குழந்தைககள் சிறுபராயத்தில் விளையாட்டு வீடுகளில் சோறு சமைத்து சாப்பிடுவது போல விளையாடுவார்கள். இப்போதெல்லாம் காலையில் பாடசாலை சென்று வந்தவுடன் மறுகணமே ஆடையை மாற்றிக்கொண்டு மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு வீடுகளை அனுபவிக்க நேரமில்லை. அத்தகைய குழந்தை உயர்கல்விக்காக போர்டிங்கில் தங்கியிருக்கும்போது, அவர்களுக்கு சோறுகூட சமைக்கத் தெரியாமல் இருக்கும். அதனால் இன்று நாம் உங்களுக்குச் சொல்லப் போவது, 20 வயதிற்குள் எந்தவொரு பெண்ணோ அல்லது பையனோ எளிமையான முறையில் சமைக்கவும் உணவை தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறான இலகுவான தயாரிப்பு முறைகளை இன்று நாம் உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம்.
சோறு
ரைஸ் குக்கர் இருந்தால் சோறு சமைப்பது மிகவும் இலகுவாகும். ஆனால் எந்த நாளும் அதையே நம்பியிருக்க முடியாதல்லவா? இப்போது மின்சாரம் இல்லாதபோது அடுப்பில் சமைக்க வேண்டும். அடுப்பில் சோறு சமைப்பது எளிதான வேலைதான். ஆனால் அடுப்பில் சோற்றை வைத்து விட்டு கடைக்குச் சென்று வந்தால் சோற்றிற்கு பதில் கஞ்சிதான் கிடைக்கும்.
- அரிசியை மூன்று அல்லது நான்கு முறை கழுவ வேண்டும்.
- கழுவப்பட்ட அரிசிக்கு 1 1/2 அளவு நீர் சேர்க்கவும். அதாவது நீங்கள் ஒரு கோப்பையில் இருந்து அரிசியை எடுத்துக் கொண்டால், அந்த கோப்பையின் அளவில் ஒன்றரை கப் நீரை சேர்க்கவும்.
- இப்போது வெப்பத்தை அதிகரித்து அடுப்பில் வைக்கவும். அரிசி கொதிக்கும்போது, வெப்பத்தை நடுத்தர அளவிற்குக் குறைக்கவும். கொதிநிலை குறைவாக இருக்கும்போது, மூடியைத் திறந்து பார்க்கவும். குமிழ் குமிழாக வந்து போதுமான நீர் வற்றி இருந்தால், அடுப்பைக் குறைத்து விடவும். அவ்வளவுதான், சோறு தயார்.
பேஃவரிட் பருப்பு
நாம் எதையாவது அல்லது நாம் விரும்பும் ஒருவரை இழக்கும்போது, ’பருப்பு இல்லாத ஹோட்டல் போல’ என்று சொல்வது வழக்கம். அதாவது பெரும்பான்மையான மக்கள் பருப்புக் கறியை விரும்புகிறார்கள். ஆனால் பருப்பு சாப்பிட்டு சாப்பிட்டு வெறுத்து போன ஒரு கூட்டமும் இருக்கிறது. இருப்பினும், 20 வயதாகி இருக்கும் போது, நீங்கள் பருப்புக் கறியை சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
- பருப்பு – 50 கிராம்
- கறி தூள் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
- இடித்த மிளகாய் – சிறிதளவு
- கடுகு – அரை தேக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
- வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், ரம்பை, கறிவேப்பிலை
- தேங்காய் பால் (கட்டாயமில்லை)
- எண்ணெய் – சிறிதளவு
- முதலில், பருப்பை நன்கு கழுவ வேண்டும். பால் போல வெள்ளை நிறத்தில் நீர் இல்லாத வரை கழுவவும். கழுவப்பட்ட பருப்பிற்கு ஒரு கப் நீர் சேர்த்து மஞ்சள், மிளகாய் மற்றும் கறி தூள் சேர்த்து ஒரு கொதிக்க விடவும்.
- சமைத்ததும், அடுப்பில் இருந்து பருப்பை எடுத்து, அதே அடுப்பில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடாகும்போது, கடுகு சேர்த்து கடுகை வெடிக்க விடவும். பின்னர் வெங்காயம், மிளகாய், பூண்டு, ரம்பை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். (ரம்பை, கறிவேப்பிலை இருந்தால் சேர்க்கவும் இல்லாவிட்டால் பரவாயில்லை)
- வெங்காயம் பொன்னிறமாகவும் தாளித்தும் வரும்போது இடித்த மிளகாய், உப்பு சேர்த்து கிளறவும். குழம்புக்கு சிறிது பால் அல்லது நீர் சேர்த்து, வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறி, கொதிக்க விடவும்.
