகரிகத்தின் பல இரகசியங்களை இன்றும் மறைத்துக் கொண்டிருக்கின்றன. எகிப்தியர்களால் வணங்கப்பட்ட சில கடவுள்களைப் பற்றிய தகவல்களை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். இந்த கடவுள்களைப் பற்றிய சுவாரஸ்யமான கதைகள் மற்றும் எகிப்திய நாகரிகத்தைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள் உட்பட இந்த கட்டுரைக்கு நீங்கள் அளிக்கும் வரவேற்பை பொருத்தே தொடர் கட்டுரைகளை எழுதுவோம். சரி, எகிப்திய ஆலயத்தின் ஏழு பிரதான கடவுள்களைப் பற்றி இன்று அறிந்துகொள்வோம்.
ஆமுன்
ஆமுன் எகிப்திய தெய்வ மண்டலத்தின் தலைவராக இருந்தார். வேறு விதத்தில் கூறுவதானால், சியூஸுக்கு கிரேக்க தெய்வ மண்டலத்தில் கிடைத்த இடம் அல்லது இந்திய தெய்வ மண்டலத்தில் இந்திரனுக்கு கிடைத்த இடம் போல ஆமுனுக்கு கிடைத்தது. சில நேரங்களில் ஆமுன் மற்றொரு எகிப்திய கடவுளுடன் சித்தரிக்கப்படுகிறார். அவரே சூரிய கடவுள் ஆமுன்ரா. இதன் காரணமாக, ஆமூன்ரா நம்பிக்கை எகிப்தில் மிகவும் பிரபலமானது. அவரது மனைவி மூட் தேவியும் மற்றும் அவர்களின் மகன், சந்திர கடவுள் கோஹென்சுவையும் சேர்த்து மும்மூர்த்திகளாக வணங்கினர்.
அனுபிஸ்
அனுபிஸ் என்பது பலருக்கும் தெரிந்த எகிப்திய கடவுள். ஓநாய் தலையுடன் சித்தரிக்கப்படும் இந்த கடவுள் பாதாள உலகத்தின் பாதுகாவலர் தெய்வம் என்று எகிப்தியர்கள் நம்பினர். அவர் மரணத்தின் கடவுளாக இருந்தார் மற்றும் எகிப்தில் சடலங்களை மம்மியாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார் என்றும் கூறப்படுகின்றது. சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஓநாய்களின் சடலங்களை தோண்டி சாப்பிடும் திறன் காரணமாக அனுபிஸ் ஒரு ஓநாய் தலையால் குறிப்பிடப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஹொரஸ்
வானத்தின் அதிபதியாகக் கருதப்படும் ஹோரேஸ், எகிப்தியர்களால் போற்றப்பட்ட கடவுள். எகிப்திய புராணங்களின்படி, அவர் ஒசைரிஸ் மற்றும் ஐசிஸின் மகன். தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்க ஒசைரிஸின் சகோதரரான சேத்துடனான போரில் அவர் ஒரு கண்ணை இழந்தார். ஏனைய கடவுளர்கள் அந்தக் கண்ணைப் பிடிக்க முயன்றபோது எகிப்தில் மனிதர்கள் கண்ணீர் சிந்தியதில் இருந்து பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
ஒசைரிஸ்
ஒசைரிஸ் பிற்பட்ட வாழ்க்கை மற்றும் நைல் நதி வழிதல் ஆகியவற்றிற்கு பொறுப்பான கடவுளாக கருதப்பட்டார். அவரது சகோதரர் சேத்தின் மூலம் இவர் மரணித்த பின்னர், ஒசைரிஸின் மனைவி ஐசிஸ் தனது கணவரை தற்காலிகமாக உயிர்ப்பித்து ஹோரஸைப் பெற்றெடுக்க அவருடன் இணைகிறார். இறுதியில், மேலே குறிப்பிட்டுள்ளபடி ஹோரேஸ் தனது தந்தையை கொன்ற சேத்தை பழிவாங்குகிறார். நவீன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ஒசைரிஸ் சம்பந்தப்பட்ட இந்த கருத்து இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய கதையையும் பாதித்தது.
பெஸ்ட்
பெஸ்ட் என்று அழைக்கப்படும் பெஸ்டட், காவல் மற்றும் பூனைகளின் முதன்மை தெய்வமாக வணங்கப்பட்டார். புராணங்களின் படி ராவின் மகளான இவரை இவரது சிறுபராயத்திலேயே கடுமையான போட்டியாளர்களில் ஒருவரான அப்பெப்பை எதிர்த்துப் போராட அவரது தந்தை பயன்படுத்தியுள்ளார். பூனையின் தலையை வைத்து அவள் சித்தரித்ததால், எகிப்தில் பூனைகள் கடவுளாக கருதப்பட்டன. பார்வோன்களால் பாதுகாப்பு காவல் தெய்வமாக அவள் கருதப்பட்டாள்.
சேத்
சேத் எகிப்தில் பாலைவன, மின்னல், துன்பம் மற்றும் தீய திட்டங்களை ஆளும் கடவுளாக வணங்கப்பட்டார். ஆனாலும் நாம் மேலே குறிப்பிட்ட சில காரணங்களுக்காக எகிப்தியர்கள் அவரை ஒரு பொல்லாத மனிதராக வெறுத்தனர். சிவப்பு அவரது நிறமாகக் கருதப்பட்டதால், அது எகிப்தில் தீமையின் அடையாளமாக மாறியது.
ரா
ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டது போல, ஆரம்ப நாட்களில் ரா ஒரு தனி தெய்வமாக கருதப்பட்டார். அந்த நேரத்தில் அவர் சூரிய கடவுளாகவும் உலகின் அனைத்து படைப்புக்களின் படைப்பாளியாகவும் கருதப்பட்டார். அந்தக் கதைகளின்படி, அவர் பூமியைப் படைத்தார். அவர் கிழக்கில் தினமும் பிறந்து மேற்கில் இறந்து விடுகிறார். அவரது பிறப்பு மற்றும் இறப்பு எகிப்தியர்களால் காலையும் மாலையுமாக கருதப்பட்டது.