படித்துக்கொண்டே பணம் சம்பாதிப்பதற்கான வழிகள்

 

படிக்கும் போதே பணம் சம்பாதிப்பதானது, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பணம் சம்பாதிப்பதல்ல. கற்றல் மற்றும் பணம் சம்பாதிப்பது ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து செய்து கொண்டு செல்லலாம். 13 ஆண்டுகளாக பாடசாலை படிப்புக்கு பணம் செலுத்தி பின்னர் பல்கலைக்கழக படிப்பிற்கும் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது நல்லதல்ல. ஏனெனில் பல்கலைகழக படிப்பு என்பது பாடசாலைப்படிப்பை போல செலவு குறைந்ததல்ல. உணவு,  உடைகள் மற்றும் நண்பர்களுடன் அவ்வப்போது செல்லும் பயணம் போன்றவற்றிக்கு பெரும் செலவுகள் ஏற்படும். அப்படியிருந்தும், ஒரு வருமானம் இருந்தால் அவற்றை சரியாக பேணிக்கொள்ள முடியும்.

பெரும் புகழ்பெற்ற மற்றும் செல்வந்தர்களின் வாழ்க்கைக் கதைகளை படிக்கும்போது, அவர்கள் பல்கலைக்கழக படிப்பின்போதே தொழில் அல்லது சில வருமான வழிகளின் மூலம் இத்தகைய இடத்திற்கு வந்துள்ளனரென தெரிந்து கொள்ளலாம். எனவே, தங்கள் குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் தற்போதைய செலவுகளுக்காவது சம்பாதித்து வாழ விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிற கல்விகளை கற்பவர்களுக்கு எமது சிறிய ஆலோசனை வருமாறு.

 

புதிய விடயங்களை தெரிந்து கொள்ளலாமே!

நாம் செய்யக்கூடிய, செய்ய விரும்பும் விடயங்களை கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்க அல்லது எதனை செய்ய வேண்டுமானாலும் அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. எனவே பல்கலைக்கழக படிப்போடு சேர்த்து செய்யக்கூடிய வருமானம் ஈட்டித்தரும் வேலைகளைப் பற்றி நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. மேலதிக வகுப்புகள், புகைப்படம் எடுத்தல், விருந்தக அலங்காரங்கள், டேட்டா என்ட்ரி போன்றவை அவற்றில் சிலவாகும். எனவே அவற்றை பற்றி பின்னர் ஒரு தனி கட்டுரையில் பேசுவோம். இவற்றை செய்ய அடிப்படை அறிவு தேவை. ஆனால் அந்த அறிவைப் பெறுவது முன்னரைப்போல கடினமல்ல. ஏனென்றால் யூடியூப் மற்றும் பின்டரெஸ்ட் போன்றவற்றின் மூலமும் இலகுவாக கற்றுக்கொள்ளலாம். மன உறுதி மற்றும் ஆர்வம் மட்டுமே முக்கியம்.

 

பயப்படக்கூடாது !

புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும்போது அது சரியாக வருமா வராதா என்ற பயம் பலருக்கு இருக்கும். இது ஒரு பொதுவான வியாதி. இந்த பயத்தை முழுமையாக அகற்ற வேண்டும். அப்படி இல்லாமல் பயத்தோடு தொடங்களினால் இறுதியில் நஷ்டத்தோடுதான் வீதிக்கு வரவேண்டும். நீங்கள் சரியாக தொடங்க வேண்டும் என்று நினைவுக்கு வரும்போது வரக்கூடிய எந்த நல்ல யோசனைகளையும் செயற்படுத்த தயங்க வேண்டாம். முதலாவது படியை எடுத்து வைப்பதுதான் கடினம். ஆனால் அதனை எட்டி வைத்துவிட்டால் அடுத்தவை எல்லாம் இலகுவாக கடந்து விடலாம்.

 

தரமான விற்பனையாளராக மாற முயற்சிக்கவும்!