கருவாடு/ நெத்தலி வறுவல்
போர்டிங் வாழ்க்கையில் கருவாடு அல்லது நெத்தலி என்பது எளிதான, மலிவான மற்றும் சத்தான உணவாகும். இறைச்சி மற்றும் மீன் வாங்கி வைக்க குளிர்சாதன பெட்டி இல்லையே, அதனால் இவை இலகுவானதாகும். மேலும், சோறும் பருப்பையும் செய்து அத்தோடு எண்ணெய் போட்ட நெத்தலி சாப்பிட்டால் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- தலையை அகற்றிய நெத்தலி
- ஒன்று அல்லது இரண்டு நறுக்கிய வெங்காயம்
- பூண்டு, ரம்பை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய்
- சுவைக்கேற்ப இடித்த மிளகாய் தூள்
- மஞ்சள் – சிறிதளவு
- உப்பு
- புளிச்சாறு அல்லது எழுமிச்சை சாறு
- எண்ணெய்
- நெத்தலியை சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்னர் நன்றாக கழுவவும். நீரை வடிக்க வைத்து விட்டு, வெங்காயம் தவிர மற்றைய எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவும். எழுமிச்சை சாறு ஊற்ற வேண்டாம்.
- வேறாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், அதில் வடித்த நெத்தலியை சேர்க்கவும். சிறிது அதை கிளறிக் கொண்டே வெங்காய கலவையை அதில் சேர்க்கவும். வெங்காயம் சற்று பழுப்பு நிறமாக மாறும்போது, அடுப்பை குறைத்து சிறிது எழுமிச்சை சாறு சேர்க்கவும்.
- கறுவாடும் இதேபோலவே செய்ய வேண்டும். ஆனால் வருவலுக்கு உப்பு போடும் போது உப்பின் அளவு குறித்து கவனமாக இருங்கள். காரணம், கறுவாட்டில் ஏற்கனவே உப்பு உள்ளது.
எப்பொழுதும் உதவும் தேங்காய் சம்பல்
தேவையான பொருட்கள்
- அரைத்த தேங்காய் – ஒரு கப்
- வெங்காயம் – 4 அல்லது 5
- இடித்த மிளகாய் தூள் – சுவைக்கேற்ப
- உப்பு
- எழுமிச்சை சாறு
- வெங்காயம், இடித்த மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு உரலில் போட்டு அரைக்கவும். வெங்காயத்தை நறுக்கிய பின் சிறிது எழுமிச்சை சாறு சேர்க்கவும்.
தேங்காய் ரொட்டி
காலையிலும் மாலையிலும் செய்ய எளிதான உணவுகளில் ஒன்று ரொட்டி. அதில் சிறிது தேங்காய் போட்டும் பட்டர் தடவியும் சாப்பிட்டால், ஆஹா சுவை அலாதியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் – 1 1/2 கப்
- கோதுமை மா – 2 கப்
- சுவைக்கேற்ப உப்பு
- வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் மற்றும் விரும்பினால் சில பச்சைமிளகாய்
- தேங்காயில் உப்பு, வெண்ணெய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். சிறிது மா சேர்த்து பிசைந்து நீர் சேர்த்து ஒட்டாத கலவையை செய்து வைக்கவும்.
- பிறகு அதை உருண்டை போல செய்து தட்டி பிறகு சுட்டு எடுக்கவும்.
தேநீர்
தேவையான பொருட்கள்
- கொதிக்கும் நீர் – 200 மில்லி
- பால்மா – ஒரு மேசைக்கரண்டி
- தேயிலைத்தூள் – ஒரு தேக்கரண்டி
- சர்க்கரை (சுவைக்கு ஏற்ப) – 2 தேக்கரண்டி
- தேயிலைத் தூளை கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் மூடி வைக்கவும். இதற்கிடையில் பால்மா மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலக்கவும்.
- வேகவைத்த தேநீரை மாவில் ஊற்றி வடிகட்டி, சர்க்கரை கரையும் வரை கலக்கவும். மீண்டும் வடிகட்டவும்.