சண்டை ஏற்பட்டால் இந்த வார்த்தைகளை கூறாதீர்கள்

 

திருமணமான தம்பதி அல்லது திருமணமாகவிருப்போர் அல்லது காதலர்கள் என யாராக இருந்தாலும் எந்தேரமும் பாசத்துடன் இருப்பதில்லை. ஒருசில நேரங்களில் இருவருக்குமிடையில் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு சண்டையிட்டுக்கொள்வதும் உண்டு. வெறுமனே அன்பு மாத்திரம் காணப்பட்டால் சலித்துப்போய்விடும் அல்லவா? இடைக்கிடையே அன்போடு கலந்த சிறிது குறும்புத்தனமான சண்டைகளும் இருக்கத்தான் வேண்டும். சண்டை வரும்போது எந்நேரமும் ஒரேமாதிரியாக இருக்காது. சில நேரங்களில் வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் காரசாரமாக இருக்கும். அப்படி வார்த்தைகளை விடும்போது, அதுவும் ஒரு தம்பதியினராக இருக்கும்போது வார்த்தைகளையும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள வேண்டும். சில காரசாரமான வார்த்தைகள் விவாகரத்து வரை சென்ற சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே சண்டையிடும்போது யாருடைய மனதையும் புண்படுத்திவிடாதீர்கள்.

 

திருமணத்தை விமர்சித்தல்

“உன்னை திருமணம் செய்தது நான் செய்த தவறு” என்ற வார்த்தைப்பிரயோகம் பல சண்டைகளில் ஒலிக்கும். அதாவது நீயில்லாவிட்டால் வேறு ஒரு பெண்ணையோ ஆணையோ திருமணம் முடித்து நன்றாக இருந்திருக்கலாம் என்பதை கூறாமல் கூறும் வார்த்தை இது. சண்டையின் உக்கிரத்தில் இந்த வார்த்தையை கூறியபோதும், இதன் தாக்கத்தைப் பற்றி உணர்ந்துகொள்வதில்லை. அழகான வாழ்க்கையில் இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிப்பது, யாராக இருந்தாலும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். விவாகரத்து வரை இவ்வாறான வார்த்தைகள் கொண்டுசென்றுவிடும். மேலும் காதலர்களுக்கு இடையிலம் இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் தவறானதாகவே கருதப்படுகின்றது. அதாவது உன்னை காதலித்தது தவறு என்ற வார்த்தையை பயன்படுத்தினால், அந்த காதலில் விரைிசலும் ஏற்படும்.

 

பணத்தில் பாகுபாடு

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சண்டையின்போது பணத்தைப் பற்றிய விடயங்களும் வெளிவருகின்ற. சில சமயங்களில் பெண்கள், தாம் கொண்டுவந்த வரதட்சணையை சுட்டிக்காட்டுவார்கள். இதெல்லாம் எனது பணத்தில் வந்தவை என கூறுவார்கள். ஆண்களும் தாம் சம்பாதித்து வாங்கிய விடயங்களை சொல்லிக்காட்டுவார்கள். சில நேரங்களில் பெண்கள், தனது வேலையிலிருந்து கிடைக்கும் சம்பளத்தின் காரணமாக இதைச் சொல்கிறார்கள். சில நேரங்களில் ஆண்கள் தன் மனைவிக்கு வாங்கிக்கொடுத்த ஆடைகளுக்கு பணம் செலவழித்ததை சொல்லிக் காட்டுகிறார்கள். நீங்கள் அதை எந்த அடிப்படியில் சொன்னாலும் அது அநாகரிகமானது. இவ்வாறான விடயங்கள் உங்களது குடும்ப வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கை பாதுகாப்பற்று காணப்படுகின்றது என்பதே அர்த்தமாகும்.