நீங்கள் செய்யும் எதையும், எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் விற்க ஒரு நல்ல விற்பனையாளராக நீங்கள் இருக்க வேண்டும். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஒரு நல்ல மார்க்கெட்டராக இருக்க வேண்டும். அதுவும் இந்த நாட்களில் சமூக ஊடகங்களின் மூலம் இது ஒரு இலகுவான விடயம் தான். உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை விற்க பயப்பட வேண்டாம். உங்கள் தயாரிப்பு அல்லது சேவையில் வாடிக்கையாளர் திருப்தி அடைந்தால், அவர்கள் நிச்சயமாக மீண்டும் உங்களிடம் வருவார்கள். அத்தோடு மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பார்கள்.

 

ஆரம்பித்தவுடனே பிரபலமாக வேண்டியதில்லை

எந்தவொரு வேலையின் ஆரம்பத்திலும் அவற்றின் சர்வதேச தரம் மற்றும் விரைவான முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்தில் நிறைய தவறுகள் இருக்கலாம். விமர்சனங்களை கேட்பதும், மனக்கசப்பை பொறுத்துக்கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும். ஆனால் இவை அனைத்தும் ஏற்படும் என முன்கூட்டியே எதிர்பார்க்க வேண்டும். காலப்போக்கில் எந்தவொரு வேலையையும் செய்யும்போதுதான், சிறப்பாகசெய்யக்கூடிய அளவிற்கு நம் திறன்கள் உருவாகின்றன. எனவே ஆரம்பத்தில் நீங்கள் தவறு செய்தால் சோர்வடைய வேண்டாம். தவறுகளுடன் முன்னேற உங்கள் மனதை தயார்படுத்துங்கள்.

 

தடைகளை எதிர்பார்க்க வேண்டும்

தான் ஆரம்பிக்கும் வேலையிலிருந்தும் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தும் வரக்கூடிய தடைகள் உள்ளன. உதாரணமாக, கொரோனா காலத்தில் பலர் தமது தொழிலை தொடர்ச்சியாக நடத்த முடியவில்லை. அவற்றைக் கண்டு சோர்வடைய வேண்டாம். எந்த வேலையும் பாதிக்கப்படலாம். ஒரு நதிகூட பாறைகளில் அடிபட்டு செல்லும்போதுதான் அழகாக இருக்குமென கூறுவார்கள். அதேபோல தான் தொழிலும் என்பதை நாம் அறிய வேண்டும். அதனால் செய்யவிருக்கும் வேலையைத் தொடங்குவதற்கு முன், வரக்கூடிய சில சிக்கல்களைப் பற்றி முன்கூட்டியே சிந்தித்து வைத்திருங்கள். அவற்றிற்கான சிறிய தீர்வுகளையும் மனதில் கொள்ளுங்கள்.

 

பெரிய முதலீடுகள் வேண்டாம்!

இந்த நாட்களில் அதிக முதலீட்டுடன் தொடங்குவது விவேகமற்றது. வணிகம் மற்றும் சந்தை பற்றி உங்களுக்கு குறைந்த அறிவு மாத்திரமே இருப்பதால், நீங்கள் ஏமாற்றப்படுவதற்கும் தவறுகளைச் செய்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.  உங்களிடம் சொந்தமாக பணம் இல்லாத சந்தர்ப்பத்தில், எதற்காக பாரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்?  சிறியதாகத் தொடங்குங்கள். சிறிது சிறிதாக முன்னேறும்போது அதிலிருந்து பெற்றுக்கொள்ளும் அனுபவமும் முக்கியமானது.

 

நேர முகாமைத்துவம்

அடுத்த பெரிய விடயம் என்னவென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக நேரத்தை நிர்வகிக்க தெரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் பல்கலைக்கழக வாழ்க்கை என்பது ஒருபோதும் மீண்டும் வாழ்க்கையில் வராத ஒரு அழகான நேரம். அந்த நேரத்தில் செய்ய வேண்டிய பாடங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். அவற்றில் பெரும்பாலானவற்றை செய்யுங்கள். ஏனென்றால் பல்கலைக்கழக வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம். உங்கள் நண்பர்களுடனான உங்கள் உறவை சமப்படுத்த வேண்டும். நண்பர்களுடன் சரியாக பழகாவிட்டால் அந்த வாய்ப்புகள் மீண்டும் வாழ்க்கையில் வராது. நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால் அது உங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில்கூட செய்யலாம். ஆனால் மேற்கூறியவை அப்படியல்ல. அதனால் நேரத்தை சரியாக நிர்வகித்து செயற்படுங்கள்.