 

சாபமிடும் வார்த்தைகள்

 

காதல் பெருக்கெடுத்து இருக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களில் “செத்துப்போ, நான் உன்னை கொல்லுவேன்” என்றெல்லாம் கூறுவோம். ஆனால் சண்டையிட்டு இருவருக்கிடையில் வாக்குவாதங்கள் நடக்கும்போது இதுபோன்ற சொற்களை கூறுவது முற்றிலும் மாறுபட்ட சிந்தனையை தரக்கூடும். இந்த சொற்களின் தீவிரத்தன்மை, ​​அதிகபட்ச வெறுப்பை ஒருவர் நம் மீது வெளிப்படுத்துகிறார் என்று அர்த்தப்படும். அதனால்தான் நீங்கள் ஒருவரோடு எவ்வளவு கோபமாக இருந்தாலும் இதுபோன்ற வார்த்தைகளை சொல்வது நல்லதல்ல. அவர்களுக்கு அது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி தவறான முடிவுகளை எடுத்தால் பின்னர் கவலைப்பட்டு பிரயோசனமில்லை.

 

உன்னைக் கண்டால் எரிச்சல்!

இதுபோன்ற வார்த்தைகள் மிகவும் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். “என் முகத்தை பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது அல்லது எனது கண் முன் வராதே!” என்றெல்லாம் கூறுவது மிகவும் பாரதூரமான வார்த்தைகள். இதுபோன்ற கடுமையான வார்த்தைகள் இதயத்தில் குத்தப்படும் முள் போல கடுமையாக வலிக்கும். அது மட்டுமல்லாமல், அதுபோன்ற வார்த்தையை நாம் கேட்கும்போது, ​​மற்றவர் எம்மீது வெறுப்பையும் பகைமையையும் கொண்டிருப்பதை உணர முடியும். அப்படியானால் இதுபோன்ற சொற்களை கூறிவிட்டு மீண்டும் உங்கள் காதல் வாழ்க்கையை நீண்ட காலம் கொண்டு செல்ல முடியுமா?

 

இதெல்லாம் உன்னால் வந்த வினை !

இவ்வுலகில் யாருமே நூற்றிற்கு 100 வீதம் சரியானவர்கள் அல்லர். இன்றைய துரித உலகில் ஒருசில தவறுகள் ஏற்படலாம். ஆனால் நாம் செய்யும் அனைத்தும் தவறு என்று அர்த்தமல்ல. எல்லா கஷ்டங்களையும் தவறுகளையும், குறிப்பாக காதல் உறவு அல்லது திருமண வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மீதே திணிப்பது சரியானதல்ல. அதேபோல சிலர் தமது தவறை மற்றவர்களின் தலையில் சாட்டிவிட எண்ணுவார்கள். இதுபோல ஒருவரை ஒருவர் சாட்டிவிட்டுக் கொண்டு மற்றவர் தப்பித்து நல்லவனாக வாழ முயல்வது நல்லதும் அல்ல. அத்தோடு உங்கள் உறவும் நீண்ட காலம் நீடிப்பதை எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக சண்டைகளின் போது ஒருவர் மீது மற்றவர் உறுதுணையாக இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் குறைகூறுவதை தவிர்த்துவிட வேண்டும்.

 

ஒரு வேலையை உருப்படியாக செய்ய முடியாது!

இது போன்ற வார்த்தைகள் பெரும்பாலும் ஒரு ஆண் ஏதாவது தவறிழைத்துவிட்டால் சொல்லப்படுகிறது. ஆனால் அதை அடிக்கடி சொல்வது மிகவும் அவமானப்படுத்துவதாக அமைகின்றது. ஒரு ஆணின் மனதில் தன்னம்பிக்கையை குன்றச்செய்கிறது. மேலும் தன்னால் ஒரு காரியத்தை சரியாக செய்யமுடியாதா  என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. மனைவியையும் இவ்வாறு சில கணவன்மார் கூறுவது வழமை. இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதே சிறந்தது.

 

உனக்கு மனநோயா?

இதுவரை கூறிய வார்த்தைகளில் இதுவே மிகவும் பாரதூரமானதாகும். ஏனென்றால் நாம் அனைவரும் சாதாரணமாக எப்போதும் இருப்பதில்லை. எப்போதும் நல்ல மனநிலையில் மாத்திரமே இருப்பதும் இல்லை. மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை எளிதாக நமக்கு உருவாகலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஏற்படும் சண்டைகளில் இது போன்ற ஒரு வார்த்தையை உபயோகிப்பது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவரை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.